வைரஸ் நோய் தாக்கம்: அட்லாண்டிக் பெருங்கடலில் இறந்து கரை ஒதுங்கும் டால்பின்கள்
அமெரிக்காவை ஒட்டியுள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் பாட்டில்நோஸ் டால்பின்களிடையே அம்மை போன்ற வைரஸ் நோய் தாக்கியுள்ளது. இதன் விளைவாக கடந்த ஜூலை மாதம் முதல் அக்டோபர் முடிய, நியுயார்க்கிலிருந்து ப்ளோரிடா கடற்கரை வரை 753 மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக தேசிய கடல் மற்றும் சுற்றுப்புற சூழல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இந்த பருவத்தில் இறந்து ஒதுங்கும் மீன்களைப் போல் இது 10 மடங்கு அதிகமாகும் என்று இத்தகைய திட்டங்களின் ஒருங்கிணைப்பாளரான டெர்ரி ரௌலஸ் தெரிவித்தார். இதுபோன்ற காலகட்டத்தில் ஒதுங்கும் மீன்களின் சராசரி 74 மட்டுமே என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த எண்ணிக்கையானது கடந்த 1987-88 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மோர்பில்லி வைரஸ் நோய்த் தாக்கத்தினால் இறந்த 740 மீன்களைவிட அதிகமாகும். மேலும், இப்போது மிகக் குறைவான காலகட்டத்திலேயே அந்த எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. எனவே தற்போது இறப்பு விகிதத்தின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று டெர்ரி கூறுகின்றார்.
இந்த நோய்த்தாக்கமானது மீன்களிடம் நிமோனியா, நோய் எதிர்ப்பு குறைபாடு மற்றும் மூளைத்தொற்று போன்றவற்றை ஏற்படுத்தி மரணத்தில் கொண்டுவிடும். இந்த நோய் மனிதர்களைத் தாக்கும் என்பதற்கான ஆதாரம் இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் நோய்வாய்ப்பட்டு ஒதுங்கிக்கிடக்கும் மீன்களால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, அமெரிக்காவின் கடற்கரை ஓரங்களில் டால்பின் மீன்கள் காணப்பட்டால் மக்கள் அதற்குரிய உதவியாளர்களை அழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Post a Comment