Header Ads



கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் விடுதிகளுக்கு மின்தூக்கி இல்லாததல் மக்கள் அவஸ்தை

அம்பாறை மாவட்டத்தின் கரையோரம் வாழ் மக்களது  வைத்தியத்தேவையை நிறைவு செய்வதில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கணிசமான அளவு  பங்கு வகிக்கின்றது.இந்தவைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு துறைகளினூடாக  வேகமாக வளர்ந்து வந்த ஒரு நிறுவனம்.

இந்நிறுவனத்தின்  தெற்குப்புறமாக  வைத்தியர்கள்  தங்கும் விடுதிக்கு  சமாந்தரமாக கிழக்கு மேற்காக  இரு  கட்டிடங்கள்   இருக்கின்றன  இக்கட்டிடங்கள்   மிகவும் பழமையானதாக இருந்தாலும்  மேலும்  கீழுமாக  நான்கு  விடுதிகளைச்சுமந்து நின்று  மிகப்பெரிய சேவையை வழங்குகின்றன.

ஆம் ,இவ்விடுதிகளின்  மேல்மாடியில்  முறையே  கிழக்கு மேற்காக  ஆண்,பெண்  வைத்திய விடுதிகள் அமையப்பெற்றுள்ளன.இவ்வைத்திய விடுதிகளில்தான் உடலுக்கு முடியாத அநேக நோயாளிகள்,பக்கவாதத்தால்  பாதிக்கப்பட்டவர்கள்,நெஞ்சு வலி ஏற்பட்டவர்கள், சுவாசக்கஸ்டம்  ஏற்பட்ட நோயாளர்கள்   மற்றும் தன்னிலை மறந்த நோயாளிகளும் தங்க வைத்து சிகிச்சை செய்யப்படுகின்றனர்,

இவ்வைத்தியசாலையின் வெளிநோயாளர் / அவசர சிகிச்சை சிகிச்சைப்பிரிவில் இருந்து  விடுதிகளுக்க்கு  நோயாளிகளை கொண்டு செல்லும் முறையானது   இலங்கைத்தீவில்  எந்த வைத்தியசாலையிலும் இல்லாத ஒரு சோகக்கதையாகவே இருக்கின்றது.ஏனென்றால்  நோயாளர் நடக்க முடியாதவராயின் எப்படியோ படி ஏறியே மாடியை அடைய வேண்டும், மிகவும் முடியாதவர்களை ஊழியர்கள்  தள்ளுவண்டிமூலம் /காவு பலகை(STRETCHER) மூலமே  தூக்கிச் செல்லவேண்டிய  அவல நிலை  இங்கு காணப்படுகின்றது.ஒன்று அல்லது இரண்டு  ஊழியர்களால்  நோயுற்ற பருமனான  நோயாளிகளை  மாடி விடுதிக்கு படிகளினைக்கடந்து  தூக்கிச்செல்வது  மிகவும் கடினமான ஒரு  விடயமாகும்.

மட்டுமன்றி  உறவினர்கள் உடன்வராதபோது அந்த நோயாளியை காவிச்செல்லுவதற்கு பிற விடுதிகளைச்சேர்ந்த  சிற்றூளியர்களை அழைத்துவரும்வரை  நோயாளி படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் தாமதித்து அவஸ்தைப்பட வேண்டியுள்ளது,அவசர நிலையில் உள்ள   நோயாளர்கள் இதனால்  உயிராபத்தை எதிர்நோக்குகின்றனர்,சில நோயாளர்   தாமாக முன்வந்து படியேறும்போது படியிலேயே  சோர்ந்து மயங்கி விழுந்த சரித்திரங்களும் உண்டு.

இந்த அவல நிலையை  தீர்த்துவைக்க   இருவிடுதிகளையும் இணைக்கும் இடத்தில்  நீண்டகால முயற்சிகளுக்குப்பிறகு மின்தூக்கி ஒன்று அமைக்க    நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இடை நடுவில் நிற்கின்றன. என்ன காரணம் என்று யாருக்கும்  புரியவில்லை.இந்த வைத்தியசாலைக்கு பிறகு  முளைத்த  வைத்தியசாலைகள்  சகல வசதிகளையும் பெற்று  சிறந்தசேவையாற்றுகின்றபோது மூத்த நிறுவனமான  இந்நிறுவனம் மட்டும் இவ்வாறு  அநாதரவாக  இருக்க காரணம் என்ன?

ஆளும் அரசுக்கு முட்டுக்கொடுத்து  நடனமாடிக்கொண்டிருக்கின்ற முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் உள்ள ஒரு மாவட்டம் இந்த இழுக்கு நிலைக்கு உள்ளாகி இருப்பது இவர்கள் யாருடைய கண்களிலும் படவில்லையா.முஸ்லீம் காங்கிரசுக்கு மக்கள் வாக்களித்தது இப்படியான மக்கள் குறைகளை ஒவ்வொன்றாக தேடித்தேடி நிறைவு செய்வதற்கேயாகும்,மாறாக கோட்டுக்களை போட்டுக்கொண்டு  பைகளுக்குள் கைகளை வைத்துக்கொண்டு பலநாட்டு ராஜதந்திரிகளுடன்  படங்களுக்கு போஸ் கொடுப்பதற்காக அல்ல.

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரும் இந்த மாவட்டத்தைச்சேர்ந்த சகல முஸ்லீம் அரசியல்வாதிகளும் இது விடயமாக உடனடியாக  கவனம் எடுத்து  நீண்ட காலமாக  நிலவுகின்ற இந்த வைத்தியசாலையின் குறையான இந்த மின்தூக்கி அமைக்கும் செயற்பாட்டை மிகவும் விரைவாக  முடிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

No comments

Powered by Blogger.