Header Ads



முஸ்லிம்களின் புதைக்குழிகளை தோண்டி, மார்க்கக் கிரியைகளை நிறைவேற்ற சந்தர்ப்பம் வழங்குக


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காணாமல் போனோர் தொடர்பான  ஜனாதிபதி ஆணைக் குழுவிற்கும்  -நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துக்குமிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான கூட்டணிக்குமிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பொன்று கடந்த 07.02.2014 வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவின் கொழும்பு காரியாலயத்தில் இடம்பெற்றது.
 
காணாமல் போனோர் தொடர்பாக  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கைகளை அமுல்படுத்துவது தொடர்பாகவே இச்சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 
இச்சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் பராக்கிரம பரணகம, அதன் இணைப்பாளர் . கெலி ஆகியோர் கலந்து கொண்ட அதேவேளை,  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான கூட்டணி சார்பாக, பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் (நளீமி), அஷ்ஷெய்க் நஜா முஹம்மத், பிர்தௌஸ் (நளீமி), சிறாஜ் மசூர், முஹம்மட் முஜீப், மற்றும் ஜெஸ்ரூன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
காணாமல்போனோர் தொடர்பான தகவல்களைத் திரட்டி அறிக்கை இடுவதன்மூலம் மாத்திரம் எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. என்பதனை வலியுறுத்திய நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் காணாமல் போனோர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்களை சம்பந்தப்பட்டோரிடம் உரிய விசாரணைகள் செய்வதன் மூலம் கண்டறிந்து அவர்களின் உறவினர்களுக்கு உரிய மார்க்கக் கிரியைகளை நிறைவேற்றுவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றும், அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குரிய நஷ்ட ஈடுகளை வழங்குவதோடு இப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
 
இக்கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்ட ஆணைக்குழுவின் தலைவர் இப்புதைகுழிகளை உடனடியாக தோண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களை அடையாலம் காணும் முகமாக புதைகுழிகளிகளில் கண்டெடுக்கப்படும் எச்சங்களை மரபணு பரிசோதனை செய்வதற்கான சகல செலவினங்களையும் யூ.என்.டி.பி. நிறுவனம் ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இது தொடர்பிலான சில சட்ட ரீதியான நடவடிக்கைகளை  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.
 
அத்தோடு இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற காலங்களில் குறித்த பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்களை ஆணைக்குழு முன்பாக அழைத்து விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் உறுதியளித்தார்.
 
காணாமல் போனவர்கள் தொடர்பில் இவ்வாறான நியாயமான கோரிக்கைகளை முதன்முதலாக முஸ்லிம் சமூகம் சார்பில்  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்ததையிட்டு தாம் திருப்தி கொள்வதாகவும் தெரிவித்ததோடு ஆணைக்குழுவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஒத்துழைப்புக்களையும் ,ஆலோசனைகளையும் தாம் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
 
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான தகவல் விபரங்களின் தொகுப்பு ஒன்றும் இச்சந்திப்பின்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்க குழுவினரால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
 
மேற்படித் தகவல்கள் அடங்கிய ஆவணங்களை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மூதூர் செயற்குழு உறுப்பினர் ஜெஸ்றூன் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளித்தார்.


No comments

Powered by Blogger.