மேயர் பதவிக்கான கையிறிழுப்பு - அடம்பிடித்து அழும் குழந்தைகள்
தன்னுடைய இளைய சகோதரன் ருசித்துக் கொண்டிருக்கும் குச்சி ஐஸ்பழத்தை பறித்து தனக்குத் தருமாறு தந்தையிடம் கேட்டு, அடம்பிடித்து அழுகின்ற மூத்த சகோதரனையும் அதனை தர மறுப்பதற்கு தன்பக்கமுள்ள நியாயங்களை கூறிக் கொண்டிருக்கும் இளைய சகோதரனையும் போல... நிசாம் காரியப்பரும் - சிராஸ் மீராசாகிபும் தெரிகின்றார்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் பதவி ஆசைதான். அது யாரைத்தான் விட்டு வைத்தது. சர்வாதிகாரி ஹிட்லர் முதல் சாமியார் வரை எல்லோரையும் ஆட்டிப்படைத்த அதே பதவி ஆசைதான், இன்று நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கின்றது. பள்ளிவாசல் தலைவர் முதல் உள்ள10ராட்சி மன்ற தலைவர் தொட்டு கட்சித் தலைவர் வரைக்கும்... எந்தப் பதவிக்கு ஆட்தெரிவு செய்வதென்றாலும் அதற்கு முன்னர்; ஒரு வெட்டுக்குத்தையும் பிரளயத்தையும் சந்தித்தேயாக வேண்டிய சூழல் முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டு நெடுங்காலமாயிற்று. இதில் இன்னுமொரு அத்தியாயம்தான் கல்முனை மேயர் பதவிக்காக இப்போது ஏற்பட்டிருக்கும் கையிறிழுப்பு.
2011ஆம் ஆண்டு உள்ள10ராட்சி மன்றக்களுக்கான தேர்தல் காலம் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். கல்முனை மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளராக ஸ்ரீலங்;கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரான சட்டத்தரணி நிசாம் காரியப்பரை நியமிப்பதா அல்லது கட்சிக்கு புதியவரும் தெஹிவளையில் கல்வி நிறுவனம் ஒன்றை நடாத்தி வரும் காசுக்காரருமான கலாநிதி சிராஸ் மீராசாகிபை நிறுத்துவதா என்பதில் பாரியதொரு இழுபறி ஏற்பட்டது. இதில் முதலாமவர் கல்முனையையும் இரண்டாமவர் சாய்ந்தமருதையும் சேர்ந்தவர்கள் என்பதுதான் இதில் மறைந்திருந்த சூட்சுமம்.
இவ்விருவரில் அதிக விருப்பு வாக்குகளை பெறுபவருக்கே மேயர் பதவி வழங்கப்படும் அடுத்தவர் அதைக் கேட்கக் கூடாது என்ற அடிப்படையில் இவ் விவகாரத்திற்கு ஒரு இணக்கப்பாடு காணப்பட்;டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டபது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கிட்டத்தட்ட 3 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்ற நிசாம் காரியப்பரும் அப்பதவிக்காக ஆலாய்ப் பறந்தார். கல்முனை மக்களும் இது விடயத்தில் அழுத்தங்களை பிரயோகித்தனர்.
மறுபுறத்தில் இவ்வளவு செலவழித்து பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையை தாரை வார்ப்பதற்கு சிராஸ் மீராசாகிப் இஷ்டப்படவில்லை. சாய்ந்தமருது மக்களும் இரண்டில் ஒன்று பார்க்கும் நிலையிலேயே இருந்தனர் என்று சொல்ல வேண்டும். இறுதியில், பல தேனீர்வேளை சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், உயர்பீடக் கூட்டங்களுக்குப் பிறகு மு.கா. தலைவர் ஒரு முடிவினை எடுத்தார். சுழற்சி முறையில் மேயர் பதவியினை பகிர்ந்துகொள்தல் என்பதே அந்த முடிவு.
கண்மூடித்தனமாக தலைமையை விசுவாசிக்கின்ற சிலர் இதனை ஒரு தீர்க்கதரிசமான முடிவு என்று பேசிக் கொண்டது இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றது. அவ்வாறான விசிறிகளுக்கு இப்போது புரிந்திருக்கும் அந்தத் தீர்மானம் எவ்வளவு தூரம் தீர்க்க தரிசமானது என்று.
இப்போதைக்கு இப்பிரச்சினை தீர்ந்தால் போதும் என்ற நினைப்பில் முன்னுக்குப் பின் யோசிக்காமல் றவூப் ஹக்கீம் எடுத்த முடிவு இன்று இரு ஊர்களுக்கு இடையில் பனிப்போரை தோற்றுவித்திருக்கின்றது. அஷ்ரஃபை போன்ற சாணக்கியம்மிக்க தலைமையும் சமூகப் பற்றுள்ள உறுப்பினர்களும் மு.கா.வுக்கு கிடைக்காமல் போனதன் விளைபயன்தான் இது. ஒரு தலையிடியை போக்குவதற்காக எடுக்கப்பட்ட ரெடிமேட் முடிவினால் அதைவிடப் பெரிய தலைப்பாரம் ஏற்பட்டிருக்கின்றது.
முழம் சறுக்கும் மு.கா.
எல்லா முஸ்லிம் கட்சிகளும் குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சாண் ஏற முழம் சறுக்குகின்ற ஒருவித வீழ்ச்சிப் போக்கிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது. 'ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்துவந்தான்...' என்ற பாடல் கேட்டவுடன் எல்லாவற்றையும் மறந்துவிடுகின்ற மக்கள் பிரிவினரைத் தவிர ஏனைய எல்லோரும் மு.கா.வின் அரசியல் நகர்வுகளில் வெகுவாக அதிருப்தியுற்றிருக்கின்றார்கள். அதனை கொஞ்சமாக வெளிக்காட்டியும் இருக்கின்றார்கள்.
கண்டியில் 50ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸிற்கு 11ஆயிரத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளையே கடந்த தேர்தலில் மக்கள் அளித்திருக்கின்றனர். கிழக்கில் மு.கா.வை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டுறவு அமைச்சரின் சொந்த ஊரிலுள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் கூட அக்கட்சியால் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரையேனும் பெற்றுக் கொள்ள முடியாமல் போயுள்ளது. மேற்சொன்ன கருத்தை நியாயப்படுத்துவதற்கு இவற்றை விடவும் வேறென்ன எடுத்துக்காட்டுகள் வேண்டும்!
இந்நிலையில் 'அம்பாறை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரை பெற்றுக் கொள்வதென்றால் கூட பெருமளவுக்கு பணத்தை கொட்ட வேண்டும்' என கட்சியின் செயலாளர் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியது தலைவரின் காதுகளுக்கு எட்டியிருப்பது போலவே தெரிகின்றது. அடுத்த ஒரு பாராளுமன்றத் தேர்தல் வந்தால் எங்கு போட்டியிடுவது என யோசித்துக் கொண்டிருந்த தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்தில் தெரிவாகும் 'அந்த ஒருவராக' தன்னை பலப்படுத்திக் கொள்ள மனக்கணக்கு போட்டுள்ளதாகவும் அரசல் புரசலாக தெரியவருகின்றது. அம்பாறை மாவட்டத்திற்கான அவரது அண்மைய விஜயமும் இச்சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.
ஏனென்றால், இவ்விஜயத்தின் போது பிரதேச மட்டத்திலான குழுக்களை மறுசீரமைப்பது குறித்து அவர் அதிக அக்கறை செலுத்தினார். மு.கா. வெற்றிபெற்ற முன்னைய தேர்தலில் முகாமிட்டிருந்த நிந்தவூரில் உள்ள கட்சி முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருக்கின்றார். இப்படியான நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கின்ற வேளையில் அம்பாறை மாவட்டத்தின் களநிலைவரம் குறித்து நோட்டமிடுதற்காகவே ஹக்கீம் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று கட்சியின் உயர்மட்டத்திலேயே பேச்சடிபடுவதாக தகவல் கசிந்துள்ளது.
ஆக, கட்சியின் நன்மதிப்பையும் தன்னுடைய சொந்த செல்வாக்கையும் தூக்கி நிறுத்துவதற்கான சாத்தியவள ஆய்வொன்றை ஹக்கீம் நடாத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, கல்முனை மாநகர மேயர் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அரசியலில் பிரவேசித்து ஒரு சில மாதங்களுக்குள் மேயராகும் வாய்ப்பை மு.கா. பெற்றுத்தந்தது என்ற நன்றிக் கடனுடன் சிராஸ் தனது பதவியை சொன்ன உடனேயே துறந்து, நிசாம் காரியப்பருக்கு கைமாற்றுவார் என்ற தலைவரின் அசட்டு நம்பிக்கையில் மண்விழுந்து போயிற்று.
மக்கள் சேவகனின் போக்கு
கல்முனை மாநகர மேயர் என்ற வகையில் சிராஸ் குறிப்பிடத்தக்க பல நல்ல காரியங்களை செய்திருக்கின்றார். எதுமாதிரியும். இல்லாத புதுமாதிரியான செயற்பாடுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். எந்தப் பிரச்சினையையும் உடனடியாக தீர்த்து வைப்பது இவற்றுள் முக்கியமானது. இளமைத் துடிப்பும் அரசியலை வைத்தே காசு உழைக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லாமையும் மற்றும் இன்னபிற விடயங்களும் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். இவற்றுக்கெல்லாம் அப்பால், அரசியலுக்கு புதியவாரான தனது எதிர்கால இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு உத்தியும் இதிலிருக்கின்றது.
இப்போது அவருக்கு வழங்கப்பட்ட சேவைக்காலம் முடிவடைந்து விட்டது. அடுத்தவருக்கு அப்பதவியை விட்டுக் கொடுக்கும் காலம் வந்திருக்கின்றது. ஆதலால், தலைமையுடன் செய்து கொண்ட உடன்பாடிக்கை அல்லது இணக்கப்பாட்டுக்கு அமைவாக அதனை விட்டுக் கொடுப்பதே கனவான் தன்மையாகும். நிசாமை விட அதிகமான மக்கள் சிராஸிற்கு ஆணை வழங்கியுள்ளனர் என்பது உண்மைதான். யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால், நிசாமிற்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து இருக்கின்றார்கள் என்பதையும் இப்பதவி அவருக்கு சுழற்சி அடிப்படையில் கிடைக்குமென இன்று வரைக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் மறுக்கவியலாது.
கல்முனை மேயர் பதவியை ராஜினாமாச் செய்து நிசாமுக்கு கொடுக்குமாறு கட்சி கேட்ட போது 'இப்பதவி எனக்கு சொந்தமானதல்ல சாய்ந்தமருது மக்களுக்குரியது' என்று சிராஸ் சொல்லியிருக்கின்றார். தேர்தல் ஆணையாளரையும் ஜனாதிபதியையும் பிறகு சந்தித்திருக்கின்றார். தேர்தல் ஆணையாளரின் பதிலும் கட்சிக்கு வெளியிலுள்ள சில அரசியல்வாதிகள் வழங்கும் 'அறிவுரைகளும்' அவருக்கு மிதமான தைரியத்தை கொடுத்திருக்கின்றது. ஆதலால் மக்களின் தலையில் பாரத்தைப் போட்டுவிட்டு மீதமிருக்கின்ற இரண்டு வருடங்களுக்கும் மேயராக கோலோச்சுவதற்கு சிராஸ் பெரிதும் பிரயாசைப்படுகி;ன்றார் என்பது தெளிவானது.
இதனால் இவ் விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக இந்த நிமிடம் வரைக்கும் ஆயிரத்தெட்டு கூட்டங்களை மு.கா.வும், சிராசும், நிசாமும் நடாத்த வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. இவற்றுள் சாய்ந்ததமருதில் மேயர் சிராஸ் நடாத்திய மக்கள் சந்திப்பும் பிரகடனமும் கவனிப்பிற்குரியது. இச்சந்திப்பில் எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளனர். அதன்படி மேயர் பதவியில் இருந்து விலகுவது இல்லை என்றும், அது குறித்து கட்சித் தலைமைக்கு விளக்கம் அளிப்பது என்றும் ஊர்கூடி தீர்மானம் எடுத்திருக்கின்றது.
எதிர்காலத்தை எண்ணி
இது ஒரு நல்ல முன்மாதிரிதான். ஆனபோதும் - முதல் இரண்டு வருடங்கள் சிராசும் அடுத்த இருவருடங்கள் நிசாமும் இப்பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தலைவர் ஹக்கீம் சொன்ன போது இதேபோன்று ஊர் மக்களை அழைத்து 'இரு வருடங்களே பதவி வகிக்கச் சொல்கின்றார்கள் என்ன செய்யலாம்?' என்று கருத்தறிந்து கொள்ள சிராஸ் மீராசாகிப் முயற்சிகள் மேற்கொண்டதாக எனக்கு ஞாபகமில்லை.
அப்போது மூடிய அறைக்குள் தலைவருடன் தீர்மானத்தை எடுத்துவிட்டு வந்து, இப்போது மட்டும் மக்களை துணைக்கழைப்பதை என்னவென்று சொல்வது? எந்த ஊர்மக்களாவது தம்முடைய ஊரைச் சேர்ந்தவன் பதவியிலிருந்து விலகுவதை விரும்புவார்களா என்ற சின்ன லொஜிக் கூட தெரியாமலா இக்கூட்டத்தை கூட்டத்தை கலாநிதி சிராஸ் ஏற்பாடு செய்திருப்பார்!
இன்னுமொரு முக்கிய கருத்தையும் இச்சந்திப்பில் அவர் வெளியிட்டார். அதாகப்பட்டது – 'மேயர் பதவியை சுழற்சி முறையில் பகிர்வது தொடர்பில் தலைமைக்கும் தனக்குமிடையில் எழுத்துமூல ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை. மாறாக, மேயர் பதவிக்காலத்தின் முதல் இரண்டு வருடங்களுக்கு நீங்கள் பதவி வகியுங்கள். அடுத்த இரு வருடத்தையும் நிசாமுக்கு கொடுப்போம். அதுதான் இப்போதிருக்கின்ற ஒரே தீர்வு' என்று ஹக்கீம் சொன்னதன் பிரகாரமே பதவியை பொறுப்பெடுத்ததாக கல்முனை மேயர் இக் கூட்டத்தில் சொல்லியிருக்கின்றார்.
இப்படி ஒரு ஒப்பந்தத்தை செய்யாது விட்டுவிட்டோமே என்று இப்போது தலைவர் ஹக்கீம் தலையில் அடித்துக் கொண்டிருப்பார். அது ஒருபுறமிருக்க, புரிந்துணர்வுள்ள இருவருக்கு இடையில் ஒப்பந்தங்கள் வாய்மொழி மூலமும் ஏற்படுத்தப்படலாம் என்பதை மேயர் வசதியாக மறந்துவிட்டார். மேலே குறிப்பிட்டது போல – இருக்கின்ற ஒரேயொரு குச்சி ஐஸ் பழத்தை நீ ருசித்துவிட்டு பாதியை அண்ணனுக்கு கொடு என்று தந்தை சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதைக் கேட்ட தம்பி, வாய்க்குள் ஐஸ் பழத்தை வைக்கின்றார் என்றால் தந்தையின் நிபந்தனைக்கு உடன்பட்டுவிட்டார் என்றுதானே அர்த்தம்.
எனவே, தனது ஜென்டில்மேன் (கனவான்) தன்மையை வெளிக்காட்டும் விதத்திலும் எதிர்கால அரசியல் மற்றும் மக்களின் நம்பிக்கையை வெல்லுதல் என்பவற்றின் அடிப்படையிலும் சிராஸ் மீராசாகிப் தன்னுடைய பதவியை விட்டுக் கொடுத்து தான் வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்வது நல்லது என்றே புத்திக்குப் படுகின்றது. கடைசியில் எல்லா அரசியல்வாதிகள் மாதிரியும்தான் சிராசும், வாக்கு மாறுபவர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தத் தேவையில்லை. நல்லதொரு அரசியல் எதிர்காலம் இருக்கும் மக்கள் சேவகன் எனக் கணிப்பிடக் கூடிய இவர் சின்ன விடயங்களுக்காக ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தையும் பழாக்கிக் கொள்ள வேண்டியதில்லை என எண்ணுகின்றேன்.
மேலெழும் கேள்விகள்
சிராஸ் மீராசாகிப் பதவியை ராஜினாமாச் செய்து அதனை நிசாம் காரியப்பருக்கு வழங்கினால் கல்முனை மக்கள் திருப்திப்படுவார்கள் சாய்ந்தமருது மக்கள் மனம் உடைவார்கள். அதுஒருபுறமிருக்க, இன்னும் சில கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். அதாவது, நிசாமுக்கு பதவி வழங்கப்பட்டால் அவர் யார் என்பதை கண்டு கொள்ளலாம். அதிகாரம் கொண்ட பதவிக்காக அவாவுற்று நிற்கின்ற காரியப்பர் உண்மையில் செயல்வீரன்தானா அல்லது வாய்ப்பேச்சில் மட்டுமே வீரனா என்பதை அறிந்து கொள்ளலாம். இதற்கு பிறகும் இவ்வாறாக பதவி ஒன்றை அவருக்கு வழங்கலாமா என்ற முடிவுக்கும் வர முடியும்.
நிசாம் காரியப்பர் ஒரு நல்ல சட்டத்தரணி, மு.கா.வின் சிரேஷ்ட உறுப்பினர். ஆனால் அவரது அரசியல் மக்கள் மயப்படுத்தப்படவில்லை என்பதை கோபப்படாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு மேயர் பதவி கிடைத்தால் சிராஸ் செய்த சேவையுடன் ஒப்பிட்டே மக்கள் நிசாமை நோக்குவார்கள். அதற்கு சமமாகவேனும் இயங்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். ஆனால், மக்களிடையே வியாபித்திருக்கின்ற பொதுவான கருத்தின் பிரகாரம் நோக்கினால், அந்த அளவுக்கு நிசாம் ஜொலிப்பார் என்று அறுதியிட்டு கூறுவது கடினமாகவுள்ளது.
ஒருவேளை, கல்முனையைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்வாறான பதவி ஒன்று கிடைத்திருந்தால் அதனை சாய்ந்தமருதுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்களா? அல்லது சுழற்சிமுறை பதவியில் முன் இரண்டு வருடங்கள் பதவிவகிக்கும் வாய்ப்பு சிராஸ் மீராசாகிபுக்கு அன்றி நிசாம் காரியப்பருக்கு கிடைத்திருந்தால் மறுபேச்சின்றி அவர் ராஜினாமாச் செய்திருப்பாரா என்பதும் நியாயமான சந்தேகங்கள்தான். என்னதான் இருந்தபோதிலும் தலைமைத்துவம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்ப்பது இயல்பானதுதானே.
அந்த வகையில், சிராஸ் பதவி விலகி நிசாமுக்கு வாய்ப்பளிப்பதன் ஊடாக தனக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்ற வேண்டுமென தலைவர் ஹக்கீம் எதிர்பார்க்கின்றார். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் இதற்கு முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றியும் இவ்விடத்தில் பேசவேண்டி இருக்கின்றது.
முன்னைய வாக்குறுதிகள்
மு.கா. ஸ்தாபக தலைவர்; அஷ்ரஃப் மரணித்து 13 வருடங்களில் ஆகிவிட்டன. இக் காலப்பகுதியில் கிழக்கு மாகாண மக்களிடத்தில் சென்று றவூப் ஹக்கீம் அளித்த வாக்குறுதிகள் முடிவிலியானவை. அங்கே நீதிமன்றம கட்டித்தருவேன், இங்கு தனிப் பொலிஸ் பிரிவு அமைப்பேன், அது செய்வேன் இது செய்வேன் என்று எத்தனை வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதுபோதாதென்று, நீங்கள் அரசாங்கத்தை எதிர்த்து எமக்கு வாக்களித்தால் முஸ்லிம்களின் பிரச்சினையை ஒருகை பார்ப்போம் என்று எத்தனை முறை மக்கள் மேடையில் முழங்கியிருக்கின்றார்.
தன் பேச்சைக் கேட்டு இரண்டாவது பதவிக்காலத்தை நிசாம் காரியப்பர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்த தலைமைத்துவம் அரசோடு தேனிலவு கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த 12 வருடங்களிலும் மக்களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற எந்தளவுக்கு நிறைவேற்றியுள்ளது? அதேபோன்று கொடுத்த வாக்கிற்கு அமைய சிராஸ் மீராசாகிப் ராஜினாமா செய்ய வேண்டுமென நினைக்கின்ற தலைவர் மேற்கண்டவாறு அங்குமிங்குமாக மக்கள் முன்னிலையில் அளித்த எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்? தான் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நபரே அவ்வாறு பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க அருகதை உடையவர் என்கிறார் மூத்த போராளி ஒருத்தர்.
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களிற்கு இடையே நெடுங்காலமாக நிர்வாக, பொருளாதார, அரசியல் ரீதியிலாக மாற்றுக் கருத்துக்கள் நிலவி வருகின்றன. இவ்விரண்டும் தனித்தனி பிரதேசங்களாக அரசியல் அதிகாரத்தோடு செயற்பட எத்தனிக்கின்றன. இன்று மேயர் விவகாரத்திற்கும் அதுதான் முழுமுதற் காரணமாகவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் ஏனைய தேர்தல் தொகுதிகளில் மு.கா. மாறிமாறி வெற்றி தோல்விகளை சந்தித்திருக்கின்றது. ஆனால், கல்முனை தொகுதியில் மட்டும் தொடர்ந்து வெற்றிபெற்றுக் கொண்டிருக்கின்றது. அக்கட்சியின் கோட்டை என்றுகூட சொல்லலாம். இப்பின்னணியில் சிராஸ் மீராசாகிபிடம் இருந்து மேயர் பதவியை பிடுங்கி எடுத்தாலோ அல்லது நிசாம் காரியப்பருக்கு போக்குக் காட்டிவிட்டு ஆறுதல் பரிசொன்றை வழங்கினாலோ... ஒன்றில் - சாய்ந்தமருது மக்களின் அன்றேல் - கல்முனை வாக்காளர்களின் ஆதரவை மு.கா. பகுதியளவிலேனும் இழக்க நேரிடலாம். அதனால் நானா நீயா போட்டியில் இரு அயற் பிரதேச மக்கள் பகைவர்கள் ஆகிவிடாது காத்துக் கொள்ள வேண்டிய தார்மீக கடமை நிசாம் காரியப்பர், சிராஸ் மீராசாகிப் ஆகியோருக்கு இருக்கவே இருக்கின்றது.
பால் கேட்டு அழும் குழந்தைகளுக்கு 'சூப்பி' கொடுக்கும் கைங்கரியங்களை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, மு.கா. தலைவரும் செயலாளரும் உயர்பீடமும் இவ்விவகாரத்தை மிகக் கவனமாக கையாள வேண்டியிருக்கின்றது. முள்ளில் சேலை விழுந்தாலும், சேலையில் முள் விழுந்தாலும் கிளியப்போவதென்னவோ (கட்சி எனும்) சேலைதான்.

ஏ எல் நிப்றாஸ் அவர்களே, பிள்ளையும் கில்லி தொட்டிலும் ஆட்டியுல்லீர்கள். time waste.....
ReplyDeleteபசீர் சேகு தாவுத் இல்லாத தலைமைத்துவம் இப்போதுதான் ஜொலிக்க துவங்கியுள்ளதை சற்று உற்று நோக்கிப் பாருங்கள்.