சிறுபான்மையினரின் மனம் நோகும்படி செயலாற்றிய விமல், சம்பிக்க, ஞானசார தேரரை கைதுசெய்யுங்கள்
(vi) நாட்டை பிளவுபடுத்த வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் முயற்சிப்பதனால் அவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று பௌத்த பேரினவாத சக்திகள் வலியுறுத்தும் நிலையில் அவரை கைதுசெய்வதற்கு முன்பு சிறுபான்மை மக்களின் மனம் நோகும்படி செயலாற்றிய விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க மற்றும் ஞானசார தேரரை பொலிஸார் முதலில் கைதுசெய்ய வேண்டும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார்.
அத்துடன் 1915 ஆம் ஆண்டு சிங்கள - முஸ்லிம் இனக்கலவர நினைவையொட்டி தமிழர் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களை தாக்குவதற்கு பேரினவாதிகள் திட்டமிட்டுள்ள நிலையில் உடனடியாக சிறுபான்மையினர் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு துரிதமாக பாதுகாப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
1915 ஆம் ஆண்டு கண்டியில் இடம்பெற்ற சிங்கள - முஸ்லிம் கலவரத்தினை நினைவையொட்டி தமிழர் மற்றும் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பௌத்த பேரினவாதிகள் சதித் திட்டம் தீட்டுவதாக சந்தேகிக்கின்றோம். இதன் காரணமாக சிறுபான்மையினர் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு உடனடியாக பாதுகாப்பினை வழங்கவேண்டும். இல்லையேல் 1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தை விட பயங்கரமான சூழல் ஏற்படலாம்.
இதுவரைக்கும் இந்த நாட்டை ஆண்ட எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு இனவாதத்தை தூண்டவில்லை. மஹிந்த அரசாங்கமே இவ்வாறு படுமோசமாக செயற்படுகிறது. அத்துடன் அதிகளவில் மோசடிகளை செய்த அரசாங்கமும் இதுவேயாகும்.
தற்போது கொழும்பு புராதன நூதனசாலையை வெலிக்கடை சிறைச்சாலை அருகில் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றனர். இது மிகவும் அர்த்தமற்ற முடிவாகும். இந்நாட்டிற்கும் கொழும்பு நகருக்கும் மதிப்புக்குரியதாக இருந்த நூதனசாலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் முயற்சி மிகவும் முட்டாள்தனமானதாகும்.
அத்துடன் இவ்வரசின் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. எனவே இந்த மோசடிமிக்க அரசை கவிழ்க்க வேண்டிய காலம் வந்துள்ள நிலையில் எதிர்க்கட்சி இன்று பலவீனமாக காணப்படுகின்றது. எதிர்க்கட்சி பலமானதாக செயலுருவமுற்று இவ்வினவாத அரசை கவிழ்க்க அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் என்றார்.

Post a Comment