நிந்தவூரில் தூங்கும் விழிப்புக்குழுக்களும், உஷாராகும் கள்வர்களும்..!
(சுலைமான் றாபி)
நிந்தவூரில் மிக அண்மைக்காலமாக திருடர்களின் தொல்லைகள் தலைவிரித்தாடுகின்றன. ஆனால் இந்த தொல்லைகள் பற்றி எந்த சமூக அமைப்புக்களோ, பள்ளிவாயல்களோ, அரச அலுவலகங்களோ இன்னும் அரசியல் துறை சார்ந்தோர்களோ அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. இந்த விடயங்கள் மீது இவர்களின் கவனங்கள் திசை திரும்பாததை அறிந்த திருடர்கள் நாளுக்கு நாள் அவர்களின் சேஷ்டைகளையும், கைவரிசைகளையும் ஏழைகளிடத்திலும், வசதி படைத்தவர்களிடத்திலும் தொடர்ந்தும் காட்டிய வண்ணமாக இருக்கின்றனர். இதனால் டிசம்பர் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கூட பயத்தினால் தொடர்ந்தும் தங்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் வீடுகளிலே பயந்து காணப்படுகின்றார்கள். மேலும் சிலர் இரவு வேளைகளில் தங்களுக்கு என்ன நடக்குமோ என்ற பயத்தில் நேரகாலத்துடனே வீடுகளில் அடங்கியிருக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் இன்னும் அலுவலகம் செல்பவர்களும் கண்முழித்து மறுநாள் காலையில் தங்கள் கடமைகளுக்கு செல்வதினால் அவர்களுக்கு உடல் சோர்வுத்தன்மை ஏற்படுகின்றது என அவர்கள் கூறுகின்றனர்.
இது இவ்வாறு இருக்க இந்த திருட்டு விடயங்களை கட்டுப்படுத்தவோ அல்லது இதற்கான மாற்று நடவடிக்கைகளை கையாளுவதற்கோ இங்கிருக்கின்ற சமூக அமைப்புக்கள், ஜும்மா பள்ளிவாசல், பிரதேச செயலகம், பிரதேச சபை, கிராம சேவை உத்தியோகத்தர்கள், மற்றும் முக்கியமாக சிவில் பாதுகாப்புக்குழுக்கள் (விழிப்புக்குழுக்கள்) என்பன இதுவரைக்கும் முறையான திட்டங்கள் எதனையும் மக்கள் மத்தியில் அமுல்படுத்த வில்லை. வெறுமனே இந்த விழிப்புக்குழுக்கள் பொலிஸ் ஊடாக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை வைத்துக்கொண்டு அலட்சியப்போக்கிலே தொடர்ந்தும் செயற்படுவதனை நன்றாக அவதானிக்க முடிகிறது. ஆனால் இவர்கள் தங்கள் சுய தேவைகளுக்கே அந்த அடையாள அட்டைகளை பயன்படுத்துகிறார்களே தவிர இவ்வாறான சமூக கடமைகளில் களத்தில் நின்று சிவில் சமூகங்களுக்கு பயன்களைப் பெற்றுக்கொடுக்க பாடுபடுவதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த விடயங்களில் நிச்சயம் முழு கவனம் செலுத்த வேண்டியவர்கள் விழிப்புக்குழுக்களும் கிராம சேவை உத்தியோகத்தர்களுமே. ஏனென்றால் நிந்தவூரில் காணப்படும் மொத்த 25 கிராம சேவை பிரிவுகளில் ஒரு கிராம சேவை பிரிவிற்கு 20 தொடக்கம் 25 பேர் வரை விழிப்புக்குழுக்களாக நியமனம் செய்யப்படுகின்றார்கள். அவ்வாறாயின் மொத்தமாக 600 இற்கும் அதிகமான விழிப்புக்குழு அங்கத்தவர்கள் காணப்படுகின்றார்கள். எனவே இந்த பெரும் தொகையே கள்வர்களை ஒழித்துக்கட்ட போதுமானதாக இருக்கும் . ஆனால் இவர்கள் இதன் மீது அலட்சியப்போக்கில் இருப்பதனால் வயது வந்தவர்களும், சிறுவர்களும் கள்வர்களின் சேஷ்டைகளுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிந்தவூரில் ஒரு போதும் இல்லாத சேஷ்டைகள் இப்போது தலைவிரித்தாடுவதினால் மக்கள் மத்தியில் பீதி உண்டாவதனை நன்றாக அவதானிக்க முடிந்தது. மேலும் காலை வேளைகளில் வெளியில் செல்லும் போது கள்வர்கள் வந்து சென்ற கதைகளாகவே தெரு ஓரங்களிலும், சந்தைகளிலும், பள்ளிவாசல்களிலும், மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் ஒலிக்கின்றன.
எனவே இந்த நிலைகள் இனிவரும் காலங்களில் மாறி வீடுகளிலோ அல்லது வர்த்தக நிலையங்களிலோ களவுகள் போகாமலிருக்க ஒரு முறையான திட்டங்களை வகுத்து திருடர்களின் அட்டகாசங்களை ஒழிக்க அரசியல் பேதங்களையும் தாழ்வுச்சிக்கல்களையும் மறந்து சமூக வியலாளர்களும், சமூக அமைப்புக்களும், இன்னும் அரச அலுவலகங்களும் அதன் அதிகாரிகளும், விழிப்புக்குழுக்களும் மற்றும் பொலிசாரும் செயற்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
.jpg)
Post a Comment