ஜனாதிபதி ஆணைக்குழு மூலமே வடமாகாண முஸ்லீம்களின் நீண்ட கால இடம் பெயர்வுக்கு நீடித்த தீர்வு சாத்தியம்
ஜெனீவாவில் கடந்த 26 மற்றும் 27ம் திகதிகளில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான மாநாட்டின் 6வது அமர்வில் வட மாகாண முஸ்லீம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 23 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அது தொடர்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் சுகூத் பஸ்லீம் விசேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உரையின் தமிழ் வடிவம் வருமாறு;
‘தலைமை அம்மையீர் அவர்களே,
எனக்கு உரை நிகழ்த்த சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது பெயர் சுஹூத் பஸ்லீம். நான் 1990ம் ஆண்டு இலங்கையின் வடமாகாணத்திலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மதச்சிறுபான்மையிலும் சிறுபான்மையான முஸ்லீம் சமூகம் சார்பாகவே உரையாற்றிக்கொண்டிருக்கின்றேன்.
குறித்த சமூகத்தின் மிகவும் இன்றியமையாத அக்கறை கொள்ளக்கூடிய விடயங்களில் ஒன்று 51,52 மற்றும் 53 ஆம் இலக்கப் பரிந்துரைகள் தொடர்பான பலவந்த வெளியேற்றத்தின் பாதிப்புகளாக உள்ளன.
1990ம் ஆண்டு 75000 ற்கும் மேற்பட்ட வடமாகாணத்தின் முஸ்லீம்கள் அவர்களது சொந்த மாவட்டங்களிலிருந்து ஒரு குறுகிய கால அவகாசத்திற்குள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். இலங்கையின் சுமார் 26 வருட இனப்பிரச்சினையில் பாரிய ஒரு மனித உரிமை மீறலாக இதுவுள்ளதுடன், இவர்களுக்கான நீடித்த தீர்வும் முரண்பாட்டுக்குப்பிந்திய பிரதான சவால்களில் ஒன்றாகவுள்ளது. பலவந்த வெளியேற்றத்தினால் மனித உரிமை ரீதியாக இவர்கள் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளர்கள். போருக்குப் பிந்திய நிலையில் 2009ம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்த்தவர்களுக்கு அவர்களது பூர்வீக இடங்களில் மீள்குடியேற்றமானது சாத்தியமான நிலையில், வட மாகாண முஸ்லீம்களின் மீள்குடியேற்றமானது தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது. அவர்களின் மீள்குடியேற்றமானது இலங்கையின் வடபகுதியில் வாழும் இனங்களுக்கிடையில் மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை, அவர்களுக்கான சமமான வளப்பகிர்வு, காணி,வீடமைப்பு, தொழில்வாய்ப்புச்சந்தர்ப்பங்கள் என்பவற்றுடன் அவர்களது சகல உரிமைகளையும் உறுதிப்படுத்துவதாகவே அமைய வேண்டும்.
அரசாங்கத்தின் வடமாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்கான அபிவிருத்தி முன்னெடுப்புகளை வரவேற்கும் அதே நேரம், வடமாகாண முஸ்லீம்களின் நீண்ட இடம்பெயர்வை முடிவிற்கு கொண்டுவரும் நீடித்த தீர்வானது ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினூடாகவே பெறப்படக் கூடியதாகவுள்ளதை வலியுறுத்துவதுடன், இலங்கை அரசாங்கத்தால் அமையப்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் “உள்நாட்டில் இடம்பெயர்ந்த முஸ்லீம்களுக்கான மீள்குடியேற்றத்திற்கான நீடித்த தீர்வுகள் ஒரு சீரிய அரச கொள்கை ஒன்றினூடாக அடையக்கூடியது” என்ற பரிந்துரையையும் ஆதரிக்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபை, அபிவிருத்தி நிறுவனங்கள், புலம்பெயர்ந்து வாழும் முஸ்லீம்கள், முஸ்லீம் நிறுவனங்கள் விசேடமாக முஸ்லீம் நாடுகள் என்பன பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஒரு முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைகளை ஆழமாக உணர்ந்து, அவர்களது மீள்குடியேற்ற முன்னெடுப்புக்கு பெறுமதியான பங்களிப்புகளை வழங்க முன் வரவேண்டும் என விரும்புகிறோம்.
இறுதியாக, இலங்கையில் இனரீதியான சிந்தனைகளை தோற்கடித்து இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேசத்தின் அர்த்தமுள்ள பங்களிப்பையும் வரவேற்கின்றோம்.
நன்றி’.

Post a Comment