இந்தியா தொடர்பில் ராஜபக்ச அரசாங்கம் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை - JVP
இந்தியா தனது நாட்டின் தேச நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதுடன் இலங்கை தலைவர் பதவிக்காக சகலவற்றையும் தானமாக வழங்கி வருகிறது என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றம் சுமத்தினார். பத்தரமுல்லை, பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் 11-11-2013 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பங்கை இந்திய கைப்பற்றியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு வரப் போவதில்லை என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்து விட்டார். இந்தியா, இலங்கையின் பொருளாதார , அரசியல், போர் ரீதியான நிகழ்ச்சி நிரலை கடைப்பிடிப்பது போன்று ஏனைய அயல் நாடுகள் தொடர்பிலும் கடைப்பிடித்து வருகிறது.
1987ம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கையை ஏற்படுத்த விமானத்தில் இருந்து பருப்பு போட்டதில் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மூலம் இது தெளிவாகியுள்ளது. அதேபோன்று இந்தியா தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொதுநலவாய மாநாட்டை பயன்படுத்திக் கொண்டது.
இலங்கை அரசாங்கத்தை மண்டியிட வைத்து அவ்வப்போது தனது கொடுக்கல் வாங்கல்களை செய்து கொண்டது. இதனால் மாநாட்டுக்கு வந்து இந்தியா கொண்டு செல்ல இலங்கையில் எதுவும் மீதமில்லை. சம்பூர் அனல் மின் நிலைய உடன்படிக்கை, திருகோணமலை பொருளாதார வலயம், பலாலி விமான நிலைய புனரமைப்பு, வடக்கில் ரயில் பாதை அமைப்பு என சகல உடன்படிக்கைகளையும் இந்தியா செய்து கொண்டு விட்டது.
இந்த நிலையில் இந்தியா தற்பொழுது இலங்கைக்கு அரசியல் ரீதியான அழுத்தங்களை கொடுத்து கொண்டிருக்கின்றது. இந்தியா தனது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இலங்கை பற்றி கவலைப்படுவதில்லை. நாம் எமது தேசிய நலன் கருதியே செயற்படுகிறோம் என்று இந்தியா கூறுகிறது. இதனால் இலங்கைக்கு தலைமைத்துவம் கிடைக்கும் மாநாட்டுக்கு இந்தியாவுக்கு வரவேண்டிய அவசியமில்லை. இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களுக்கு இதனை புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.
கடந்த மாதம் 9ம் திகதி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவுக்கு சென்று தனிப்பட்ட ரீதியில் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்தார். கடந்த வாரத்தில் உப ஜனாதிபதி அனுப்பி வைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்க நேர்ந்தது. எனினும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உப ஜனாதிபதி ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்று ஏற்கனவே தீர்மானங்களை எடுத்து விட்டனர்.
இந்தியா தனது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எடுத்த முடிவுகள் தொடர்பில் வரலாற்று முழுவதும் எமக்கு அனுபவங்கள் உண்டு. எனினும் ராஜபக்ச அரசாங்கம் அவற்றில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை.
இறுதி முடிவாக சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும், சில நாடுகள் கவலை தெரிவித்தும் மாநாட்டில் கலந்து கொள்ளாது புறக்கணிப்பதாக அறிவித்தன. இதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல் இறையாண்மை, முக்கியத்துவம் என்பன இல்லாமல் செய்யப்பட்டு விட்டன. இந்திய தனது தேச நலன் குறித்து சிந்திக்கின்றது. எனினும் இலங்கை தனது தேசிய நலன், அரசியல் நலன் குறித்து சிந்திப்பதில்லை. தலைவர் நாற்காலி எப்படி கிடைக்கும் என்பதையே சிந்திக்கின்றது.
இலங்கையை பலவீனப்படுத்தும் மாநாட்டுக்காக சகலவற்றையும் தானம் செய்து வருகிறது. நாட்டை கடனாளியாக மாற்றியுள்ளதுடன் இலங்கை பொருளாதாரத்தின் மிகப் பெரிய பங்கை இந்தியா கைப்பற்றிக் கொண்டுள்ளது.
இலங்கை தற்பொழுது சர்வதேச நாடுகள், ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா ஆகியன எதிரில் தரம் தாழ்த்தப்பட்டு விட்டது. இந்தியா தனது நாட்டின் அழுத்தங்கள், அரசியல் இறையாண்மை ஆகியவற்றை கவனத்தில் கொள்கிறது. ஆனால் இலங்கை நாற்காலிக்காக சகலவற்றையும் தரம் தாழ்த்து கொள்கிறது என்றார்.
.jpg)
Post a Comment