Header Ads



முஸ்லிம்களின் பிரச்சினைகள் கண்டறியப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்

(சத்தார் எம் ஜாவித்)  

இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறுபட்ட தேவைப்பாடுகளுடனே தமது வாழ்க்கையை கொண்டு நடாத்தகின்றனர். குறிப்பாக இலங்கையில் ஒவ்வொரு பகுதிகளிலும் வாழும் முஸ்லிம் மக்கள் அவர்கள் வாழும் அவ்வப் பகுதிகளில் பலவாறான தேவைப்பாடுகளை உடையவர்களாக காணப்படுவதுடன் சில வேளைகளில் தமது அத்தியாவசிய தேவைகளைக் கூட பெற்றுக் கொள்ள அல்லது நிறைவேற்றிக் கொள்ள முடியாததொரு துர்ப்பாக்கிய நிலையிலேய காணப்படகின்றனர்.

வடக்கு மக்களுக்கு ஒருவிதமான பிரச்சினைகளும், தேவைப்பாடுகளும் இருக்கும் அதேவேளை தென்பகுதியையோ அல்லது மத்திய பகுதியையோ எடுத்துக் கொண்டால் அப்பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு இன்னொருவிதமான பிரச்சினைகள் காணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பொதுவான பிரச்சினைகளாக மத சம்பந்தமான அல்லது மத நிந்தனைப் பிரச்சினைகளும் கூட பூதாகாரமாக தோற்றம் பெற்ற வருவதும் அன்மைக்கால சம்பவங்கள் மூலம் முஸ்லிம் சமுகம் எதிர் கொண்டு வரும் பாரிய பிரச்சினைகளாகும்.

பிரச்சினைகள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பதனைவிட அவை எற்படாது இருப்பதற்கான மூலங்களைக் கண்டறிந்து அவற்றில் இருந்து மக்கள் மீள்ச்சி பெறுவதற்கான வழிவகைகளை காணவேண்டிய தேவைப்பாடே சமுகத்திற்குத் தேவையான விடயமாகும்.

இவ்வாறான ஒரு சமுகத்தின் பிரச்சினைகளை தீர்க்க யார் யார் முன் நின்று செயற்பட வேண்டும்  என்பதில் கூட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரியதொரு ஐயப்பாடாகும். புpரச்சினைகள் வரும்போதெல்லாம் மக்கள் பிரதி நிதிகள் மௌனம் காத்த அல்லது ஒளிந்த நிமைகைளே அதிகம் காணப்பட்டனவே தவிர எவருமே துணிச்சலுடன் முன்வந்து செயற்படுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே இன்று வரையான நிலைமைகைளாகும்.

வடமாகாண முஸ்லிம் மக்களைப் பொருத்தவரை அவர்கள் தத்தமது பூர்வீகங்களை மட்டுமல்லாது அனைத்தையுமே இழந்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கும் போல் வாழ்ந்த தமிழ் மற்றம் முஸ்லிம் மக்களை கொடிய யுத்தம் அவர்களின் இயல்பு வாழ்க்கைகளை சின்னாபின்மாக்கி பிரித்தது. இதன் காரணமாக உடுத்திய உடையுடன் கால வரையறையின்றி வடமாகாணத்தை விட்டு விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட அம்மக்களில் பெரும்பாலானவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைகளுடன் அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் அகதிகளாக தாண்டவமாடுகின்றனர்.

குறிப்பாக இருப்பிடம், தொழில் வாய்ப்புக்கள், கல்வி, சுகாதாரம் போன்ற  உள்ளிட்ட பல விடயங்களில் பிரச்சினைகள் இன்னும் தொடராகவே இருந்து வருகின்றன.

இந்த மக்களின் மேற்படிப் பிரச்சினைகள் கடந்த 23 வருட காலமாக இனங்காணப்பட்டு தீர்த்து வைக்கப்படாதது மட்டுமல்லாது அவர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த பல பிரச்சிணைகள் கூட கவனத்திற் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்ட சம்பவங்களே அதிகம் என அந்த மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதேவேளை இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களில் குறித் ஒரு பகுதியினர் மீள் குடியமர்த்தப்பட்டும் அவர்களின் பல பிரச்சினைகள் இன்னும் பூரணமாக நிவர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை என்ற நிலைமைகள் ஒரு புறம் மறுபுறம் மீள் குடியமர்ந்த பகுதிகளில் சில அரச அதிகாரிகளாலும், சில அரசியல் பிரமுகர்களாலும் தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளச் செல்லும் சந்தர்ப்பங்களில் அங்கு அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அல்லது கவனஞ் செலுத்தப்படாத நிலையில் கவலையுடன் திரும்பும் நிர்க்கதியான நிலைமைகளும் கூட நாளாந்தம் நேரடியாகவும், மறைமுகமாகவும்  இடம்பெற்று வருகின்றமை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களால் குற்றச்சாட்டுக்களும் அவ்வப்போது சுமத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இதேபோல் தென்பகுதி உள்ளிட்ட இடங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் வீட்டுப் பிரச்சினைகள், தொழிற் பிரச்சினைகளில் பின்தங்கிய நிலைமைகளுடன் வாழ்கின்றனர். அத்துடன் கிடைக்க வேண்டிய பல சலுகைகள் மறுக்கப்பட்டு மாறாக பெரும்பான்மையினருக்குப் போய்ச் சேரும் நிலைமைகளும் ஒரு சில இனவாத அரசியல் வாதிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வருவதுடன் தேவையற்ற பிரச்சினைகளையம் கூட உருவாக்கி விடுகின்றனர்.

இதன் காரணமாக பல அப்பாவி முஸ்லிம் குடும்பங்கள் ஈடுகொடுக்க முடியாத சொல்லொனாத் துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

வடகிழக்குப் பகுதிகளில் முஸ்லிம் மக்களின் பூர்வீக காணிகளும் வீடுகளும் கூட மாற்றுச் சமுகத்தினரால் அபகரிக்கப்பட்டு கொண்டிருப்பதுடன் அவை இதுவரை மக்கள் நம்பியுள்ள அரசியல் தலைமைகளாளோ அல்லது அரசாலோ தடுத்து நிறுத்தவோ அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வரப்படவோ தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படவில்லை என்பதும் கூட முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினைகளாக காணப்படகின்றன.

இதேவேளை முஸ்லிம்களின் காணிகளுக்குள் பெரும்பான்மையைச் சேர்ந்த இனவாதக் கும்பல்கள் சட்டவிரோதமான முறையில் தத்தமது மதச் சின்னங்களை நாட்டுவதும், புதைப்பதுமான போன்ற  புதுவிதமான செயற்பாடுகளிலும் கூட ஈடுபட்டு வருதுடன் சமயத் தளங்களை அகற்றுவதற்கு அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வரும் சம்பவங்களும் தொடர்கின்றன.

மேற்படிப் பிரச்சினைகளுக்கு தொடராக முகங்கொடுத்து வரும் ஒரு சமுகத்தின் யதார்த்தமான நிலைமைகளை கண்டு கொள்ள வேண்டியவர்கள் யார்? என்பதற்கான விடைகளை காணவேண்டி நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் எதனையும் தெரிந்திராதது போன்று மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருப்பதானது முஸ்லிம்களுக்கு பாரியதெரு சவாலக இன்று தோற்றம் பெற்றுள்ளது.

இங்கு அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்பதில் மக்களுக்கு இருந்த நம்பிக்கைகளும் என்னங்களும் நாளாந்தம் செயலற்றுப் போய்விட்டன. அரசாங்கம் சிறுபான்மை என்றாலே சற்று பின் நோக்கிய செயற்பாட்டு நடவடிக்கைகளையே கடைப்பிடிக்கின்றன. காரணம் அரசுக்க துணிச்சலாக அழுத்தங்களை அல்லது கோரிக்கைகளை கொடுக்கக் கூடிய முஸ்லிம் தலைமைகள் அல்லது சமயத் தலைமைகள் இல்லை என்பதே முக்கிய விடயங்களாகும்.

அரசாங்கமும் அதன் ஆட்சியாளர்களும் உண்மையான இதய சுத்தியுடன் முஸ்லிம் மக்களும் இந்த நாட்டின் மக்கள் என்று கருதினால் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்பட்டிருக்காதல்லவா?.

முஸ்லிம் தலைமைகளை அல்லது சமயத் தலைமைகளை எடுத்துக் கொண்டால் கடந்த கால அனுபவங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது அதிகமாக சுயநலப்போக்குகள் கொண்டவர்களையும்   அரசுக்கு அடிமைப்பட்டவர்களையும் காணக்கூடிய காலமாக தற்போதைய அரசியல் கள நிலவரம் இருப்பதாக  பாதிக்கப்பட்டு வரும் மக்கள் குறை கூறுகின்றனர்.

இவ்வாறானவர்கள் தமது சமுகத்தின் பிரச்சினைகளை என்றுமே முன்னெடுத்தச் செல்லமாட்டார்கள் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கமாகும். எனினும் இந்த நாட்டு மக்கள் என்ற வகையில் அம்மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய கடப்பாடும், கடமையும் எல்லாவற்றையும் விட அரசுக்கு முக்கியமானதாகும்.

இலங்கையின் கடந்த கால மூன்று தஸாப்தத்திற்கும் மேற்பட்ட துன்பியல் வரலாற்றிற்கு முக்கிய காரணம் சிறுபான்மைச் சமுகமான தமிழ் சமுகத்திற்கு கொடுக்கவேண்டிய அரசியல் ரீதியான சலுகைகளையும், உரிமைகளையும் கொடுக்காது மறுத்தமையின் வெளிப்பாடாகவே மேற்படி துன்பியல் நிலைமைகளை முழு இலங்கை மக்களுமே அனுபவித்து வரலாறாகும்.

எனவே தற்போது ஏதோ ஒரு வகையில் அந்த துன்பியல் நிலையில் இருந்து மீண்டுள்ள இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கவேண்டிய சகலவற்றையும் கொடுக்கவேண்டிய கடப்பாடு அரசுக்கே உள்ளது.

ஆனால் யுத்தம் முடிவடைந்து இன்னும் இனப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தில் இலங்கை இன்னும் முன்வரவில்லை என்ற கோரிக்கைகளும் குற்றச் சாட்டுக்களும் சர்வதேசம் வரை தொடர்ந்த வன்னமேயுள்ளன.

இவவாறான ஒரு தர்ம சங்டமான நிலைமைகள் ஏற்பட்டிருக்கும்போது இந்த நாட்டின் இரண்டாவது சிறுபான்மையாக காணப்படும் முஸ்லிம் மக்கள் பலவாறான பிரச்சினைகளுடன் வாழும்போது அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டத்தில் அவற்றை கண்டு கொள்ளாது இருப்பதும் இலங்கையின் எதிர் கால சமாதானத்தின் மீது மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இலங்கையில் காணப்பட்டு வரும் இன ரீதியான பிரச்சினைகள் தற்போது வழுப்பெற்று சிறுபான்மைச் சமுகத்தினை மத ரீதியாகவும் நசுக்கும் நிலைமைகளும் நாளுக்கு நாள் அதிகரிப்பதானது இலங்கையின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டில் சர்வதேசம் கூட சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமைகள் அதிகரித்த வன்னமேயுள்ளன என்பதே யதார்த்தம்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஒவ்வொரு சமுகத்திற்கும் அரசாங்கத்தால் வழங்க்கபட வேண்டிய கடமைகளையம், சலுகைகளையும் வழங்கவேண்டிய வகையில் வழங்கி ஒரு அமைதியான இலங்கையை கட்டி எழுப்பவேண்டிய கடப்பாடு ஆட்சியாளர்களுக்கே உள்ளது என்பதனை கருத்திற் கொண்டு செயற்படும்போது எதிர் காலத்தில் சமுகங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு ஒரு சமாதனமான ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்பலாம்.

மேற்படி நிலைமைகளை சிரத்தையுடன் கவனத்திற் கொண்டு சமூக, சமய பிரச்சனைகள் எற்படாத வன்னம் அனைத்து மக்களையும் இந்த நாட்டின் மக்கள் என்ற என்னக் கருவுடன் செய்றபட வேண்டியவர்கள் அரசியல் தலைமைகளும், அதனை பிரதி நிதித்துவப்படுத்தும் பங்களாளர்களினதும் கடமையாகும்.

எனவே மக்கள் பிரதி நிதிகள் இனியாவது சமுகங்களை ஒற்றுமைப்படுத்தி சமாதானமான ஒரு இலங்கையை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

No comments

Powered by Blogger.