Header Ads



இஸ்லாத்தை நாம் தவறாகவே புரிந்து வைத்திருந்தோம் - பின்லாந்து பிரதமர்

(A.J.M மக்தூம்)

ஃபின்லாந்தில் இயங்கி வரும் இஸ்லாமிய ஒன்றியம் அதன் தலை நகரமான ஹெல்சின்கியில் “இஸ்லாம் எக்ஸ்போ” எனும் தலைப்பில் மூன்றாவது முறையாகவும் இஸ்லாமிய கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இவ்வருடம் ஏற்பாடு செய்யப்  பட்ட குறித்த கண்காட்சியில் ஃபின்லாந்து பிரதமர் ஜிர்கி காடனன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அங்கு உரை நிகழ்த்திய பிரதமர் குறிப்பிடுகையில்,

“இஸ்லாத்தில் கருத்து சுதந்திரம் முக்கிய இடம் வகிப்பதை நான் உணர்கிறேன். ஃபின்லாந்தை பொறுத்த மட்டில் சுமார் 30 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் இயங்கி வருகின்றன, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம், இந்த அமைப்புக்கள் அனைத்தும் ஒற்றுமையுடன் சேவை புரிவதும், தமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப்பதும் அவசியமாகும்”

“ஐரோப்பிய கண்டத்தை உற்று நோக்கினால் இஸ்லாத்தை அவர்கள் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர். எம்மிடம் கூட இஸ்லாம் பற்றிய ஒரு குறுகிய பார்வையே உள்ளது, முழு ஃபின்லாந்து சமூகத்தின் நிலையும் அதுதான்”. என குறிப்பிட்டார்.

குறித்த கண்காட்சியில் "பஹ்ரைன்", "ஐக்கிய அரபு இராஜ்யம்", "மியான்மர்", "பாக்கிஸ்தான்",  "சவுதி அரேபியா" மற்றும் "துருக்கி" உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

ஐரோப்பியா நாடுகளில் பரப்புரை செய்யப் பட்டு வரும் இஸ்லாம் பற்றிய அச்சம் ( Islamophobia) பற்றிய தெளிவை ஏற்படுத்தவும், முஸ்லிம் வாலிபர்களுக்கு அந்நிய சமூகத்தாருடன் சகவாழ்வு வாழ்வதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஊட்டவுமே குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது என இஸ்லாமிய ஒன்றியத்தின் உத்தியோக பூர்வ பேச்சாளர் பிலால் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.