கொன்று குவிக்கப்பட்ட, விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தை கருத்திலெடுக்காது ஏன்..?
கொன்று குவிக்கப்பட்ட, விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தை கருத்திலெடுக்காது ஏன்?
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கை அரசினை பொறியில் சிக்க வைப்பதற்கான பிரேரணை ஒன்றை அமெரிக்கா கொண்டுவந்தே தீரும் என்ற கருத்துக்களும் அது தொடர்பில் வாதப்பிரதி வாதங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் தொடர்பில் அமெரிக் காவிற்கு திடீரென பாசம் எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது?
இந்த நாட்டில் காணப்படும் மற்றுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தை கருத்திலெடுக்காது தனியே வடக்குத் தமிழினம் மட்டும் தான் பாதிப்படைந்தது என்றவாறான ஒரு தோற்றப்பாட்டையே மிகைப்படுத்தி வருகின்றமைக்கான காரணம் தான் என்ன? என்பன தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியது தற்போது அத்தியாவசியமாகின்றது. இவ்வாறான ஓர் அவதானம் செலுத்துவதென்பது வடக்கு தமிழ் சகோதரர்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களை புண்படுத்துவதற்காகவோ அல்ல. மாறாக அமெரிக்காவின் கபடத்தினை வெளிக்கொண்டு வருவதே இங்கு பிரதான நோக்கமாகும்.
அண்மைக்காலமாக அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயங்களை மேற்கொண்டு வருகைதந்து அதன் பின்னர் வடக்கிற்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுகின்றனர். அதன் பின்னர் தமது விஜயத்தின் இறுதியில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் போதிய முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என கிளிப்பிள்ளை போன்று ஒவ்வொருவரும் சொல்லிவிட்டு விமான நிலையத்திற்கு விரைந்து விடுகின்றார்கள்.
இறுதியாக வருகைதந்திருந்த அமெரிக்க இராஜதந்திரி நிசா தேசாய் கூட இலங்கை தலைமையிலான விசாரணையே இடம்பெறும் என்று அழுத்திக் கூறியிருக்கின்றார். அதன் பின்னர் சில ஊடகங்கள் அதனை மிகைப்படுத்தி சர்வதேச விசாரணை வேண்டும் . இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி என்று தமது வியாபாரத்திற்காக தலைப்புக்களை சூடாக பிரசுரிக்கின்றார்கள். இது தான் யதார்த்தமாக இருக்கின்றது. உண்மையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும் என்றே அவர்கள் வலியுறுத்து கின்றார்கள்.
யுத்தத்தின் போது நடைபெற்ற இழப்புக்கள் தவறுகள் தொடர்பில் உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் எந்தவித மறைப்புக்களும் செய்யக்கூடாது என்பதற்காகவே நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டு பரிந்துரைகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகவே அவற்றை நடைமுறைப்படுத்துவது என்பதில் அரசிற்கு எவ்விதமான பின்னடிப்புக்களும் இல்லை. ஆனால் அதற்கு கால அவகாசம் தேவையாக வுள்ளதென்பதே உண்மை.
இது ஒருபுறத்தில் இருக்க அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு அடுத்தடுத்து விஜயங்களை மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்க ளத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணிய கத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரப், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இரா ஜாங்க செயலாளர் நிசா தேசாய் பி வார் ஆகியோர் ஆணைக்குழுவின் பரிந்து ரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் இன்றேல் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என்றே குறிப் பிட்டிருக்கின்றார்கள்.
அதே போன்று தான் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் அதேபோன்ற கருத்துக்களையே அடிக்கடி வெளிப்படுத்தி வருகின்றார். இவர்களைப் பொறுத்தவரையில் கருத்துச் சுதந்திரமுள்ள ஒரு ஜனநாயக நாட்டில் தமக்கு எவ்வாறு தோன்று கின்றதோ அதன் பிரகாரம் கருத்துக்களை வெளிப்படுத்தலாம். அதில் தவறில்லை. ஆனால் வடக்கு மக்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டார்கள் அவர்களுக்கு நீதி வேண்டும் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று மட்டும் தொடர்ச்சியாக கூறுவது பொருத்தமானதல்ல. இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனமாக இருக்கும் முஸ் லிம்களும் கடந்த முப்பது வருட கால அசா தாரண சூழலில் பாதிக்கப்பட்டார்கள்.
தங்கள் உயிர்களை தியாகம் செய்தார்கள்! அவயங்களை இழந்து அங்கவீனர்களானார்கள்! உறவுகளை இழந்தார்கள்! காணமல் போகச் செய்யப்பட்டார்கள்! கடத்தப்பட்டார்கள்! பொரு ளாதார ரீதியாக முடக்கப்பட்டார்கள்! தாய் நிலங்களை விட்டு விரட்டப்பட்டார்கள்! விசா ரணை என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட் டார்கள்! இன்றும் தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென தெரியாது காத்திருக்கும் இதயங்களும் இருக் கின்றன! இதனை யாரும் மறுக்கவோ மறைக் கவோ முடியாது. ஆனால் காணாமல் போனோர், இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப் பட்டவர்கள் என்ற எந்தொரு வகைக்குள் ளும் ஒரு முஸ்லிம் பொதுமகன் கூட உள்ளடக்கப் பட வில்லை. இவை அமெரிக்கா பிரதிநிதிகளின் கண்களுக்கு தெரிவதில்லையா?
இலங்கையின் வரலாற்றை எடுத்து நோக்குமிடத்து ரணமாக பதிந்திருக்கும் முஸ்லிம்களின் பாதிப் புக்களின் வலிகளை மனிதா பிமானமுள்ள எவராலும் உணர்ந்துகொள்ளமுடியும்.
1833இல் ஆங்கிலேயரால் சட்டசபை முறை அறிமுகப் படுத்தப்பட்டது. 1835இல் அரசாங்க மொழி பெயர்ப் பாளராக சிங்களவர் தமிழர், மற்றும் பறங்கியர் இனங் களில் தலா ஒருவர் வீதம் மொத்தம் மூன்று உறுப் பினர்கள் இனரீதியில் நியமிக்கப்பட்டனர். இனரீதியான நியமனங்கள் 1835 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இலங்கையில் அறிமுகப்ப டுத்தப்பட்டதென்பது மற்றோரு முக்கிய விடயமாகும். இந்தச் சட்டசபையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவேண்டித் தொடர்ச் சியாகப் போரட்டங்கள் நடத்தப்பட்டன. இனரீதியான பிரதிநிதித்துவத்தின் ஆபத்தினை உணர்ந்ததாலோ என்னவோ 1833இல் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பில் திருத்தங்கள் கோரி தொடர்ச்சியாக பிரித்தானிய ஏகாதிபத் தியத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட காலம். 1910 -1915-இல் இக்கிளர்ச்சி தீவிரம டைந்திருந்தது. 1915இல் கிளச்சியின் உச்சமாக பெளத்த மத ஊர்வலம் ஒன்றை நடத்தும் போது குறிப்பிட்ட கம்பளை முஸ்லிம் பள்ளிவா சலைக் கடக்கும் சந்தர்ப்பத்தில் 100 யார் தூரத்துக்கு எந்தவித ஆரவாரமும் இன்றிச் செல்ல வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காது ஊர்வலத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையினர் செயற்பட்டுக் கொண்டனர். இதனால் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்க ளுக்குமிடையே மோதல்கள் உருப்பெற்றன.
மோதல்கள் எழுச்சியடைந்து கலவரமாக மாறியது. இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது கலவரம் இது என்பதோடு தனியே சிறுபான்மையினத்தவராக இருந்த முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட முதலாவது அடக்குமுறையென்பதும் குறிப்பி டத்தக்கது. இதன் போது பள்ளிவாயல்கள் தீயிடப்பட்டன. 35வரையிலான முஸ்லிம் உறவுகள் உயிரிழந்தன. பல முஸ்லிம் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.
வர்த்தக நிலையங்கள் கொள்ளையிடப்பட்டன. பலர் காயங்களுக்கு உள்ளானதோடு அவயங்களையும் இழக்க நேரிட்டது. முஸ்லிம்களின் இந்த முதல் இழப்பீடு தொடர்பில் அப்போதைய ஆங்கிலேய அரசோ அல்லது ஐக்கிய அமெரிக்காவோ தலையீடு செய்திருக்கவில்லை. வெறுமனே கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையிலடைத்துவிட்டு விடுதலை செய்திருந்தது.
அதன் தொடர்ச்சியாகப் பார்க்கையில் 1970ல் காலி, புத்தளம், மஹியங்களைப் பிரதேசங்களில் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் சூறையா டப்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப் பட்டன. 1974ல் மஹியங்களையில் உள்ள முஸ்லிம் கிராமத்திலிருந்து மக்கள் விரட்டப்பட்டு குடிசைகள் தீவைக்கப் பட்டன. 1976ல் புத்தளம் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப் பட்டனர். 1980இல் கொம்பனி வீதி பள்ளிவாசல் படுகொலை, 1982இல் காலியில் உள்ள துவத்தை என்னும் கிராம முஸ்லிம்கள் உடுபுடவையுடன் விரட்டியடிப்பு என்று காணப்பட்டன. நிலைமை 1990 மிக உக்கியரமடைந்தது.
மகாசபை ஆரம்பிக்கப்பட்டு அடக்குமுறை நிகழ்ச்சி நிரல் ஒன்று அங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்க மறுபுறத்தில் 1985இல் இருந்து வடக்கு கிழக்கில் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான தாக்குதல்கள் நடைபெற்றாலும் அது 1990 மிகத் தீவிரமடைந் திருந்தது. குறிப்பாக ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆகஸ்ட் 03 திகதி காத்தான் குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை, ஆகஸ்ட் 05 ஆம் திகதி அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை, ஆகஸ்ட் 06ஆம் திகதி அம்பாறை 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை, ஆகஸ்ட் 12 சம்மாந்துறை 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை, ஆகஸ்ட் 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படு கொலை, ஆகஸ்ட்-13 வவு னியா 9 முஸ்லிம்கள் படுகொலை அரங்கேறிக் கொண்டிருக்கையில் இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலாக இதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வடக்கை பூர்வீகமாகக் கொண்ட 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 24மணிநேர விடுதலைப்புலிகளின் காலக்கெடு விற்குள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டமை வரலாற்றில் ஒரு முக்கிய கருப்புள்ளியாகும்.
விடுதலைப்புலிகளிற்கு உதவியளிக்க கூட தயாராக இருந்த ஒரு சகோதர சமூகத்தை சிறு மனிதாபிமானமும் இன்றி தமக்கு சந்தே கத்திற்குட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துவிட்டுப் பின்னர் எஞ்சியோரை வெளியேற்றி வடக்கில் இனச்சுத்திகரிப்பையே விடுதலைப்புலிகள் நடத்தியிருந்தனர். மன்னார். முல்லைதீவு, வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதேசங்களில் இருந்து இரவோடு இரவாக ஒரு சிறு பொருளைக் கூட கையில் எடுக்காது வெற்றுக்கையாக மன கிலேசத்துடன் வெளியேறிய மக்கள் புத்தளம் சிலாபம் போன்ற பிரதேசங்களில் இன்று 23 வருடங்கள் கடந்த நிலையிலும் தாய் மண்ணுக்குத் திரும்பமுடியாத நாதியற்றவர்களாக அகதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு இன்று சொல் லொணாத்துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றர்.
உண்மையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு இன்றுவரை வீடு திரும்பாதிருக்கின்றமையும் அதேபோன்று முஸ்லிம்கள் மிலேச் சத்தனமாக வெளியேற்றப் பட்டமையும் மனித உரிமை மீறல்கள் இல்லையா? இதனைச் செய்பவர்கள் குற்றவாளிகளாக அப்போது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்குத் தெரிய வில்லையா? இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற தருணங்களில் எல்லாம் அமெரிக்கா என்ன செய்துகொண்டிருந்தது? கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அத்தகைய அமெரிக்காவே இன்று தமிழ்ச் சகோதர இனத்திற்காக குரலெழுப்பி வருகின்றது. இதற்கும் காரணம் இல்லாமலில்லை.
ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவிற்கு முஸ்லிம் இனத்தை சர்வதேச ரீதியாக முடக்க வேண்டியதொரு தேவைப்பாடு காணப்பட்டது. காரணம் உலகப் பொலிஸ்காரன் என மார் தட்டிக் கொண்டு அனைத்து நாடுகளின் இறைமையையும் தாண்டி தலையீடு செய்துவரும் அமெரிக்காவிற்கு முஸ்லிம் நாடுகளில் அவ்வாறான தலையீடுகளைச் செய்யமுடியாது போயிருந்தது. காரணம் முஸ்லிம்களுக்கென உச்சவரையறை கொண்ட தனியான இஸ்லாமிய ஒழுக்க சட்ட விழுமியங்கள் காணப்பட்டன. அத்துடன் கிடைத்தற்குரிய வளமான கனிய எண்ணெய் வளமும் பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் காணப்பட்டன.
இதன் காரணத்தால் சர்வதே செல்வந்த நாடுகளுக்கு நிகராக படிப்படியான வளர்ச்சியை முஸ்லிம்நாடுகள் பெற்றுவரலாயின. இதனால் தனக்கு நிகரான ஒரு சக்தி வளர்ந்து வருகின்றது. அத்துடன் இவ்வாறான நாடுகளில் இருக்கும் அரிய வளத்தினையும் தன்வசப்படுத்தி வேண்டும் என்ற எண்ணப்பாடு ஆரம்பத்திலிருந்தே இந்த ஏகாதிபத்தியத்திற்கு இருந்து வந்தது. இதன் விளையாகவே சர்வதேச பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்ற பெயரில் ஈரான், ஆப்கானிஸ்தான், யேமன் போன்ற முஸ்லிம் நாடுகளில் கால்பதித்து. ஏனைய நாடுகளில் அரேபிய வசந்தம் என்ற பெயரில் கிளர்ச்சிகளின் தோற்றத்திற்கு மூலகாரணியானது. அது மட்டுமன்றி ஒரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து ஆளில்லா விமானத்தாக்குதல்கள் என்ற அங்கத்தையும் தோற்றுவித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். இவ்வாறான முஸ்லிம்களுக்கெதிரான சர்வதேச நிகழ்ச்சி நிரலைக்கொண்டிருந்த அமெரிக்காவால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது எவ்வாறு குரல்கொடுக்க முடியும் அல்லது தலையீடு செய்யமுடியும். இதனால் தான் போலும் அமெரிக்கா கடந்த காலத்தில் அமைதி காத்துவிட்டது.
அவ்வாறான அமெரிக்கா தற்போது ஏன் தமிழர்கள் விடயத்தில் முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டும். இன்று யுத்தம் முடியும் வரை மெளனவிரத்தில் இருந்த அமெரிக்கா முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற செய்தி கிடைத்து இரண்டொரு மாதங்களில் இலங்கை மீதான கூடிய கவனத்தை செலுத்தியது. அதன் பிரதி பலிப்புத்தான் இந்த முதலைக்கண்ணீர், ஆம் இறுதி யுத்தம் நிறைவடைந்ததாக ஜனாதிபதி அறிவித்தவுடன் ஆசியாவின் ஆச்சரியமான பூமியாக இலங்கையை மாற்றியமைப்பதே அடுத்த இலக்கு என்ற அறிவிப்பையும் ஒருங்கே விடுத்திருந்தார். இதனால் பயங்கரவாத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு நாடு தனது பிடியில் நிச்சயமாக நிலைத்திருக்காது என்று அமெரிக்கா அச்சமடைந்து.
அடுத்து இலங்கையில் காணப்படும் அரிய வளங்களும் இயற்கை துறைமுகவசதியும் சர்வதேச ரீதியில் அமெரிக்காவிற்கு மிகத்தேவையான தொன்றாகவே இருக்கின்றன. அதன அடிப்படையில் இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு ஒன்று ஏற்படுகின்றது. மேலும் இலங்கையின் அபிவிருத்திப் பயணத்திற்கு இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கரம்நீட்டியிருப்பதையும் அமெரிக்க முற்றாக விரும்பியிருக்காது. காரணம், தற்போது பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அமெரிக்கா எதிர்காலத்தில் தடுமாறுமானால் இந்தியா, சீனா ரஷ்யா சர்வதேச ரீதியில் மிகப்பாரிய பலத்தை பெற்றுவிடும் ஆகவே அவ்வாறான நாடுகளுடன் இலங்கை இ¨ணைந்து செயற்படுவதும் அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆகவே தான் இலங்கை மீதான தனது பிடியை தக்கவைத்துக் கொள்வதற்கு வேறுவழிகள் ஏதுமற்ற நிலையிலே தான் தமிழ் சகோதர்களின் பிரச்சினையை தன் வீட்டுப்பிரச்சினையாக ஊதிப்பெருப்பித்துக் கொண்டிருக்கின்றது.
இது தான் அமெரிக்காவின் முதலைக்கண்ணீருக்கான காரணம் இதனை நன்கு தமிழ் சகோதர இனமும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது யுத்தம் முடிந்த சூழலில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு கடந்தகால கசப்புணர்வுகள் மறக்கப்பட்டு இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வைப்பெற்று நிரந்தர சமாதானத்தை நோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது. தற்போது யாரும் தனி ஈழத்தை கோரவில்லை. ஆகவே சிறுபான்மை இனங்களாகிய தமிழரும் முஸ்லிமும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியத்தின் சுயநல வலைக்குள் விழுந்துவிடாது, அதன் தலையீட்டுக்கு இடமளிக்காது செயற்படுவதே சிறந்தாகும்.
ரஹ்மத் மன்சூர்

பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக வாய் மூடி மௌனியாக இருக்கும் அதேவேலை கிளிப்பிள்ளை போன்று வெளிநாட்டுத் தூதர்களுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் 'தலைவரை புகழ்' பாட நியமிக்கப்பட்டிருக்கும் ஏனைய அமைச்சர்களான பௌசி, அஸ்வர் போன்றோர் இந்தச் செய்தி பற்றி மாற்றுக்கறுத்து வெளியிடுவார்களா என்பதை நாம் அறிந்து கொள்ள ஆவலாயுள்ளோம்.
ReplyDelete