Header Ads



லெபனானில் புதிய அரசு

சிரியாவில் நடைபெற்று வரும் அரசு சார்ந்த மோதல் அண்டை நாடான லெபனானிலும் எதிரொலித்து வருகின்றது. சமீப காலங்களில் தலைநகர் பெய்ரூட்டில் இனக்கலவரங்களும், வெடிகுண்டுத் தாக்குதல்களும் அதிகரித்துக் காணப்பட்டன.

இதன் விளைவாகவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டின் பிரதமர் நஜிப் மிகாடி ராஜினாமா செய்தார். பின்னர் ஏப்ரலில் பதவிக்கு வந்த தமாம் சலாமால் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை. லெபனானின் ஷியா பிரிவு இயக்கமான ஹெஸ்பொல்லா, சிரியாவின் அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக அங்கு கலவரங்களில் ஈடுபட்டு வந்தது லெபனானிலும் இனப் பிரிவுக் கலவரங்களை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து பத்து மாதமாக அங்கு புதிய அரசு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. 

இந்நிலையில், சென்ற மாதம் ஹெஸ்பொல்லா இயக்கத்தினரின் ஆசாத் ஆதரவு நடவடிக்கையைத் தாண்டி அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாக லெபனானின் சன்னி பிரிவினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் ஆணையின்படி தமாம் சலாம் பிரதமராக அறிவிக்கப்பட்டார். 

அந்நாட்டின் அமைச்சர்கள் குழுவின் பொதுச் செயலர், புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் பெயர்களை வெளியிட்டார். இதன்படி முன்னாள் எரிசக்தி அமைச்சர் கெப்ரான் பசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அலி ஹசன் கலீல் நிதி அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினரான நௌஹத் மச்நுக் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்கின்றனர்.

No comments

Powered by Blogger.