சகல அரச பாடசாலைகளிலும் விரைவில் ''ஒழுக்கவிழுமிய அபிவிருத்திச் சங்கங்கள்''
(எம.எம்.ஏ ஸமட்)
சகல அரச பாடசாலைகளிலும் ஒழுக்கவிழுமிய அபிவிருத்திச் சங்கங்கள் விரைவில் உருவாக்கப்படவுள்ளன.
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சகல மாகாணக் கல்விப் பணிப்பாளர்களையும் பணித்துள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்ததாவது,
சமூக விரோத சக்திகளினால் பாடசாலை மாணவர்கள் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தபட்டு வருகின்றனர். அத்துடன் ஒழுக்க விழுமியங்களை மீறும் செயற்பாடுகளிலும் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
களவுச் சம்வங்கள், போதைவஸ்துப் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், கொலைச் சம்வம், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற சமூக விரோதச் சம்பவங்களில் மாணவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
மாணவர்களை இவற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இச்சங்கங்கள் செயற்படுத்தப்படவுள்ளன. ஒழுக்கவிழுமிய அபிவிருத்திச் சங்கத்தில் பாடசாலையின் பிரதி அதிபர், சிரேஷ்ட ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள், பழைய மாணவர்கள், மதத் தலைவர்கள் பாடசாலை அமைந்துள்ள அப்பிரதேசத்துக்குரிய பிரதேச செயலாளர் ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிப்பர்.
இவ்வொழுக்கவிழுமிய அபிவிருத்திக் குழு விரைவில் நாட்டிலுள்ள ஏறக்குறைய 9800 பாடசாலைகளிலும் உருவாக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பாகப் பாடசாலை அதிபர்களை அறிவுறுத்தும் நடவடிக்கைககள் மாகாண மட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும் அவ்வதிகாரி மேலும்; குறிப்பிட்டார்.

Post a Comment