பொதுநலவாய மாநாட்டின் வெற்றிக்காக விசேட பிரார்த்தனைகளை நடாத்த வேண்டும்
இன, மத, கட்சி அரசியல் பேதங்களின்றி சகலரும் தத்தம் மத வழிபாட்டுத் தலங்களில் பொது நலவாய மாநாட்டின் வெற்றிக்காக விசேட பிரார்த்தனைகளை நடாத்த வேண்டும் என்று சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெளத்தம், இந்து, இஸ்லாம், கிரிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விசேட பிரார்த்தனையை எதிர்வரும் 15ம் திகதி நடாத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நாடு துரித அபிவிருத்தி கண்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் நடைபெறும் இச்சர்வதேச மாநாட்டின் வெற்றிக்காக சகலரும் இன, மத, கட்சி அரசியல் பேதங்களை மறந்து ஒத்துழைப்பது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, பொதுநலவாய மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஜனாதிபதி அவர்களின் தூரநோக்குமிக்க தலைமைத்துவம் மற்றும் செயல் திறனின் பயனாக இம்மாநாடு இம்முறை இந்த மண்ணில் நடை பெறுகின்றது. இம்மாநாடு இந்நாட்டிற்கு உலகில் நிச்சயம் மகத்துவத்தையும், சிறப்பையும் பெற்றுக் கொடுக்கும். அதே நேரம் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற துரித அபிவிருத்திக்கு இம்மாநாடு மேலும் உந்து சக்தி அளிக்கும்.
இருப்பினும் சிலர் குறுகிய அரசியல் இலாபம் பெறும் நோக்கில் சிலர் இம்மாநாட்டை எதிர்க்கின்றார்கள். பொய்களை மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள். விமர்சிக்கின்றார்கள். இவை நல்ல செயற்பாடுகள் அல்ல. ஜனாதிபதி அவர்களின் செயல் திறன் மிக்க தலைமைத்துவத்தின் பயனாகவே இவ்வாறான சர்வதேச மாநாடு எமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்து. அதனை பொய் புரட்டுகளைக் கூறி விமர்சிக்கக் கூடாது.
இன்று இந்த நாட்டில் அச்சம், பீதி இல்லை. எங்கும், எந்த நேரத்திலும் சென்று வர முடியும். முப்பது வருட காலப் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கும் நாட்டில் சுதந்திரமும், ஜனநாயகமும் மீளவும் தழைத்தோங்கி யுள்ளது.
ஆகவே இலங்கையின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்காதீர்கள். அது இந்த மன்னுக்குச் செய்யும் பெரும் துரோகமும் பாவமும் ஆகும். அதனால் ஜனாதிபதி அவர்கள் தலைமையில் இந்நாடு துரித அபிவிருத்தி கண்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் நடைபெறும் இம்மாநாடு வெற்றிபெறவென சகலரும் தத்தம் மத வழிபாட்டுத் தலங்களில் எதிர்வரும் 15ம் திகதி விசேட பிரார்த்தனைகளை நடாத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
.jpg)
Post a Comment