Header Ads



ஹஜ்ஜுப் பெருநாளை அர்த்தமுள்ளதாக்குவோம்..!


(எஸ்.எல். மன்சூர்)

தியாகத்தை நினைவுறுத்தும் வகையில் இஸ்லாமிய வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட சம்பவங்களை ஹஜ்ஜூப் பெருநாள் எடுத்தியம்புகின்றது. பொதுவாக இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. 'ஒன்று ஈகைத்(நோன்புப்பெருநாள்) திருநாள். மற்றொன்று தியாகத் (ஹஜ்பெருநாள்) திருநாள். அந்தவகையில் நாம் அல்லாஹ்வின் அடியார்கள். அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். விரும்பினாலும், விரும்பா விட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாக இந்தத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது.

நமக்கு 'முஸ்லிம்' என்று பெயரிட்ட நபி இப்றாஹிம் (அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வதும் அவசியமாகும். நபி இப்றாஹிம் (அலை) அவர்களது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் ஒருவனுக்கே வழிப்பட வேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையை மக்களுக்கு எடுத்துக்கூறியதால் ஏற்பட்ட பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு, தான்கொண்ட தௌஹீதை(இறை நம்பிக்கையை) நிலை நாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது 'ரப்'பின் திருப்பொருத்தமே தனது வாழ்வின் இலட்சியம், அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அன்பு மகளை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த அன்னாரின் தியாக வாழ்க்கை இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன.

அல்லாஹ் கூறுகிறான்: 'ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக முழுமைப்படுத்துங்கள்.(2:196) மக்களில் அங்கு (மக்காவிலுள்ள கஅபாவுக்கு) சென்றுவரச் சக்தி பெற்றோர், அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும்(3:97)' இது அல்குர்ஆனில் உள்ள திருவசனங்களாகும்.

நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் ஸல்லல்லா{ஹ அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது. 2. தொழுகையை கடைப்படிப்பது. 3. ஸகாத் (கடமையானவர் அதை) வழங்குவது. 4. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. (சக்தி பெற்றோர் ஆயுளில் ஒரு முறை மக்காவிலுள்ள) இறையில்லம் சென்று கஅபாவில் ஹஜ் செய்வது போன்றனவாகும். இறைவன் உங்கள்மீது ஹஜ்ஜை விதியாக்கியுள்ளான் என்று நபி(ஸல்)அவர்கள் தமது உம்மத்துக்களைப்பார்த்து கூறியுள்ளார்கள். இவ்வாறு கடைமையாக்கப்பட்டுள்ள ஹஜ்ஜை முஸ்லீம்கள் கடமையாகக் கொண்டு நபி இப்றாகீம் (அலை) அவர்களின் தியாக வாழ்வை நினைவிற் கொள்ள இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது சிறப்பானதாகும்இ.

தியாகத்தின் பெருமையை உலகறியச் செய்த நபி இப்றாகீம்(அலை) தன்னுடைய அன்பு மணைவி அன்னை ஹாஜரா அவர்களின் தியாகத்தின் தவிப்பு, இவர்களது அன்புப்புதல்வர் இஸ்மாயில்(அலை) அவர்களின் பாச உணர்வுகளின் தியாகம் போன்றவற்றின் கூட்டுமொத்த தியாகமாகவே இந்த ஹஜ்ஜூப் பெருநாள் நினைநிலை நிறுத்தப்படுகின்றது. உண்மையில் சிலைகளை வடிமமைக்கின்ற ஒரு தந்தையின் புதல்வராக உலகில் அவதரித்த நபி இப்றாகீம் (அலை) அவர்கள் சிறுபராயத்திலிருந்து இதனை வெறுத்தொதிக்கினார்கள். உண்மையின் பக்கம் தமது கவனத்தைச் செலுத்தினார்கள். இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதில் அவர்கள் கண்ணாக இருந்தார்கள்.

இப்றாகீம் நபி அவர்கள் திருமணமாகி பல்லாண்டு காலம் பிள்ளைப்பேறு இன்றி பரிதவித்த வேதனையை அல்குர்ஆன் எடுத்தியம்புகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில், தமதுமுதிர்ந்த பருவத்தில் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு இஸ்மாயீல் எனும் குழந்தை பிறக்கின்றது. சிறிது காலத்திற்கு பின்பு அல்லாஹ்வின் உத்தரவின்பேரில் தம் மனைவி ஹாஜரா அம்மையாரையும், மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் பாலைவனத்தில் தகிக்கும் சுடுமணலில் தன்னந்தனியாக விட்டுப் பிரிக்கவைத்து இறைவன் சோதிக்கின்றான். அந்தச்சோதனையில் விளைவாக எழுகின்ற தியாகத்தை நினைவுறுவதற்காக இந்த புனித ஹஜ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அங்கே அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு தம் அருமை மைந்தரான நபி இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்தார்கள். ஏன் மகனையே கூரான கத்தியைக் கொண்டு அறுக்கின்றார்கள். அந்த தியாம் எழுத்தில், சொல்லில் வடித்திட முடியாத தியாகம். இறுதியில் கத்திக்கு அறுக்கும் சக்தியில்;;;;லாமால் போகின்றது. எல்லாம் வல்ல இறைவன் ஒரு ஆட்டை அனுப்பி நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பகரமாக குர்பானீ கொடுக்க செய்ததுடன், இனி மறுமை நாள் வரை வாழும் வசதியுள்ள முஸ்லிம்கள், குர்பானீ கொடுக்கும் பழக்கத்தையும் கடமையாக்கி வைத்தான்.

எனவே, வாழ்நாளில் பல அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்தும்கூட மனம் தளராமல் எல்லாம் வல்ல இறைவனிடமே பிரார்த்தனை செய்து பொறுமையுடன் துன்பங்களை சகித்து கொண்டிருந்ததினால் சோதனைகளெல்லாம் சாதனையாக மாறிய சாகஸ வரலாற்றை அல்குர்ஆனில் காணலாம். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக நடந்தேறிய சில நிகழ்ச்சிகளை குர்ஆன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. உண்ண உணவின்றி, நீராகரமின்றி, உதவிக்கு யாருமே அற்றநிலையில் தன்கணவனுக்கு அடிபடிந்து, பிஞ்சுக் குழந்தையாக இருந்த புதல்வன் இஸ்மாயில் அவர்கள் தவியாய்த் தவித்தபோது நீருக்காக ஓடினார்கள்.

காணல் நீரை உண்மையான நீர் என்று நினைத்து அங்கும் இங்கும் ஓடினார்கள். அந்த பாலைவன சுடுமணலில் அன்னை ஹாஜரா அவர்கள் ஒவ்வொரு மலைக்குன்றின் அடிவாரத்தில் தண்ணீரை தேடி ஓடிய அந்த நிகழ்ச்சியை நாம் நினைவுபடுத்தி கொள்வதற்காகத்தான் இப்போது புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் சபா, மர்வா என்ற மலைக்குன்றுகளிடையே ஓடிவருவதை அல்லாஹ் கடமையாக்கி வைத்திருக்கிறான். அன்றைய தினம் அன்னை ஹாஜராவும் அவர்தம் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் தாகத்தை தீர்த்து கொள்ள உதவிய அந்த தண்ணீர் தடாகம் தான் இன்றளவும், ஏன் உலகம் அழியும் வரையும் மக்களுக்கு தாகம் தீர்க்கும் தடாகமாகவே இருக்கும் அதுதான் சம்சம் என்ற பெயரில் ஹாஜிகளுக்கு தாகம் தீர்க்கும் என்றுமே வற்றாத தண்ணீரூற்றாக விளங்குகிறது.

ஹஜ்ஜை நோக்கி மக்கா நகர் சென்றவர்கள் 'லப்பைக்' என்கிற அறபு பதமான உனது அழைப்பை ஏற்றுவிட்டேன் என்று கூறும் போதே இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்ற உணர்வு அங்கே பற்றிக் கொள்கிறது. இறைவா உன்னை நினைத்து விட்டேன். உனக்காக புறப்படுகிறேன் என்ற மகிழ்ச்சிப்பெருவாரம் உடம்பெல்லாம் பரவுகிறது. உற்றார் உறவினர்களின் உறவுகளை விடுவித்துக் கொண்டு அல்லாஹ்வின் உறவோடு தன்னை இறுகப் பிணைத்துவிட்டதொரு நம்பிக்கை அவர்களது உள்ளத்தில் மலர்கிறது. வீடு வளவுகளும், சொத்து சுகங்களும் ஒரு முறை நீர்க்கானலாக தோன்றி மறைந்து, உள்ளமோ இந்த உலகத்தை விட்டகல்கிறது. ஒரு புதிய உலகத்தை நோக்கிய ஒரு புதிய பயணம் ஹஜ்ஜின் ஊடாக ஆரம்பமாகிறது.

ஹஜ்ஜின் போது உடைத்தியாகமும் முன்னிலை பெறுகின்றது. எத்தனையோ விதம்விதமான உடைகளை அணிந்த எமது உடல், உள்ளத்திற்கு விடைகொடுக்கும் வகையிலான ஒரேநிற ஆடையை ஹஜ்ஜின்போது மனிதன் அணிகின்றான். அரசன், ஆண்டி, ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமின்றி அனைவரும் வெள்ளை ஆடையை அணிந்து கொள்கின்றனர். எளிமையமான தோற்றத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அந்த ஆடையில் எளிதில் தூசு படிந்து அழுக்கடையும் ஆடை... தன்மீதும் தனது அலங்காரம் மீதும் ஒரு மனிதன் கொண்டுள்ள மித மிஞ்சிய கவனத்தை செயலிழக்கச் செய்யும் ஆடையாகவே அது காணப்படுகிறது. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அங்கு சென்றவனின் கவனத்தை பிறிதொன்றால் கவனம் கலையாதாவாறு அவன் அணிகின்ற ஆடையும் ஒரு தியாகம்தான்!

பொருட்தியாகம், உடல்தியாகம், மனதை ஒரு நிலைப்படுத்துதல் மூலமாகவும் தியாகத்தின் வெளிப்பாடுகளை மனிதன் ஹஜ்ஜின்போது வெளிப்படுத்துகின்றான். தொழுகை, நோன்பு, ஸகாத்;துடன் நான்காவதாக ஹஜ் களம் மனித சகோதரத்துவத்தையும், தியாகத்தையும், மணித உணர்வுகளோடு போராடும் ஒரு களமாகவே ஹஜ் காணப்படுகின்றது. நாடு, பிரதேசம், மொழி, நிறம், இனம், கோத்திரம், சகிப்புத்தன்மை போன்ற அனைத்துவகை இயல்புகளும் முரண்பாடுகளும் இந்த ஹஜ் எனும் களத்தில் ஒன்றிணைந்து ஒரே இனமக்களாக ஒன்றுசேர்ந்து கொள்கின்ற பக்குவத்தை ஹஜ் இறைவழிபாடுகள் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றி வைக்கிறது.

உலகின் எட்டுத் திக்குகளிலுமிருந்து இலட்சோப லட்சம் மக்கள் இன, நிற, மொழி, பிரதேச பேதங்களை மறந்து இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாகிய புனித ஹஜ்ஜை நிறைவேற்ற ஓர் இடத்தில் ஒன்று கூடியுள்ள சந்தர்ப்பம் இது. வருடந்தோறும் சழுதாயத்தின் ஒற்றுமையை வெளிக்காட்டுகின்ற இதுபோன்ற ஒரு மாபெரும் சனக்கூட்டத்தை உலகில் வேறு எங்கும் காணமுடியாது. இன்று முஸ்லீம்களுக்கு மத்தியில் பல்தரப்பட்ட வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த வேறுபாடுகள் ஹஜ்ஜின்போது ஏற்படுவதில்லை. இதை உணர்ந்து செயற்பட முன்வருதல்வேண்டும்.

மேலும் புனித ஹஜ்ஜுடைய காலம் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தன்னிகரற்ற தியாகங்களை எமது நினைவுக்குள் கொண்டுவருகின்றது. சத்தியத்தை உலகில் நிலைநாட்டுவதற்காகவும் இறைதிருப்தியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அன்னார் மேற்கொண்ட தியாகங்களை நாம் நினைத்துப் பார்க்கின்றோம். முஸ்லிம் உம்மத் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டு மட்டங்களிலும் மிக மோசமான ஒரு காலகட்டத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உலகில் முஸ்லிம்களின் இருப்புக்கே அச்சுறுத்தல் உருவாகியுள்ள ஒரு சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உலகின் எல்லா சக்திகளும் இஸ்லாத்திற்கு எதிராகவே செயற்படுகின்றன. ஆனால் நமக்குள் மாத்திரம் ஆயிரம்பிரிவுகள். கட்சியென்றும், கொள்கை என்றும் எத்தனை பிரிவுகள். பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன, ஹறாம் ஹலாலுக்கும் வேட்டு, எது உண்மை, எது பொய் என்பதெல்லாம் மறந்து நமது தலைவர்களும், தமது இயக்கங்களும் தெளிவுக்காக தொலைதூரத்தில் நிற்கின்றார்கள்போல் தெரிகின்றது. உண்மையின் பக்கம், தியாகத்தின் உண்ணத நிலையை இந்த ஹஜ்ஜின் போது கற்றுக் கொண்ட பாடத்தை இப்றாகீம் நபியின் தியாகத்தில் வெளிவந்த நமது சமூகம் ஏன் எமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாமல் போனது. சிந்தியுங்கள்.

எனவேதான், நமது எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தையும் அர்ப்பணத்துடனும் தியாக சிந்தையுடனும் சன்மார்க்க, சமூக நலன்களுக்காக உழைக்கும் மனப்பாங்கை உருவாக்க முயற்சித்தல் வேண்டும். உலமாக்கல், கதீப்மார்கள், கற்றறிந்தோர்கள் தம்மால் முடியுமானளவு தமது எழுத்துக்களாலும், பேச்சாற்றல்களாலும், மார்க்கத்தின் அடிப்படையிலான பின்பற்றல்களாலும் இவ்விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பானதாக அமையும். ஆகவே ஹஜ்ஜை, ஹஜ்ஜுடைய காலத்தை, தியாக திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை அர்த்தமுள்ளவையாக ஆக்கிக் கொள்ள திடசங்கற்பம் பூணுவோம், ஒற்றுமைப்படுவோம், அர்ப்பணத்துடன் செயற்படுவோம். எல்லாம் வல்ல இறையோனின் பக்கம் எமது கரங்களைத் திருப்புவோம். வெற்றி நிச்சம் கிடைக்கும் என நம்புவோம்.

No comments

Powered by Blogger.