மக்கள் பீதி - நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டும் கரடிகள்
இந்தியா குன்னூர் அருகே இரவு நேரங்களில் கிராமத்துக்குள் வரும் கரடிகள், வீடுகளின் கதவை தட்டி அட்டகாசம் செய்கின்றன. கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலக்கம்பை, குன்னூரில் கரடிகள் அதிகம் சுற்றி திரிவதால் பொது மக்கள் பெரிதும் அச்சமடைந்து உள்ளனர். குன்னூர் அருகே காசோலை கிராமத்துக்குள் இரவு நேரத்தில் கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி உள்ளது.
பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரத்நகர் பகுதியில் 2 கரடிகள் இரவு நேரத்தில் உலா வருகிறது. அவ்வப்போது வீடுகளின் கதவுகளை பயங்கரமாக தட்டி அட்டகாசம் செய்கின்றன. நேற்றிரவு இப்பகுதியில் உள்ள ரங்கம்மாள், மருதாயி ஆகியோரின் வீட்டுக் கதவுகளை கரடிகள் தட்டின. இதை ஜன்னல் வழியாக பார்த்த அவர்கள் அலறி கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் தீப்பந்தங்களுடன் வந்து ஒருமணி நேரம் போராடி கரடிகளை விரட்டினர்.
கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட கோரி திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த சாலை ராணுவ முகாமுக்கு செல்லும் முக்கிய பாதை என்பதால் ராணுவ அதிகாரிகள் விரைந்து வந்து மறியல் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வனத்துறையினருடன் பேசி கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Post a Comment