கல்முனை மாணவர்களின் பெற்றோரின் கவனத்திற்கு..!
(யு.எம்.இஸ்ஹாக்)
அரசாங்க உத்தியோகத்தர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும் போதும் சில வேளைகளில் மக்கள் அவ்உத்தியோகத்தர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்கின்றனர். இவைகளை நாம் பொருட்படுத்தாது கடமையுணர்வுடன் செயற்படும் போதுதான் அரசாங்கத்தின் கொள்கைகளையும், அபிவிருத்திகளையும் சிறப்பாக முன்கொண்டு செல்ல முடியும். இவ்வாறு கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையற்றிய கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கபார் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நேற்று புதன்கிழமை (23) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பு பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹித், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.நியாஸ் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யூ.ஏ.கபார் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
2012ஆம் ஆண்டில் எமது பிரதேசத்தில் வாகனங்களின் மூலம் குற்றம் புரிந்த வகையில் தண்டப்பணமாக சுமார் ஒரு மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கம் வருமானமாக பெற்றுள்ளது. இவ்வாறு கிடைக்கும் பணத்தில் 75 சதவிகிதமான பணம் எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. குற்றம் இழைப்பவர்கள் தண்டனை பெறுவதன் மூலமே அதனை ஒப்புக்கொண்டு மேலும் குற்றம் புரிவதை தடுத்துக் கொள்கின்றனர். இன்னும் ஒருசிலர் குற்றம் புரிந்துவிட்டு இலஞ்சம் கொடுத்து இன்னுமொரு குற்றத்தையும் புரிகின்றனர். அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் மக்களை பாதுகாப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளன. அதனை மதித்து நடக்க நாம் அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும். இதைவிட பாடசாலை மாணவர்கள் முச்சக்கர வண்டியில் மிகவும் நெருக்கமாக ஏற்றிச் செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களை பாடசாலைக்கு அழைத்து தெளிவுபடுத்திய பின்னர் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

Post a Comment