Header Ads



மலேசிய விமானம் மறைந்த மாயம் என்ன..?


ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவு கடல் கடந்துபோய் தாக்கும் ஏவுகணைகளையும் அவற்றை திசை மாறாமல் கணினி மூலமாகவே செலுத்தும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கத் தெரிந்திருந்தாலும், மாறிமாறி செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி புவியாட்சி நடத்தினாலும், ஒரு விமானம் "திடீரென்று காணாமல்போனது' என்று மனித இனம் தலைகுனிந்து சொல்லும் நிலைமைதான் உள்ளது.

தற்போது தரையிறங்காத, விண்ணில் மறைந்த, மலேசிய ஏர்லைன்ஸின் போயிங் 777 விமானத்தில் பயணித்த 239 உயிர்களுக்கு என்னவாயிற்று என்ற தவிப்பு, பதில் கிடைக்காத பல கேள்விகளை முன்வைக்கின்றன. என்னதான் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், புதுப்புது பலவீனங்கள் வெளிப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்குக்குக் கிளம்பிய விமானம், பறக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்தில், மலேசியாவுக்கும் வியத்நாமுக்கும் இடையில் தென் சீனக் கடலின்மீது பறக்கும்போது மாயமாய் மறைந்து விட்டிருக்கிறது. ராடாரிலிருந்து திடீரென்று காணாமல் போய்விட்டது. எங்கே போயிற்று, என்னவாயிற்று என்கிற மர்மம் இப்போதுவரை நீடிக்கிறது. நான்கு நாள் முன்பு விமானம் மாயமாய் மறைந்தபோது, தட்பவெப்ப நிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. வானம் தெளிவாகவே இருந்திருக்கிறது. விமான ஓட்டிகளிடமிருந்து எச்சரிக்கைச் செய்தியோ, உதவி கேட்டு தகவலோ வரவில்லை.

எப்போதோ திருடுபோன இரண்டு கடவுச்சிட்டைகளைப் பயன்படுத்தி இரண்டு பேர் பயணம் செய்திருப்பதால், இந்த இருவரும் தீவிரவாதிகளாக இருந்து, விமானத்தை வெடிக்க வைத்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், அதற்கு வலுவான சாட்சியங்கள் இல்லை.

செயற்கைக்கோள் மூலமாக எல்லா நாடுகளின் மீதும் தனது ரகசிய கண்காணிப்பை நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவினாலும் இந்த விமானம் குறித்த எந்தத் தகவலையும் தெரிவிக்க முடியவில்லை. வான் பரப்பில் விமானம் ஒன்று வெடித்ததற்கான சான்றுகள் ஏதும் அவர்களது செயற்கைக்கோள் கேமரா காட்சிப் பதிவுகளில் இல்லை.

35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமான வடிவமைப்பு கோளாறு காரணமாக பிய்த்துக் கொண்டு போயிருக்கலாம் என்று சொல்லப்படும் வாதங்கள், வானூர்தி தொழில்நுட்பத்தையே கேலிக்கு உள்ளாக்குகின்றன. விமானம் பயணிக்கும்போது இயல்பான வானிலை நிலவியதால் இவ்வாறான சம்பவங்கள் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் சொல்கிறார்கள். இருப்பினும், போயிங் 787 டிரீம்லைனர் விமான இறக்கையில் மயிரிழை விரிசல்கள் இருந்ததால் உற்பத்தி தாமதமானதை ஒப்புக்கொண்ட தருணங்களை நினைக்கும்போது, இப்படியாக பிய்த்துக் கொண்டு போகவும் சாத்தியமிருப்பதை மறுப்பதற்கில்லை.

கடலில் இரண்டு தடங்களில் நீண்டு ஓடும் எண்ணெய்க் கசிவும், தற்போது வியத்நாம் விமானப்படையால் கண்டறியப்பட்டுள்ள, போயிங் 777 விமானத்துக்குரியதாக இருக்கலாம் என்று கருதப்படுகின்ற ஒரு கதவும், இந்த விமானம் கடலுள் விழுந்திருக்கலாம் என்ற அச்சத்தையே நிறுவுகின்றன. இருப்பினும்கூட, இதை உறுதிப்படுத்தும் சான்று ஒன்றுகூட இல்லை.

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இது கெளரவப் பிரச்னை. தென்கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துமே விமானம் மாயமாய் மறைந்ததன் பின்னணியைக் கண்டறிய முழு ஒத்துழைப்பும் கொடுக்கின்றன. விமானம் வெடித்துச் சிதறியதா, தயாரிப்பு கோளாறு காரணமாக விண்வெளியில் பறக்கும்போது பிய்த்துக் கொண்டதா, இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் விழுந்து சிதறியதா என்பதையெல்லாம் விமானத்தின் பாகங்கள் கிடைத்தால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். புதிர் அவிழ்ந்தால்தான் விமானத் தயாரிப்பாளர்களும், விமான நிறுவனங்களும் அதிலிருந்து பாடம் கற்க முடியும். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நேராமல் பாதுகாக்க முடியும்.

உலகம் முழுவதும் தற்போது விமான சேவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டிருக்க, இத்தகைய நேர்வுகள் மீண்டும் நிகழாதபடி அறிவியலை நாட வேண்டும். ஒரு விமானம் புவியின் மேலும், கடலின் ஆழத்திலும் எந்தப் பகுதியில் இருந்தாலும், எந்தச் சூழலிலும் கண்காணிப்பு வளையத்தினுள் இருக்கும் வகையில் அறிவியல் தொழில்நுட்பம் மேம்பட வேண்டும்.

2009இல் ஏர்பிரான்ஸ் 447 விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோதே காணாமல் போய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பயணிகளின் எலும்புக்கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விபத்துக்கான காரணம் தெரியவர மேலும் இரண்டு ஆண்டுகள் ஆனது. அதனால், இந்த விபத்திலாவது, விமானம் விரைவில் கண்டுபிடிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதில் வியப்பில்லை.

No comments

Powered by Blogger.