Header Ads



நாடு முழுவதும் குர்பானை, தடையின்றி நிறைவேற்ற ஏற்பாடு - பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா


(tn) இந்நாட்டு முஸ்லிம்கள் உழ்ஹிய்யா கடமைகளை எவ்வித தங்குதடைகளும் இன்றி நிறைவேற்றுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.


முஸ்லிம்கள் உழ்ஹிய்யாவை சட்ட விதிமுறைகளைப் பேணி முறையாக நிறைவேற்றுமாறும் ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் போயா தினத்தில் மாத்திரம் உழ்ஹிய்யா கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தானும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் கேட்டுக் கொள்வதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உழ்ஹிய்யா கடமைகளை தங்குதடையின்றி நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு 14-10-2013 மாலை இடம்பெற்றது. உலக வர்த்தக மையத்தின் 27வது மாடியிலுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹலால் பிரிவின் ஷரீஆ பகுதி பொறுப்பாளர் அஷ்ஷெய்க் இர்பான் முபீன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் மேலும் விபரிக்கையில்,

ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் உழ்ஹிய்யா கடமைகளை தங்குதடையின்றி நிறைவேற்றுவது தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் என். கே. இளங்ககோனை கடந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

குர்பான் விடயங்கள் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளை கையாளும் பொருட்டு பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் நிர்வாக நடவடிக்கைளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ண தலைமையில் பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களை காமினி நவரட்ண, காமினி திசாநாயக்க ஆகிய மூவர் நியமித்துள்ளார்.

இதேவேளை, 11ம் திகதி முதல் 17ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் குர்பானுக்காக பிராணிகளை உரிய ஆவணங்களுடன் வாகனங்களில் எடுத்துச் செல்லும் போது தடைகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறும் நாட்டிலுள்ள மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள், பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இம்மாதம் 2ம் திகதி விசேட சுற்று நிருபத்தை பொலிஸ் திணைக்களம் அனுப்பியுள்ளது என்றார்.

உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அல்லது அது தொடர்பில் விளக்கம் தேவைப்படும் பட்சத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவின் ஷரீஆ பகுதி பொறுப்பாளர் அஷ்ஷெய்க் இர்பான மூபீனின் 071-5188822 என்ற இலக்கத்துடனோ, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ்டீன் சில்மியின் 072-3007300 என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு அறியத் தறுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

No comments

Powered by Blogger.