சவூதி அரேபியாவில் 8 மாதங்களுக்கு முன் இறந்தவரின் சடலத்தை பெற்றுத்தரும்படி கோரிக்கை
சவூதி அரேபியாவில் இறந்த பெண்மணியின் உடல் 8 மாத காலமாகியும் இலங்கைக்கு வரவில்லை. உரிய நடவடிக்கை எடுத்து சடலத்தை தந்துதவுமாறு உறவினர்கள் வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்முனை, நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான கணபதிப்பிள்ளை ரமணி என்ற குடும்பப் பெண் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.
இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி சுகயீனம் காரணமாக இறந்துள்ளதாக ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அவரின் வீட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தினத்திலேயே அவரின் அப்பாவும் இறந்துள்ளார்.
துக்கத்தில் இருக்கும் போது மற்றும் ஒரு துக்கச் செய்தியும் அவர்களின் வீட்டிற்கு கிடைத்துள்ளது. என்ன செய்வது அறியாது கடந்த வாரம் கதைத்த மனைவி எவ்வாறு சுகயீனம் காரணமாக இறந்திருப்பார் என சந்தேகம் கொண்ட உறவினர்கள் உடன் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு உடலை இலங்கைக்கு அனுப்புமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றிற்கு கணவர் காத்தமுத்து வேதானந்தம் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் அவர் இருதய நோய் காரணமாக இறந்துள்ளதாக கடந்த 2014 ஜனவரி 20 ஆம் திகதி மருத்துவ அறிக்கையின் பிரதிகளை வெளிநாட்டு அமைச்சு கணவருக்கு அனுப்பியுள்ளது.
அதன் பின்னர் உடலை உடனடியாக இலங்கைக்கு கொண்டுவந்து தருமாறு கேட்டு சம்மதக் கடிதத்தினை அமைச்சுக்கு கணவர் கையளித்தார். ஆனால் இதுவரை உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை. மரணித்து சுமார் 8 மாத காலமாகியும் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படாதுள்ளது.
இதனால் அவரின் குடும்பத்தினர் செய்வதறியாது உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் நிலைமையினை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட பெண்ணின் உடலை உடனடியாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து தருமாறு உரிய அரச அதிகாரிகளிடம் பகிரங்க வேண்டுதலை மரணித்த பெண்மணியின் மகள் வே. கேமலதா விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் காரைதீவு அபிவிருத்தி ஸ்தாபனத்திடம் உறவினர்கள் முறையீடு செய்துள்ளதுடன், சடலத்தினை உறவினர்களிடம் கையளிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment