'வாழ்க்கை வெறுத்து விட்டது' என பேஸ்புக்கில் விரக்தி வெளியிட்ட பெண் தற்கொலை
(India) பேஸ் புக்கில் நான் இந்த வாழ்க்கையை வெறுக்கிறேன் என்ற வாசகத்துடன் தனது புகைப்படத்தை வெளியிட்ட இளம்பெண், நேற்றுமுன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றின் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும், காதல் தோல்வி, வெறுப்பு போன்ற காரணங்களால் இளைஞர்களும் இளம்பெண்களும் தங்கள் மன அழுத்தத்தை பேஸ் புக்கில் வெளியிட்டு தவறான முடிவுகளை எடுக்கின்றனர். மத்திய பிரதேச மாநிலத்திலும் அதுபோல் 25 வயது இளம்பெண் பேஸ் புக்கில் தனது மன அழுத்தத்தை வெளியிட்ட பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ஆர்த்தி ஸ்ரீவாஸ் (25). இவருடைய தந்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய வேலை கருணை அடிப்படையில் தாய் மம்தாவுக்கு கிடைத்தது. தனியார் கம்பெனியில் தாய் வேலை செய்து வருகிறார். ஆர்த்தியும் தனியார் கம்பெனியில் வேலை செய்துள்ளார். கடந்த மாதம் வேலையை விட்டு விட்டார் ஆர்த்தி. அப்போதில் இருந்து மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி பேஸ் புக்கில், இந்த வாழ்க்கையை நான் வெறுக்கிறேன் என்ற வாசகத்துடன் தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் ஆர்த்தி. அதை அவருடைய நண்பர்கள் சிலர் பார்த்து, வெறுக்கிறேன் என்ற வார்த்தையை எடுத்து விடுமாறு ஆர்த்திக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், ஆர்த்தி ஏன் அப்படி குறிப்பிட்டார் என்பது பற்றி தாய் மம்தாவும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதற்கு பதில், ஆர்த்தி வெளியிட்ட புகைப்படம் மற்றும் வாசகத்துக்கு மம்தாவும் சில நண்பர்களும் லைக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு ஆர்த்தி தற்கொலை செய்து கொண்டார். இதனால் மம்தா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆர்த்தியின் பேஸ் புக்கை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து உளவியல் நிபுணர்களும், மனநல ஆலோசகர்களும் கூறுகையில், மன அழுத்தத்தை இப்போதைய இளைஞர்களும் இளம்பெண்களும் பேஸ் புக்கில் அதிகமாக வெளியிடுகின்றனர். ஆர்த்தியின் வெறுக்கிறேன் கமென்ட்டை அவரது தாய் சீரியசாக எடுத்துக் கொண்டு அவரிடம் பேசியிருந்தால், தற்கொலையை தடுத்திருக்க முடியும் என்கின்றனர்.

Post a Comment