Header Ads



களவுகொடுக்கப்பட்ட வாழ்க்கை..!


- இனியவன் இஸாறுதீன் -

'புலியின் பருந்தின் வேட்டையிலிருந்தெல்லாம்
என் சிறகுகளுக்குள் உன்னைக் காப்பேன்' 
என்ற உன் பிரசாரத்தில் எப்போது நானுணர்ந்தேன்
எனக்கான மானுடநேயத்தை?

ஒவ்வொரு சந்தியிலும் ஞானம் பெறும்
போதிமர புத்தரின் 
புன்னகை சந்நிதானத்தில் அமைதிப்பறாவை 
அந்தரங்கத்தில் சிதிலமாக்கினாயே 
அப்போதா?

ஏனக்குப் புரியாத
உன் மர்மமொழியில் 
எனக்கெதிராய் 
மரண சாசனம் எழுதினாயே
அப்போதா?

இரு கரங்களால் அணைத்துக் கொஞ்சும்;
ஒரு செல்லப்பிராணியின்  பாவனையில்
காலம் கடத்தினும்
தன் குட்டிகளைக் தானே கொன்று தின்ற
கடுவன்பூனையில்
உன் சுயரூபம் காண்போமே 
அப்போதா?

எனது புனித ஆன்மாவை அர்ப்பணிக்கும் புகலிடங்களை  
ஆட்சி செய்யும் இஸ்ரேலியன்போல்
இலங்கையனின் இதயத்தில்;
ஆதிபத்தியம் செய்தாயே 
அப்போதா?

என் மக்கள் வாழ்க்கையை
எல்லா திசைகளிலும் எல்லா வகையிலும்
கொஞ்சம் கொஞ்சமாய் 
நீ கொள்ளையடித்தாயே 
அப்போதா?

எனது மக்களின் அவலத்தை
ஆன்மாவின் ரத்தத்தை பலசேனைப் படையால்
சுவைக்க நீ அனுமதித்தாயே 
அப்போதா?;

என் இளமைக் காலக்கிளையில்
எனக்காகக் கூவிய வசந்தகாலக் குயிலை
வேட்டையாடினாயே
அப்போதா?

என் வாழ்வின் மகிழ்ச்சியென
நான் கண்ட கனவின் நன்னம்பிக்யை
இனம் கண்டு சுவீகரித்தாயே
அப்போதா?

காலாதி காலமாய் நானடைந்த 
பரஸ்பரத்தையும் சமாதானத்தையும் 
ரகசியமாய் சமாதியாக்கினாயே
அப்போதா?

ஒரு தாய் பெற்ற மக்களைப் பெரிது சிறிதெனப் 
பாகப்பிரினை கொடுத்து  
கோடி கோடி மௌனக் கூக்குரலுக்குள் ஒளிந்து கொண்டு 
நீ
மதவேடிக்கை பார்க்கிறாயே 
அப்போதா? 

இதுவரை பொழுதுபோக்கியவை போக
இனி 'போர்க்களத்தில் ஒரு பு'10 
காட்சி பார்க்கும் தியைரங்கில் 
உலக மக்கள்  உள்ளம் உருகிக் 
கண்ணீர் கசிகிறர்களே அப்போதா?

ஒவ்வொரு குடிமகனின் 
கழிப்பறைக்கும் குளிப்பறைக்கும்
உத்தரவாதம் இருக்கிறதோ இல்லையோ
இந்த தேசத்தை இனத்துவேசத்திலேயே 
தன்னிறைவடையச் செய்தாயே
அப்போதா?

சொல்!
நீ
மனித நேயத்தை  மக்கள் மயப்படுத்தியது 
எப்போது?

நான் மட்டுமல்ல நாயகனே
நாங்கள் லெலோரும் திகைத்து திகிலடைந்து 
'கோமா'வில் விழந்தபோதெல்லாம் 
'ஆ... அப்படியா' என்றே நீ நடித்து
கபளீகரம் செய்த  வாழ்வில் நஷ்டமடைந்ததெல்லாம்
எனது இனம் மட்டுமல்ல
என் இனஉரிமையும் மொழிஉரிமையும் கூடத்தான் 



No comments

Powered by Blogger.