எகிப்தில் சுதந்திரமான பெருநாள் தொழுகைக்கும் தடை - பெருநாள் தொழுகையின்போது மோதல்
எகிப்தில் பிரதான சதுக்கங்களில் நேற்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலானவர்கள் உள்ளூர் பள்ளிவாசல்களிலேயே தொழுகையை நடத்தினர்.
தலைநகர் கெய்ரோவின் கிழக்காக அமைந்திருக்கும் விமானப்படை பள்ளிவாசலில் இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூர் மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் அப்தல் பத்தாஹ் அல் சிசி ஆகியோர் பெருநாள் தொழுகையில் பங்கேற்றாக அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் ஆரம்பமான தஹ்ரிர் சதுக்கம், முர்சி ஆதரவாளர்கள் முகாமிட்டிருந்த ரபா அல் அதவியா மற்றும் அல் நஹ்தா சதுக்கங்கள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அதேபோன்று எகிப்தியர் சம்பிரதாயமாக பெருநாள் தொழுகையை நடத்தும் தலைநகரில் இருக்கும் முஸ்தபா மஹ்முத் சதுக்கமும் மூடப்பட்டிருந்ததாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இஸ்லாமியவாதிகள் அல்லது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினரின் எந்த பேரணியும் நாட்டில் பதிவாகவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளனர். மதவிவகார அமைச்சு பரிந்துரைத்த பகுதிகளில் மாத்திரமே பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும் அலக்சான்டரியா நகரிலுள்ள அல் குவைத் இப்ராஹிம் பள்ளிவாசலில் பதவி கவிழ்க்கப்பட்ட எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சியின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் பெருநாள் தொழுகையின்போது மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அமைதியான பேரணியும் இடம்பெற்றுள்ளது.
.jpg)
Post a Comment