9 A சித்தி பெற்ற 180 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு - முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் ஏற்பாடு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் 9ஏ சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வழமைபோல் இம்முறையும் முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் அஹமட் முனவ்வர் தலைமையில் கொழும்பு நெலும் பொக்குன அரங்கிற்கு முன்பாகவுள்ள விகார மஹாதேவி பூங்காவின் திறந்த வெளியரங்கில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முற்றிலும் கல்விக்கு முன்னுரிமையும் அதற்கான ஊக்கத்தையும் கொடுக்கும் ஒரு வித்தியாசமான முயற்சியாக கல்வியில் பின் தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களை முன்னேற்றுவதற்கான பாரிய முயற்சியை முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் செய்து வருகின்றது என கௌரவிப்பு நிகழ்வினை நடாத்துவது தொடர்பான கலந்துரையாடலின்போது அமைப்பின் தலைவர் அஹமட் முனவ்வர் தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக ஒன்பது பாடங்களிலும் அதி விஷேட பெறுபேற்றை (9ஏ) சித்திகளைப் பெற்ற முஸ்லிம் மாணவர்களை அவர்களின் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் பணப்பரிசு உள்ளிட்ட பெறுமதியான பரிசில்களையும் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தவகையில் கடந்த 2008 ஆம் ஆண்டில் 38 மாணவர்களும், 2009 இல் 55 மாணவர்களும், 2010 இல் 85 மாணவர்களும், 2011 இல் 105 மாணவர்களும், 2012 இல் 135 மாணவர்களும் 2013 இல் 180 மாணவர்களும் அகில இலங்கை ரீதியாக க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலம் ஏ சித்தி பெற்றள்ளதுடன் கடந்த வருடங்களில் ஒரு மாணவருக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் பணப்பரிசுடன் ஏனைய அனைத்தும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களாலும் பெற்றோர்களாலும் தொடராக வரவேற்புக் கிடைப்பதால் மேற்படி திட்டத்தை தொடரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி எமது திட்டம் ஒரு சமுக உணர்வுடன் மேற் கொள்ளப்படும் ஒரு முயற்சியாகவும் இது அமைவதுடன் வருடா வருடம் மாணவர்களின் தொகை அதிகரிப்பதால் அதற்காக பாரிய தொகை தேவைப்படுவதாகவும் தமது மேற்படி திட்டத்தை சிறப்பாக முன்னேடுத்துச் சென்று முஸ்லிம் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் தமது பணிக்கு நலன் விரும்பிகள் தங்களால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்கினால் அது மாணவச் செல்வங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என அமைப்பின் தலைவர் அஹமட் முனவ்வர் தெரிவித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பரில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் மாணவிகள் 140 பேரும் மாணவர்கள் 40 பேருமாக மொத்தமாக சுமார் 180 மாணவர்கள் இம்முறை 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் மேற்படி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் பணப்பரிசு, சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள், ஆண் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், பெண்மாணவிகளுக்கு பெறுமதியான கல்குளேட்டர்கள் மற்றும் பெறுமதியான புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட விருக்கின்றதாக அமைப்பின் தலைவர் அஹமட் முனவ்வர் தெரிவித்தார்.
9ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ள கௌரவிப்பு நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஏ.எம். இஷாக்கும், கௌரவ அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்கவும் விஷேட அதிதியாக சிங்கப்பூரின் புதிய நிலா சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், சிங்கப்பூர் நாணயமாற்றுச் சங்கத் தலைவரும் பிரபல வர்த்தக்துறை ஆலோசகருமான எம். ஷெய்த் ஜஹாங்கிர், பரீட்சை ஆணையாளர் ஏ.எஸ்.முஹம்மத், மத்தியமாகாண கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர் ஆர்.பாலசுப்ரமணியம் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment