Header Ads



அரசியல் அதிகாரங்களை தம்வசப்படுத்தியுள்ளவர்கள், இந்தப் பாவத்துக்காகத் திட்டித் தீர்க்கப்படுவார்கள்...!

(ஹனீக் அஹமட்)

வட்டமடு, முறானை வட்டி, கொக்குளுவை வயல் நிலங்களில் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வந்தவர்கள் - தங்கள் வயல்களுக்குச் செல்ல விடாது பொலிஸாரினால் தடுக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் விவசாயமும், பயிர்ச் செய்கையும் ஊக்குவிக்கப்படுகின்றன என்று அரசாங்கம் செய்துவரும் பிரசாரமும் பொய்யாகியுள்ளது. ஆனாலும், இப் பிராந்தியத்தில் அரசியல் அதிகாரங்களை தம்வசப்படுத்தியுள்ளவர்கள் இந்தப் பிரச்சினையில் அலட்சியமாகவே உள்ளனர். இவ்வாறு நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் பரம்பரை பரம்பரையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சாபத்துக்கு ஆளாக நேரிடும்.

இவ்வாறு அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், மு.காங்கிரசின் ஊடகப் பணிப்பாளருமான அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார். 

வட்டமடு, முறானை வட்டி, கொக்குளுவை பகுதிகளிலுள்ள காணிகளில் விவசாயம் செய்ய விடாமல் பொலிஸார் தடுத்துவரும் செயற்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வட்டமடு விவசாயிகளின் பிரச்சினையானது, நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டக் கதையாகிப் போய் விடக் கூடாது. விவசாயம் செய்வதற்கென காணி அனுமதிப் பத்திரங்களைப் பெற்று கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தமது காணிகளில் விவசாயம் செய்து வந்தவர்களை, தற்போது விவசாயம் செய்ய முடியாமல் பொலிஸார் தடுத்து வருகின்றனர். 

பெரும்போக வேணாண்மை செய்கின்ற காலம் கடந்து செல்கின்றது. இவ்வேளையில் வட்டமடு, முறானை வட்டி, கொக்குளுவை வயல் நிலங்களில் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள் அவர்களின் வயல்களுக்குச் செல்ல விடாது தடுக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் விவசாயமும், பயிர்ச் செய்கையும் ஊக்குவிக்கப்படுகின்றன என்று அரசாங்கம் செய்துவரும் பிரசாரமும் பொய்யாகியுள்ளது.

வட்டமடு, முறானை வட்டி, கொக்குளுவை போன்ற வயல்களை அண்டி, பல்லாயிரக் கணக்கான ஏக்கர் காடுகளும், தரவைகளும் காணப்படுகின்றன. மாட்டுப் பண்ணை முதலாளிகளையும், பண்ணை வளர்ப்பினையும் ஊக்குவிக்க வேண்டுமெனக் கருதினால், இந்தக் காடுகளை அளந்து பண்ணையாளர்களுக்கும், காடு வளர்க்கும் வனபரிபாலன திணைக்களத்துக்கும் வழங்க முடியும். இந்த வழியினைப் பின்பற்றுவதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகளின் வயிற்றில் மண்ணை போடுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். அத்தோடு, சிறுதொகையினரான பண்ணை உரிமையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினையும் தீர்ந்து விடும். 

நாட்டில் நிலவிய பயங்கரவாத காலத்துக்கு முன்பு – வட்டமடு, முறானை வட்டி, கொக்குளுவை பகுதி விவசாயிகள் தமது விவசாயத்தில் முறையாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், பயங்கரவாத காலம் உச்சகட்டத்தினை அடைந்தபோது, தங்கள் வயல்களுக்குச் செல்ல விடாமல் ஆயுததாரிகளால் விவசாயிகள் தடுக்கப்பட்டனர். ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் விவசாயிகளுக்குச் செய்த அநியாங்களுக்கு ஈடான செயல்களைத்தான் தற்போது பொலிஸார் மேற்கொள்கின்றனர். விவசாயிகளைப் பயமுறுத்தி அவர்களின் வயல் நிலங்களுக்குச் செல்ல விடாமல் பொலிஸார் தடுத்து வருகின்றனர். பொலிஸாரின் இந்நடவடிக்கையானது, பாதிக்கப்பட்ட விவசாயிகளினதும் - நீதியையும், நியாயபூர்வமான உரிமைகளையும் நேசிக்கின்ற மக்களினதும் மனங்களைப் புண்படுத்தியுள்ளது.

நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருக்கும் இப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருதல் அவசியமாகும். வட்டமடு, முறானை வட்டி, கொக்குளுவை வயல் நிலங்களில் விவசாயம் செய்வதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்பது இப் பிராந்தியத்தில் அரசியல் அதிகாரங்களை தம்வசப்படுத்தியுள்ளவர்களின் தலையாய கடமையாகும். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நுரைச்சோலையில் அமைக்கப்பட்ட வீடுகள் அழிவடைந்து போவதை வேடிக்கை பார்ப்பது போன்று, மேற்படி விவசாயிகளின் பிரச்சினைகளிலும் அலட்சியமாக நடந்து கொண்டால், அரசியல் அதிகாரங்களை தம்வசப்படுத்தியுள்ளவர்களின் சந்ததிகளும் இந்தப் பாவத்துக்காகத் திட்டித் தீர்க்கப்படுவார்கள்.  

No comments

Powered by Blogger.