கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் புதிய டிவிசன்
இராணுவம் புதிதாக உருவாக்கிய 24வது டிவிசனின் புதிய தலைமையகம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மல்வத்தையில் இராணுவத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு படைத் தலைமையகத்தின் கீழ் இராணுவத்தின் 24வது டிவிசன் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருகோணமலையில் 22வது டிவிசனும், மட்டக்களப்பு குடும்பிமலையில் (தொப்பிகல) 23வது டிவிசனுமாக இராணுவத்தின் இரண்டு டிவிசன்கள் கிழக்கில் நிலைகொண்டிருந்தன.
இந்தநிலையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள மல்வத்தையில் புதிதாக உருவாக்கப்பட்ட 24வது டிவிசனின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று வெலிகந்தையில் உள்ள கிழக்குப் படைத் தலைமையகம், குடும்பிமலையில் (தொப்பிகல) உள்ள 23வது டிவிசன் தலைமையகம் ஆகியவற்றுக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க, மல்வத்தையில் உள்ள 24வது டிவிசனுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போதே அவர், 24வது டிவிசனின் புதிய தலைமையகத்தை திறந்து வைத்துள்ளார். போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவம் உருவாக்கியுள்ள முதலாவது டிவிசன் தலைமையகம் இதுவாகும்.

Post a Comment