Header Ads



நாட்டை அமைதிப் பாதையில் பயணிக்க விடாமல் தடுப்பது, பௌத்த பேரினவாதிகளே


 இந்த நாட்டின் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்துவதைத் தடுத்துக்கொள்வதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டது. முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தாது அவ்வாறு அவர்களைத் தடுத்த பெருமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களையே சாரும். 


இவ்வாறு மு.கா.வின் ஊடகப் பணிப்பாளரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டாரவினால் 'முஸ்லிம்களின் கையிலும் ஆயுதம். அதற்கே மு.கா. வினர் ஆயத்தம்' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட பத்திரிகைக் குறிப்புக்கு பதில் அளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு ஹனீபா மதனி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழீழப் போராட்டம் தொடரப்பட்ட கால கட்டத்தில் வட கிழக்கில் வாழ்ந்த தமிழ் இளைஞர்கள் மும்முரமாக இயக்கங்களில் சேர்ந்து போராடத் தலைப்பட்டனர். இப்பிரதேசங்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு வாழ்ந்த முஸ்லிம் இளைஞர்களும் இப்போராட்ட நடவடிக்கைகளினால் மிகவும் கவரப்படத் தொடங்கினார்கள். பல முஸ்லிம் இளைஞர்கள் சில போராட்ட இயக்கங்களின் தலைமைப் பதவிக்கே சென்ற வரலாறுகளும் தொடங்கின. 

மிகவும் சிக்கல் நிறைந்த இந்தச் சூழ்நிலைக்கு நிவாரணமாகவே மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் ஸ்ரீ.ல.மு.காவை ஆரம்பித்து இளைஞர்களை ஜனநாயக அரசியல் மயப்படுத்தி வழிநடாத்தினார்கள். தமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க மு.கா என்ற இந்த சமூக அரசியல் இயக்கத்தை அர்ப்பணிப்போடு கட்டி வளர்த்தார்கள். இந்த யதார்த்தத்தையும், வரலாற்று உண்மைகளையும் அறியாத கலாநிதி வசந்த பண்டார மட்டகரமான முறையில் துவேசக் கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

ஆயுதப் போராட்டம், பிரிவினைவாதம், புலிப்பயங்கரவாதம் எனும் சொற்பிரயோகங்களை வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்ட நினைப்பதை பேரினவாதத்தில் ஊறித் திளைத்திருக்கின்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், பொதுபலசேனா போன்ற இயக்கங்கள் கைவிட வேண்டும். இப் பூச்சாண்டி வார்த்தைகளினால் சிறுபான்மை இன மக்களை ஒருபோதும் தட்டிப்பணிக்க நினைக்க கூடாது. இவ்வாறான பசப்பு வார்த்தைகளை சிங்கள சமூகத்தின் புத்திஜீவிகளும், சாதாரண பொதுமக்களும்கூட அங்கீகரிக்கும் நிலையில் இல்லை. 

அண்மைக் காலமாக சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் பௌத்த பேரினவாதிகளின் நடவடிக்கைகளினால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பானது, வட கிழக்கு யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்பையும் விட பாரதூரமானதாகும்.  

புலிகளினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை மூன்று அல்லது நான்கு ஆகும். ஆனால் பௌத்த பேரினவாதம் தொடங்கி ஒரு சில மாதங்களுக்குள் 24க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டும் அகற்றப்பட்டுமிருக்கின்றன.

புலிகளின் சூட்டுக்கு இலக்கான பள்ளிவாசல்களில் மீண்டும் சமயக் கடமைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், பௌத்த பேரினவாதிகளால் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் இன்னமும் சுமூக நிலைக்குத் திரும்பவில்லை. 

இந்த நாட்டுக்கு நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகின்ற நற்பெயருக்கு இவர்களின் இனவாத, மதவாத நடவடிககைகளால் பாரிய களங்கம் ஏற்பட்டிருக்கின்றது. பொருளாதார ரீதியாகவும் பல பாதிப்புக்கள் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. 

தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவை 2/3 பெரும்பான்மை அதிகாரம் பெற்ற மஹதீர் முஹம்மது அவர்கள் அவ்வதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கு வாழ்ந்த பல்வேறு இனங்கள் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உச்சத்துக்கு கொண்டு சென்றிருப்பது நமக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகும்.நமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் 2/3 பெரும்பான்மை அரசியல் அதிகாரப் பலம் கிடைத்தபோது அதன் மூலம்  நமது தாய் நாட்டிலும் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வித்தியாசங்களை அகற்றி இந்த அழகிய தீவை மீண்டும் சுபீட்சம் நிறைந்த ஒரு தர்ம தீபமாக அவர் மாற்றுவார் என்றே இந்நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகங்கள் மட்டுமன்றி பெரும்பான்மைச் சிங்களவர்களிலும் அதிகமானோர் கனவு கண்டனர். 

ஆனால் அத்தகைய உயர்ந்த எதிர்பார்ப்புகளுக்கு அமைய இந்த நாட்டை சுபீட்சம் நிறைந்த அமைதிப் பாதையில் பயணிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருப்பவர்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இனத்துவேஷமும், மதத்துவேசமும் நிறைந்த பௌத்த பேரினவாதிகளேயாகும் என்றும் அவர் தெரிவித்தார். 


No comments

Powered by Blogger.