புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய நூற்றாண்டு விழா
பு/உமர் பாரூக் மகா வித்தியாலயமானது புத்தளம் கல்வி வலயம், முந்தல் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புளிச்சாக்குளத்தில் அமைந்துள்ளது. 1913 பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையானது எதிர்வரும் மார்ச் மாதத்தில் தனது நூற்றாண்டு விழாவினை கொண்டாடவுள்ளது.
மார்ச் 04-05-06ஆம் திகதிகளில் இதன் நிமித்தம் அறிவியல் கண்காட்சி கலை நிகழ்ச்சி என்பன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மற்றும் பாம்புகளுடன் கூடிய நடன நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன. மிருகக் காட்சி சாலை அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிகழ்வில் வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களுடன் மாகாண சபை உறுப்பினர்களும் மாலை நிகழ்வில் பாராளுமன்ற அமைச்சர்களுடன் பிரதி அமைச்சர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வுகளின் போது பாடசாலையின் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் பாடசாலையின் உயர்வுக்காக பாடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளனர். மேலும் பாடசாலைக்குப் பல் துறைகளிலும் பெருமை தேடித்தந்த மாணவர்களுடன், பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுச் சென்றவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு பாராட்டப்படவுள்ளனர்.
இதன் நிமித்தம் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அயராது பாடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பாடசாலையின் அதிபர் பாரி அவர்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்.




Post a Comment