லக்ஸ்மன் கதிர்காமர் இருந்திருப்பாரேயானால்...!
பாதுகாப்பு அமைச்சினால் வழிநடத்தப்படும், வெளிவிவகாரக் கொள்கையின் ஊடாக, அனைத்துலக அரங்கில் சிறிலங்கா ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் மூத்த இராஜதந்திரியான, தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, தாஜ்சமுத்ரா விடுதியில் நடைபெற்ற கொழும்பு கழகத்தின் கூட்டம் ஒன்றிலேயே அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
‘வரப்போகும் ஜெனிவா கூட்டத்தொடர் மற்றும் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா மீதான சட்ட மற்றும் பொருளாதார தாக்கங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய அவர்,
“லக்ஸ்மன் கதிர்காமரின் காலத்தில், இத்தகையதொரு சூழ்நிலை இருந்தது கிடையாது.
இத்தகையதொரு சூழ்நிலைக்கு அவர் ஒருபோதும் இடமளித்திருக்கவும் மாட்டார்.
இந்த விவகாரத்தில் இரண்டு பார்வைகள் உள்ளன.
அடுத்தமாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் நியாயமற்றது என்பது ஒன்று.
அதேவேளை, இத்தகையதொரு சூழல் ஏற்பட சிறிலங்கா அரசாங்கம் இடமளித்திருக்கக் கூடாது என்பது மற்றொன்று.
நான் நடுநிலையாக நின்று பார்க்கும் போது, இந்த தீர்மானம் நியாயமற்றது, உதவாதது, போலியானது என்று நம்புகிறேன்.
ஆனால், பாதகமான விளைவுகளைக் கொண்ட ஒரு எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்ளும் தகுதியை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்றும் நாம் நம்புகிறேன்.
மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா தீர்மானம், ஒரு புதிய இயங்கியலைத் தூண்டிவிடும்.
இதற்கு உலகில் முன்னோடியாக எதுவுமில்லாதளவுக்கு இது நியாயமற்றது.
இத்தகைய தீர்மானத்தை வேறு எந்தநாடும் எதிர்கொள்ளவில்லை.
மறுபக்கமாக, இன்றுள்ள நிலைமை இப்படியே இருந்து, சிறிலங்கா அதிபராக மகிந்த ராஜபக்ச இருந்திருந்தாலும், லக்ஸ்மன் கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக இருந்திருப்பாரேயானால், இப்படியான சூழல் ஏற்பட்டிருக்காது.
வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள். ஆலோசகர்கள், நாட்டின் பரிதாபமான வெளிவிவகாரக் கொள்கை எல்லாமே, வெளிவிவகார அமைச்சின் தகுதியின்மையின் விளைவுகளாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்கா அதிபரின் அனைத்துலக விவகாரங்களுக்கான ஆலோசகராக, அனுபவமிக்க சிவில் சேவையாளரான பிரட்மன் வீரக்கோன் இருந்தார்.
இன்று சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகராக இருக்கும், சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு அனைத்துலக விவகாரங்களில் எந்த அனுபவமும் கிடையாது.
போர் வலயத்தில் சிக்கியிருந்த மக்களை அமெரிக்க கடற்படையின் உதவியுடன் மீட்பதற்கு, சிறிலங்கா அரசாங்கத்தின் புரிந்துணர்வுடன் பிரித்தானியாவும், அமெரிக்காவும் வரைந்த திட்டம் ஒன்றை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாட்டுப் படைகளிடம் சரணடைய மறுத்ததாலும், சில விடுதலைப் புலிகளை மீட்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்ததாலும், அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டிருந்தது.
அதேவேளை, அனைத்துலக சமூகம் இந்த முன்னேற்றங்கள் குறித்து நன்கு அறியும்.
போரின் இறுதிக்கட்டத்தில், பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைத்து தாக்கப்படவில்லை.
நாம் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.
2009 மே மாதத்திலும் கூட, போரக்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடந்தன.
ஆனால், 62 வீதமான வாக்குகளை சிறிலங்கா பெற்றதால், அது தோல்வியில் முடிந்தது.
ஐந்து ஆண்டுகளுக்குள், ஆதரவு குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு சிறிலங்காவினால் தனக்கு ஆதரவாக 12 வாக்குகளையே திரட்ட முடிந்தது.
இந்த எதிர்மறையான சூழ்நிலையை நாமே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பெரும்பாலும் ஒரு சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படுவார்.
ஜெனிவாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
போர் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டது என்று விசாரணை முடிவு வருமானால், நாட்டின் தலைவர்கள் மட்டுமன்றி, அப்போது பணியில் இருந்த தளபதிகளுக்கு எதிராகவும் சட்டரீதியான கதவுகளை அது திறந்து விடும்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், இலங்கைத் தமிழ் அரசியல் மீண்டும் ஒருமுறை, வடக்கில் இருந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையில் இருந்து புலம்பெயர் தமிழரின் கைகளுக்குச் செல்லும்.
எந்தவொரு அனைத்துலக முயற்சிகளையும் எதிர்ப்பது சிறிலங்காவுக்கு எளிதான காரியமல்ல.
மார்ச் மாதத்துக்குப் பின்னர், உள்நாட்டில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவும் என்றே எதிர்பார்க்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment