மிருகவதையை எதிர்க்கும் சிங்கள ராவய அமைப்பினரின் போராட்டங்களும், சிறுபான்மைச் சமூகத்தின் கவலையும்?
(தந்திமகன்)
உலகம் இன்று எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. நாமோ மற்ற இனத்தின்மீது காழ்ப்புணர்வு கொண்டு மற்றவரின் மதத்தில், வழிபாட்டிடத்தில், பொருளாதாரத்தில், உண்ணும் உணவில் மட்டுமன்றி, மொத்தமாகப் பார்க்கின்றபோது வாழ்வியலோடு போராடுகின்ற அநாகரிகமான செயலொன்றுக்காக, அமைதியான நாட்டில் மீண்டும் ஒரு போராட்ட உணர்வைத் தூண்டுகின்ற செயற்பாடுகளுக்கு முக்கூட்டு நடவடிக்கை மேறகொள்கின்றவர்களை கண்டு வெட்கப்படவேண்டியுள்ளது. ஒரேநாடு ஒரே மக்கள் என்று பறைசாற்றும் நமது நாட்டின் தலைவரின் ஆளுகைக்குள் இனங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்று வெளிப்படையாகக் கூறினாலும் சிங்கள பேரினவாதிகளின் ஒருபிரிவினர் இந்நாட்டில் சிறுபான்மையினச் சமூகத்தை எப்படியும் விரட்டியே ஆகவேண்டும் என்பதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டுவருவதையிட்டு இந்நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது கவலையைத் தெரிவிக்கின்றனர்.
உணவுக்காக மாடுகளை அறுத்து கொலை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் சிங்கள மற்றும் தமிழ் தொன்மையினை கொச்சைப்படுத்தும் இழிசெயலுக்கு இலங்கையில் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. மாடறுப்பதை உடனடியாக நிறுத்தாவிடின் பல நூற்றுக்கணக்கான சிங்களவர் உயிர்த்தியாகம் செய்வர் என்று சிங்கள ராவய அமைப்பு கடந்தவாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து, மிருக வதையை உடனடியாக நிறுத்துமாறுகோரி சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி கடந்த 9ம் திகதி காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னாலிருந்து ஆரம்பமாகி, இப்பேரணி கடந்த 16 ஆம் திகதியன்று கொழும்பு ஜனாதிபதி மாளிகையைச் சென்றடைந்திருந்தது.
இவ்வாறான போராட்டங்களை நடாத்துவதன் நோக்கம் தெளிவாக புரியவில்லை என்றுதான் கூறவேண்டும். காரணம் வெறுமனே மாடுகளை அறுக்கக்கூடாது என்கிற கோரிக்கையை முன்னிலைப்படுத்துக்கின்ற இப்போராட்ட வடிவமானது கடுமையான பௌத்த தீவிரவாதத்தை மேலும் இலங்கைக்குள் மாத்திரம் முடக்கப்படுவதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான முன்யோசனைத் திட்டமாகவும் இருக்கலாம் என்கின்றனர் நமது ஊடக நண்பார்கள். இந்தவகைப் போராட்டங்கள் எதனைக் காண்பிக்கின்றன என்று பார்த்தால் சைவர்களும் மாடுகளை உண்ணமாட்டார்கள். சிங்களவர் மாடுகளை உண்பர், முஸ்லிம்களும் மாட்டிறைச்சியை உண்பர். அதற்காக முஸ்லிம்கள் மாத்திரம் உண்பதாக பகற்கனவு காண்கின்ற இந்தவகை பௌத்த தீவிரவாத கடும்போக்காளர்கள் மத்தியில் எதனைப்பேசியும் எதுவும் புரியப்போவதில்லை.
புரிதலில் இனக்கப்பாடு அவசியம். இனக்கப்பாட்டினை வழங்கவேண்டியவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தினர். அந்தப் பெரும்பான்மையினரைக் கொண்டமைந்து காணப்படுகின்ற அந்நாட்டு அரசியல் இவ்வாறு மற்றொரு சமூகத்திற்கு எதிராக மீண்டும் களோபரத்தில் ஈடுபடுகின்றவேளை அதில் தலையிடவேண்டிய அவசியம் நாட்டின் அரசுக்குண்டு. இன்றைய அரசின் ஆட்சிக்காலத்தில்தான் பிற சமூகங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும், பேரிடிகளும் ஏற்படுகின்றபோது அவர்களைக் காத்துக் கொள்ளவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இந்த அரசின் கட்டுப்பாடுகள் எதுவும் இவர்களை எதுவுமே செய்யவில்லை. இவர்களுக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான உத்தரவொன்றினை வழங்கியிருந்தது. அதாவது, கடும்போக்கு பௌத்த அமைப்புக்களில் ஒன்றான சிங்கள ராவய அமைப்புக்கு இலங்கையின் எந்தப் பாகத்திலும் போராட்டங்களை நடத்தக் கூடாது' என்பதே அந்த உத்தரவு. ஆனால் உத்தரவு நிறைவேற்றப்பட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படியானால் இவர்களைக் கட்டுப்படுத்துவது யார்?
சட்டம் ஒழுங்குகள் நடைமுறையிலுள்ள ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு எதற்குமே கட்டுப்படாத கடுமையான போக்காளர்கள் தங்களை மறந்து உணவுக்காக அறுக்கப்படுகின்ற ஒரு உயிருக்கு உத்தரவாதத்தை வழங்குமாறு கோரிக்கை விடுவது என்பது முட்டாள்தனமான ஒரு கோரிக்கை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. கௌதம புத்தரின் வழியில் செல்கின்ற துறவிகள் முழுமையான பௌத்த அகிம்சைகளின் அடிப்படையில் தங்கள வாழ்வின் புனித்துவத்தை உணர்ந்து இறைவன் பாதத்தில் சதா இருந்து மக்கள்மீது அன்பைச் சொறிந்து நல்வாழ்வுக்கான பாதையைக் காண்பிக்க வேண்டியவர்கள் இன்று ஏனைய இனத்தின்மீது பார்வையைச் செலுத்தி அவர்களது உள்வீட்டுக்குள் நுழைந்து பிரச்சினைகளைக் கிளப்ப முயல்வது என்பது நியாயமான ஒரு ஜனநாயக் பன்புகளை மீறுகின்ற செயலாகவே பார்க்க வேண்டி உள்ளது.
அந்தவகையில் பின்வரும் இயற்கையின் விதிமுறைக்கு இவர்கள் கூறப்போகும் நியாயம் என்ன என்பதையும் பார்ப்போம்.
* கொசு, மூட்டைப்பூச்சி, பாம்பு, எறும்பு ஆகியவை மனிதர்களைக் கடிக்கின்றன என்பதற்காக அதற்கு மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. கடித்ததற்கு மரண தண்டனை என்பது வதையில்லையா?
* நமது வீட்டில், பண்ணையில், வயலில், கடைகளில் காணப்படுகின்ற உணவுகளை உண்டு விடுகிறது என்பதற்காக எலிகளைக் கொல்வது வதையில்லையா?
* நமக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு உபாதைக்குள்ளாகின்றது என்பதற்காக தண்ணீரில் உள்ள உயிர்களை நீரைக் கொதிக்க வைத்துக் கொல்வது வதையல்லவா?
* கன்றுக் குட்டிக்காக தனது தாயின் மடியில் சுரக்கும் பாலை, அந்த வாயில்லா ஜீவனை மனிதர்கள் ஏமாற்றி கறந்தெடுத்து அருந்துவது வதையல்லவா?
* வண்டிகளிலும், ஏர்களிலும் பூட்டி மாடுகளை வதைப்பது ஜீவ காருண்யமாகுமா?
* மருத்துவப் பரிசோதனைக்காக எத்தனையோ உயிர்கள் அறுத்துக் கொல்லப்படுகிறது. மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்காக மற்ற உயிர்களை அறுத்துச் சோதிப்பதும் ஒருவiகியல் வதையல்லவா?
* நாய் கடித்து விட்டால் அதற்கு போடப்படும் ஊசி மருந்து எத்தனை உயிர்களைக் கொன்று தயாரிக்கப்படுகிறது? அப்படியால் அதுவும் ஒருவகையில் நியாமற்ற தன்மைதானே!
* தாவரங்களுக்குக் கூட உயிர் இருக்கிறது. அதனால் தான் அவை வளர்கின்றன. காய்க்கின்றன்ன. பூக்கின்றன. இனவிருத்தி செய்கின்றன. ஆனால் அவற்றை அழித்து உண்பது மட்டும் வதையில்லையா?
இவ்வாறு செய்பவர்கள் வதை கூடாது என்று கூறிக் கொண்டு வதைக்கின்றனர். தமக்குத் தாமே தீமூட்டிக் கொள்ள முற்படுகின்றனர். அரசையும், ஜனநாயகத்தையும் விமர்சிக்கின்றனர். நீதியை ஏற்றுக் கொள்ளவும், நியாயமான முறையில் உரிமைகளை வழங்கவும், அமுல்படுத்தவும் தடைக்கல்லாக வாழ முரண்படுகின்றனர். இவையெல்லாம் எதனைக் காண்பிக்கின்றன என்றால் இலங்கையில் இன்று ஜனநாயம் இல்லை என்பதைத் தான் கூறவேண்டியுள்ளது. இதற்காக ஜனநாயக மரபுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள அடிப்படை மனித உரிமைகள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்.
'111 அடிப்படை உரிமைகள்: 12 (1) – சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள்; அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கும் உரித்துடையவர்கள்.' எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்நாட்டில் மதததின் பெயரால் மற்றைய மதங்களின் கடமைகள், விழுமியங்கள் ஒடுக்கப்பப்படவும், அவர்களின் வணக்கத்தலங்கள் அழிக்கப்படவும் காடைத்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமும், பொருட்களின் விலைவாசியைப் போல்;! சட்டம் அந்த சிறுபான்மை மக்களினது சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றே கூறலாம்.
பொதுவாக சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிக் கலவரத்தை உண்டாக்கும் சகல நடவடிக்கைகளையும் பொலிஸார் தடுதது நிறுத்தி, இந்நிலை ஏற்படுவதற்கு வழிவகுப்போரைக் கைது செய்திருக்க வேண்டும். இந்த அடாவடித்தனத்தை, அரசயாப்பினால் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதற்குத் தடையாகவுள்ள சக்திகள் பலமிக்கதொருவரின் ஆசீர்வாதத்ததுடன் பகிரங்கமாகவே இயங்கும் நிலையை அண்மைக் காலமாக நடைபெற்று வருகின்றது. இலங்கைப் பொலிஸ் கைகட்டி, வாய் பொத்திப் பார்த்துக் கொண்டிருக்க அந்தக் குழப்பங்களுக்கே அனுசரனையாகவும் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.
இச்செயல் இலங்கையின் அரசியல் யாப்பை மீறுவது மட்டுமல்ல, அதனைச் துச்சமென மதிக்கும் அடாவடித்தனம். இதற்கு உடந்தையானோர் யாராக இந்தாலும், சட்டத்தின் முன் சகலரும் சமன் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டியவர்கள். சட்டம், ஒழுங்கைத் தட்டிக் கழிக்கின்ற எந்த நாடும். அமைதிப் பாதையில் செல்லமுடியாது எனவே, நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்கின்றது எனவும் கூற முடியாது.
அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக இந்நாட்டுக்கு எதிராகக் உலகளாவிய ரீதியில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கைகளைக் கண்டுங்காணாது, நியாயப்படுத்தும் வண்ணம், ஆளும் அரசுக்குள் இருக்கின்ற சிறுபான்மையினச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அறிக்கை விடுவதுதான் வேடிக்கையாகும். அந்தவகையில் நாட்டின் பிரதான முஸ்லீம் அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் அண்மையில் தெரிவித்த கருத்தினையும் வேதனையுடன் நோக்க வேண்டியும் உள்ளது. அதாவது, இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சகல சமூகத்தவரையும் ஒன்றிணைப்பதற்காக தமது கட்சி பாடுபடுவதாக தெரிவித்திருந்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பிராந்திய தலைவியான மெரி யமஸிட்டா வைச் சந்தித்தபோது உரையாடியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
ஆனால் இதற்கு வித்தியாசமான முறையில் தெரிவித்திருந்தார் வடமாகாண முதலமைச்சரான சிவி.விக்னேஸ்வரன். அதாவது இந்த இலங்கை நாட்டில் ஜனநாயகம் பெயரளவில் தான் இருக்கின்றது எனவும், பலமுறை ஏமாற்றப்பட்டு இந்தியாவில் அழுத்தம் காரணமாக வடமாகாண சபையி;ன் நடவடிக்கைகளுக்கு பல விதங்களிலும் தற்போது முட்டுக் கட்டை காணப்படுவதால் இங்குள்ள பிரச்சினைகள் தேவைகளை சரிவரக் கவனித்துக் கொள்ள முடியாத நிலையிலையே நாங்கள் எங்களுடைய பணிகளை ஆற்றி வருகின்றோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மேரி ஜமசிட்டாவிடம் எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனவே, மாடு அறுப்பதை மையப்படுத்தியவாறு மாபெரும் பிரச்சினைக்குள் இந்நாட்டு வாழ் சிறுபான்மைச் சமூகத்தை உள்வாங்கும் ஒரு கட்டத்திற்கு வந்துள்ள சிங்கள ராவய போன்றோரின் போராட்டங்களை ஆளும் வர்க்கத்துடன் ஒன்றித்துப்போன சிறுபான்மையினர்கள் தங்களுடைய சுகபோகத்தை விட்டொதுக்கி உண்மையான ஜனநாயகத்திற்காகப் பாடுபட வெளியோர்வார்களா? இது நடைமுறைக்குச் சாத்தியமாகாவிட்டால் எதிர்வரும் தேர்தலில் தக்கபாடம் புகட்ட, வாக்குப்பலத்தை பிரயோகிக்க தயார்படுத்தப்படுவதே இன்றைய சவாலாகும். நிறைவேறுமா? பொறுத்திருந்துதான் பார்ப்போம்?
.jpg)
if any one translate to singela language it most useful
ReplyDeleteDears
ReplyDeletePlease translate in english and share it
உங்கள் கட்டுரை சிறந்தது. ஆனால் மீன், முட்டை, கோழி, ஆடு, பன்றி என்பன மனித உணவுக்காகவும் மிருகக் காட்சி சாலையிலுள்ள உயிரினங்களுக்காக நாய் போன்ற மிருகங்கள் கொலை செய்யப்படுவது பற்றியும் குறிப்பிட்டிருக்கலாமே.
ReplyDelete