விஜித தேரர் மீதான அடக்குமுறைக்கு அஸாத் சாலி கண்டனம்
இந்த நாட்டில் உள்ள தீவிரவாத சக்திகள் மேற்கொண்ட மிக மோசமான முயற்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்த ஒரு தணிச்சல் மிக்க பௌத்த மதத் தலைவர்தான் மஹியங்களை மகாவலி மகாவிகாரையின் பிரதம மதகுருவான சங்கைக்குரிய வடரேக விஜி தேரர் ஆவார். இவர் அந்தப் பிரதேசத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதேச சபை உறுப்பினருமாவார். அவர் ஏனைய சமய வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதை மிகக் கடுமையாக எதிர்த்தவர்.அத்தோடு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தும் கும்பலை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகத் துணிச்சலாக குரல் கொடுத்தவர்.
முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அல்லது சத்தியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து சிங்கள பொது மக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களின் சிந்தனையை தூண்டிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு எதிராக மீண்டும் இதே அடிப்படைவாத கும்பல் அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
சமயத் தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான அவருக்கு தற்போது தனது சொந்தப் பகுதிக்கு விஜயம் செய்து ஒரு மக்கள் பிரதிநிநி என்ற வகையில் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்ற முடியவில்லை. தனது சொந்த விகாரைக்கு கூட அவரால் செல்ல முடியாத பயங்கர நிலை தோற்றுவிக்கப் பட்டுள்ளது. தனது அடிப்படை மனித உரிமைகள் இதன் மூலம் மீறப்பட்டுள்ளதாக அவர் மனித உரிமை ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது. அவர் அங்கிருந்து கிட்டத்தட்ட துரத்தி அடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நான் அவரை தனிப்பட்ட முறையில் பொரளை பொலிஸ் நிலையத்துக்கும் பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கும் அழைத்துச் சென்றேன். அங்கும் அவரின் முறைப்பாடு பதியப்படவில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாவல் வழங்க வேண்டிய பொறுப்பு மிக்க காவல் துறையும் காலை வாரிவிட்டது. இதன் பிறகு கௌரவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டை அடுத்து,அவர் பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதன் பலனாக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் தலைமையகத்தில் அவரின் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
ஒரு பௌத்த மதகுருவுக்கு ஏற்பட்ட இந்த ஆபத்தான நிலை குறித்து அரசாங்கம் எவ்வித கவலையும் அக்கறையும் அலட்டலும் இன்றி அமைதியாக இருந்தமை மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.இதன் மூலம் இந்த பௌத்த மதகுருவை அச்சுறுத்தி அவரின் அடிப்டை உரிமைகளை மீறிய அடக்குமுறை கும்பலுக்கு அரசாங்கம் ஆதரவாக இருந்ததா? என்ற நியாயமான சந்தேகமும் இங்கு எழுகின்றது. இவரை மிரட்டிய அதே குழுதான் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்படியானால் இந்தக் குழுவுக்கும் அரசின் ஆதரவு உள்ளதா? ஒரு சமயத் தலைவர்,பிரதேச சபை உறுப்பினர் அதுவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் இன்று அநாதரவாக தனது சொந்த ஊருக்கும் விஹாரைக்கும் கூட செல்ல முடியாமல் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நடு வீதியில் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த அரசாங்கம் தனது சொந்த அணியை சேர்ந்த ஒருவராக இருப்பினும் சரி அவர் அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினாலும் போதும் எந்த விதமான ஈவு இரக்கமும் இன்றி அவரை விரட்டி விரட்டி தாக்கத் தயங்கப் போவதில்லை என்பது இதிலிருந்து நன்கு தெளிவாகின்றது. இந்த அரசின் கீழ் மக்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது என்பதை இனி எவராவது ஏற்றுக் கொள்ள முடியமா?
இந்த பௌத்த தேரர் இந்த நாட்டை துண்டாடத் துடிக்கும் சக்திகளுக்கு எதிராக துணிச்சலாகக் குரல் கொடுத்தவர். அவரின் குரல் அடக்கி ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்துக்கு ஆதரவாக சீறிப் பாய்ந்த சிம்மக் குரல். நாட்டில் நியாயமாகவும்,நேர்மையாகவும் நடந்து கொள்ளும் தலைமைகளுக்கு நாம் இப்படித் தான் நன்றி செலுத்துவதா? இன ரீதியாக இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்த முனையும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து இத்தகைய தனி நபர்களுக்கும் தலைமைகளுக்கும் ஆதரவளித்து நேசக் கரம் நீட்ட முன்வர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அஸாத் சாலி
மத்திய மாகான சபை உறுப்பினர்
தலைவர் தேசிய ஐக்கிய முன்னணி
.jpg)
Post a Comment