நோய் மாட்டுக்கு அல்ல, நாட்டுக்கு...!
(நவாஸ் சௌபி)
1992 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்திற்கு அமைவாக கால் நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் கே.டி. சில்வா தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஆகிய ஆறுமாவட்டங்களை கால்வாய் நோய் தொற்றத்தக்க விலங்கினங்கினங்களைக் கொண்ட பிரதேசங்களாக பெப்ரவரி 19 ஆம் திகதிய விஷேட வர்த்தமானி மூலம் பிரகடன்படுத்தியுள்ளார்.
விஷேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பசுமாடு, எருமைமாடு, செம்மறியாடு, வெள்ளாடு, மற்றும் பன்றி ஆகிய விலங்குகளை குறிப்பிட்ட கால்வாய் நோய் தொற்றத்தக்க விலங்கினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தாற்காலிகமாக 3 மாதங்களுக்கு குறிப்பிட்ட பிரதேசங்களை பின்வரும் மூன்று விடயங்களையும் மேற்கொள்வதற்கு தடைசெய்யப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
- நோய்தொற்றத்தக்க விலங்குகளில் செயற்கைமுறை இனவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- நோய் தொற்றத்தக்க விலங்குகளை அறுத்தல்
- நோய் தொற்றத்தக்க விலங்குகள் சம்பந்தப்பட்டவாறான உயிர் விலங்குச் சந்தைகள், கண்காட்சிகள், போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துதல்
நிலைமைகள் சரியாக ஆராயப்பட்டு உரிய நோய் பற்றிய அபாயம் தொடர்ந்தும் காணப்படுமாயின் மேலும் 3 மாதங்கள் நீடித்து 6 மாதங்களுக்கு மேற்படாத தடையினை ஏற்படுத்த பணிப்பாளருக்கு அதிகாரமிருக்கிறது என இச்சட்டம் குறிப்பிடுகின்றது. 6 மாதங்களுக்கு மேலாக எந்தவிதமான காரணங்களுக்காகவும் இத் தடையினை அமுல்படுத்தவோ, நீடிக்கவோ முடியாது என்பதும் இதன் பொருளாகும்.
இச்சட்டத்தின் படி குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட பிரதேசத்தினுள் நோய்யற்ற மாடுகளை அறுப்பதும், ஏனைய தடைசெய்யப்படாத பிரதேசங்களில் இருந்து நோய்யற்ற மாடுகளைக் கொண்டுவருவதும் மற்றும் தடைசெய்யப்பட்ட பிரதேசத்தினுள் இறைச்சியைக் கொண்டுவந்து விற்பனை செய்வது போன்ற விடயங்களை மேற்கொள்வது முற்றாகவே தடைசெய்யப்பட்டுள்ளதாகும்.
தடைசெய்யப்பட்ட பிரதேசத்தினுள்ள நோய்க்குள்ளான மாடுகளைத்தான் அறுக்க முடியாது நோய் அற்ற மாடுகளை அறுக்கலாம் என்று இச்சட்டத்தை சிலர் தவறாக விளங்குவதாகவும் தெரிகிறது. ஆனால் விஷேட வர்த்தமானி அறிவித்தலின்படி நோய் தொற்றத்தக்க விலங்குகளில் பசுமாடு, எருமமாடு என்பவற்றையும் குறிப்பிட்டு அதற்கமைய நோய்தொற்றத்தக்க விலங்குகளை அறுத்தல் தடைசெய்யப்படுகிறது என்று அறிவிக்கபட்டிருக்கிறது. எனவே இதில் எந்த மாடு நோய் உள்ளது எந்த மாடு நோய் அற்றது என்று பரிசோதிப்பதற்கு எந்த அவசியமும் இல்லாமல் நோய் தொற்றத் தக்க விலங்கினங்களாக மாடுகள் இருப்பதனால் அவற்றை அறுக்க வேண்டாம் என்றே விஷேட வர்த்தமானி அறிவித்திருக்கிறது என்பது தெளிவானதே.
மேற்படி சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் குறிப்பிடப்பட்ட தடை உத்தரவுகளை மீறிச் செயற்படுவதும், அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரிகள் இது குறித்த கடமைகளில் ஈடுபடுகின்ற போது அக்கடமைகளைத் தடுப்பதும் இச்சட்டத்தின் மூலம் தண்டனையளிக்கக் கூடிய குற்றமாகிறது. இதன்படி இக்குற்றத்திற்குள்ளாகின்றவர்கள் நீதவான் நீதிமன்றில் சுருக்க முறையில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் எனக் காணப்பட்டால் அவர்கள் பின்வரும் தண்டனைகளுக்கு உள்ளாகலாம்
- 6 மாதங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனை
- 5000 ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணம்
- சிறை தண்டணை அல்லது தண்டப்பணம் இரண்டில் ஒன்று.
எனவே இத்தகையதொரு சட்டம் 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட போது இதன் பின்விளைவுகள் அல்லது இதனூடாக இனவாதப் பின்புலங்கள் உருவாகும் என்ற தூரநோக்கு எதனையும் அப்போதிருந்தவர்கள் நோக்காவிட்டாலும் இப்போது இச்சட்டம் நடைமுறைக்கு வருவதில் ஒரு இனவாதப் பின்புலத்தின் தோற்றப்பாடு தெரிகிறது.
ஏனெனில் கடந்த சில காலமாக இலங்கையில் மாடு அறுப்பதனை முற்றாகத் தடைசெய்வதற்கான குரல்களை சில பேரினவாத அமைப்புகள் எழுப்பி வருகின்றன. அண்மையில் ராவய அமைப்பு கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டமும் தீக்குளிப்பு நடடிவடிக்கைகளும் இதன் உச்சத்தைக் காட்டியது. இதற்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து 3 மாதகால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்தான் இந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டும் இருக்கிறது.
காகமும் குந்தப் பணம் பழமும் விழுந்தது மாதிரி, கால்வாய் நோய் காரணமாக 6 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் இறைச்சி விற்பனை மற்றும் நோய் தொற்றத்தக்க விலங்குகளை அறுப்பது என்பன தடைசெய்யப்பட்டிருக்கின்றது. ஆகவேதான் நாட்டின் இன்றைய சூழலில் குறிப்பிட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் ஒரு இனவாதப் பின்புலத்தை சந்தேகிக்க வைக்கிறது.
இலங்கையில் உள்ள மதச் சுதந்திரம் மாடு அறுப்பதனை முற்றாகத் தடை செய்ய முடியாத ஒரு நிலையைக் கொண்டிருக்கிறது. ஏனெனில்; முஸ்லிம்கள் உழ்கியா, அகீகா, குர்பான் கொடுத்தல் போன்ற மதக் கடமைகளுக்கும் மாடு அறுபத்தினால் இங்கு மதச் சுதந்திரத்தை கருத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது. எனவே மாடு அறுப்பதனை நிரந்தரமாகத் தடுக்க முடியாவிட்டாலும் இச்சட்டதின் மூலம் தற்காலிகமாகத் தடை செய்ய முடியும் என்ற உள்நோக்கு இதன் மூலம் தென்படுகிறது.
அது மாத்திரமன்றி கால் வாய் நோய் உள்ளடங்கலாக 22 நோய்கள் பற்றி இச்சட்டத்தின் முதலாவது அட்டவணை மாடுகள் குறித்த நோய்களாகக் குறிப்பிடுகின்றது. எனவே கால் வாய் நோய் போன்று இன்னும் பல நோய்கள் மாடுகளுக்கு ஏற்பட்டு அதற்காகவும் மாடு அறுப்பதனை இச் சட்டம் தடைசெய்யாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது.
தடைசெய்யப்பட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் ஒன்றான அம்பாறை மாவட்டத்தினை முன் உதாரணமாக வைத்துப் பார்க்கின்ற போது இந்நோய் எந்தப் பிரதேச மாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது, இவ்வாறு இனம் காணப்பட்ட மாடுகள் எங்கே? இந்த நோய் பற்றிய ஆய்வுகள் எப்போது செய்யப்பட்டது? என்ற எதுவுமே வெளிப்படையாக இல்லாத ஒரு நிலையும் தெரிகிறது. எனவே இது தொடர்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற அறிக்கையினையும் நாங்கள் சந்தேகிக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.
எப்படியாயினும் குறிப்பிட்ட சட்டம் இன்றுள்ள நிலையில் இனவாதத்திற்குத் துணைபோகலாம் என்ற தோற்றப்பாட்டை எமக்கு அளித்துள்ள நிலையில் இதுதொடர்பாகவே நாங்கள் அதிக கவனம் எடுக்க வேண்டி இருக்கின்றது. முதலில் நாங்கள் மாடு அறுப்பதும் தின்பதுமாக இல்லாமல் இச்சட்டம் குறித்து நன்கு ஆராய்ந்து எமக்குப் பாதகமில்லாத ஏற்பாடுகளை அதில் ஏற்படுத்த சமூகம் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இச்சட்டம் இயற்றப்பட்ட 1992 காலப்பகுதியில் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் ஏ.ஆர்.எம். மன்சூர் போன்ற சட்டம்படித்தவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தாலும்; இதன் விளைவுகள் பற்றி அவர்கள் பெரும் பாரதூரமாகவும் இனவாதமாகவும் நோக்காதிருந்திருக்கலாம். ஆனால் இன்று இதனை சரியாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு எமது அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.
மக்கள் பிரதிநிதிகளாகச் செல்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்ற சட்டங்களை நன்கு ஆராய்ந்து அதில் உள்ள சாதக பாதகங்களை விளங்கி மக்களுக்கு பாதகமில்லாத சட்டங்களை உருவாக்க முன்நிற்க வேண்டும். அதுவே அவர்களுக்குள்ள முக்கிய கடமைகளிலும் ஒன்றாகும். இதற்காகத்தான் சட்டம் படித்தவர்களையும் சட்டத்தரணிகளையும் மக்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்வதில் முன்னுரிமையளிக்கின்றனர்.
எது எப்படியாயினும் இந்த நிலைமைகள் மேலும் தொடர்ந்தால் இதன் பின்புலங்கள் வேறுவிதமான சமூக இனத்துவப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் நிலை உருவாகும். அதனடிப்படையில் நோக்கும் போது கால்வாய் நோய் மாட்டுக்கு மட்டுமல்ல இனவாத நோய் நாட்டுக்கும் ஏற்படலாம்.

நல்ல கட்டுரை.தெளிவாக விளங்குகிறது இது துவேசத்தின் அடிப்படையில் ராவய கட்சிகளின் போராட்டதிற்கு பின்னர் எடுக்கப்பட்ட அரச முடிவு.
ReplyDeleteபச்சோந்தி முஸ்லிம் அரசியல் வாதிகள் இது பற்றி சிந்திக்க வேண்டும்,இங்கு குறிப்பிட்டாற்போல் எங்கே எந்த மாடு நோய்க்கு உள்ளானது,அதன் பரிசோதனை முடிவுகள் என்ன என்பதை இன்னாடு தெளிவு படுத்த வேண்டும்,இதற்கு எதிராக வழக்கும் போடலாம் என்பது தெளிவான விளக்கம்.யார்தான் முன்வருவார்கள்?
யார் வழக்கு தொடர முன்வந்தாலும் வராவிட்டாலும்,அவமானப்பட்ட முஸ்லிம்கள் ஆகக்குறைந்த பட்சமாக,இதனை ஒரு பாடமாக வைத்து வரப்போகும் தேர்தல்களில் எம்மவரை தோட்கடிக்கவாவது முன்வரவேண்டும்.வருவார்களா?வருவார்கள் ஆனால் வரமாட்டார்கள் என்பதே மிகப்பெரும் உண்மை.அப்படி வரலாற்றில் வந்திருந்தால்,எப்பவோ முசீபத்துக்கள் எம் சமுதாயத்தை விட்டும் ஓடிப்போயிருக்கும்.