இந்தியாவின் பேச்சை கேட்பதில்லை இலங்கை - நரேந்திர மோடியின் கண்டுபிடிப்பு
இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகள், இந்திய மத்திய அரசின் பேச்சைக் கேட்பதில்லை. அவ்வாறான நிலைக்குக் காரணம் மத்தியிலுள்ள பலவீனமான அரசுதான். அதனால் தான் தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப் பட்டிருக்கின்றார்கள் என்று சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சென்னை அருகே உள்ள வண்டலூரில் பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று இரவு இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
மத்திய அரசுக்கு, ஏழைமக்களின் மீது அக்கறை இருக்குமானால், தமிழக மீனவர் பிரச்சினை நடந்திருக்காது. தமிழக மீனவர்கள் இந்தப் பிரச் சினையைச் சந்தித்து இருக்க மாட்டார்கள்.
தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறையில் அவதிப்படுகின்றனர். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் வாடுகின்றனர். மத்திய அரசின் பலவீனமான ஆட்சியே இந்தப் பிரச்சினைக்குக் காரணம்.
மத்தியில் இருக்கும் பலவீனமான அரசு கையைக் கட்டிகொண்டு இருப்பதால், நமது நாடு, அயல் நாடுகளால் பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அயல் நாடுகளிலே நல்ல உறவு இருக்கவேண்டுமானால் மத்திய அரசு வலிமை மிக்க அரசாக இருக்க வேண்டும். வலிமை மிக்க அரசாக இருந்தால் அவர்கள் நம்மோடு உறவு கொள்ள முன்வருவார்கள்.
எமது மத்திய அரசின் பேச்சை அவர்கள் கேட்பதாகவும் இல்லை.இதற்குக் காரணம் மத்திய அரசின் பலவீனமே என்றார். சென்னையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி மோடி எதனையும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment