தமிழர் தரப்பின் மென்போக்கு அரசியல் தலைமைகள் முஸ்லிம்களுடைய இருப்பை அங்கீகரித்திருக்கிறார்கள்
முஸ்லிம் காங்கிரஸினால் இந்த சபையில் (கிழக்கு மாகாண சபை) சமர்ப்பிக்கப்பட்டுள்ள பதின்மூன்றாவது சரத்தையும் மாகாண சபை முறைமையையும் பாதுகாக்கும் பிரேரணை, யாருக்கும் எதிரானதாகவோ அல்லது சார்பானதாகவோ கொண்டு வரப்படவில்லை என்பதை முதலில் மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்கிறோம். முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை இம்மாகாண சபை முறை என்பது சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறையே அன்றி வேறொன்றல்ல என்பதில் தெளிவாக இருக்கிறது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
13வது சரத்தை பாதுகாப்பது சம்மந்தமாக அண்மையில் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை அமர்வில் உரையாற்றும்போதே மேற்படி கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் வடக்கும் கிழக்கும் இணைந்த வட கிழக்கு மாகாண சபையாக இருந்த போது, அப்போதைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் அவர்கள், வட கிழக்கு மாகாண சபையை தமிழீழமாகப் பிரகடனப்படுத்திய போது, எதிர்க்கட்சியில் 17 ஆசனங்களோடு இருந்த முஸ்லிம் காங்கிரஸ், இலங்கையின் இறைமைக்கு எதிரான இந்த விடயத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி வெளி நடப்பு செய்தது. எனவே, மாகாண சபை முறைமையை சிறுபான்மைக்கான அதிகாரப்பரவலாக்கப் பொறிமுறையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதிலும் பிரிவினைக்கான ஒரு கருவியாக அதனைப் பயன்படுத்தக் கூடாது என்பதிலும் முஸ்லிம் காங்கிரஸ், மாகாண சபை முறைமை ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை மிக உறுதியான நிலைப்பாட்டிலுள்ளது.
எனவே, இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தப் பிரேரணையை, அரசிற்கு எதிரானதாகவோ அல்லது பெரும்பான்மை சமூகத்திற்கு எதிரானதாகவோ யாரும் அர்த்தப்படுத்திவிடக் கூடாது. அதேநேரம், தமிழ் சமூகத்தோடு ஒரு சிறுபான்மைச் சமூகம் என்கின்ற அடிப்படையில் உறவுக்கான மனந்திறக்கின்ற ஒரு முனைவும் அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குகின்ற ஒரு நோக்கமும் இந்தப் பிரேரணையில் இல்லாமல் இல்லை.
ஏனெனில், இன்று தமிழர் அரசியல் பரப்பில் இருக்கும் மிதவாத தலைமைகளில், முஸ்லிம்கள் என்ற மூன்றாவது சமூகத்தை அங்கிகரித்த தலைமைகள்தான் இருக்கின்றன. அன்றைக்கு 50 க்கு 50 என்ற கோரிக்கையை ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்கள் முன்வைத்த போது, அந்த 50 & என்பதை சிறுபான்மை சமூகங்களுக்காகத்தான் வேண்டி நின்றார். சிறுபான்மை என்பதற்குள் முஸ்லிம்களையும் சேர்த்துக் கொண்டு, முஸ்லிம் சமூத்தை அங்கிகரித்து நின்றார். அவரின் வாரிசான கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று தமிழர் அரசியல் பரப்பில் ஒரு தலைமையாக இருக்கிறார்.
மறுபுறம் கிழக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகளை உருவாக்கி முஸ்லிம்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் ஏற்பாட்டினை முன்மொழிந்த செல்வ நாயகம் அவர்களின் வழிவந்த தமிழரசுக் கட்சியும் சம்பந்தன் அவர்களும் முஸ்லிம்கள் தொடர்பான ஒரு தெளிவான பார்வையுடைய சுமந்திரன் அவர்களும் தமிழர் அரசியல் பரப்பில் தலைமைகளாக இருக்கின்றனர்.
எனவே, தமிழர் தரப்பில் இருக்கின்ற மென்போக்கு அரசியல் தலைமைகள் முஸ்லிம்களுடைய இருப்பை அங்கீகரித்திருக்கின்றார்கள் என்கின்ற அடிப்படையில், இரு சமூகங்களுக்கும் பொதுவான விடயங்களில் இவர்களோடு இணைந்து பணியாற்ற முடியும் என முஸ்லிம் காங்கிரஸும் முஸ்லிம் சமூகமும் கருதுகின்றன.
அதற்காக, அவர்களுக்குச் சார்பாக இந்தப் பிரேரணையை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டு வந்திருக்கிறது என்று கருத்தல்ல. மாறாக, இந்தப் பதின்மூன்றாவது சரத்தும் மாகாண சபை முறைமையும், இலங்கையின் மூன்று சமூகங்களும் தங்கள் இரத்தத்தை சிந்திப் பெற்ற விடயமாகும். அதே போன்று, இந்தியா எனும் பிராந்திய வல்லரசும் இழப்பை சந்தித்துப் பெற்ற ஒரு விடயமாகும். இவ்விடயத்தை அற்ப அரசியலுக்காக யாரும் அழித்துவிட இடமளிக்க முடியாது என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் முழு மூச்சாக நின்று இப்பிரேரணையைக் கொண்டு வந்திருக்கிறது.
இலங்கையின் இனப்பிரச்சினையில் - 200,000க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படிருக்கிறார்கள் - 90,000 தமிழ் பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கிறார்கள் - 25,000 தமிழர்கள் அங்கவீன முற்றிருக்கிறார்கள் - 15,000 தமிழர்கள் அனாதைகளாக்கப் பட்டிருக்கிறார்கள். அதே போன்று சிங்கள தலைவர்களும் பொதுமக்களுமாக 45,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் - 35,000 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளார்கள் - 25,000 இராணுவ வீரர்கள் அங்கவீனமுற்றுள்ளார்கள். முஸ்லிம்கள் - 6,500க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் - 800 முஸ்லிம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கிறார்கள் - 80,000 வட மாகாண முஸ்லிம்கள் அநியாயமாக அகதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள் - சுமார் 7,400 கோடிக்கு மேலான சொத்திழப்புக்கு முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்து நிற்கிறது.
இவற்றிற்கு மேலாக, இந்தியா 6,000 இராணுவ வீரர்களை பலிகொடுத்துள்ளது. தலையிடாக் கொள்கையாக இருந்த அவர்களுடைய கொள்கையை மாற்றி இலங்கையின் விவகாரத்தில் தலையிட்டு சர்வதேச ரீதியான அபகீர்த்தியை இந்தியா பெற்றிருக்கிறது. அந்த நாட்டை பாரம்பரியமாக ஆண்டு வந்த அரசியல் குடும்பத்தின் வாரிசை இந்தியா இழந்து நிற்கிறது.
ஆகவே, இவ்வளவு பாரிய இழப்புக்களையும் சந்தித்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பதின்மூன்றாவது சரத்தையும் மாகாண சபை முறைமையையும் அவ்வளவு இலகுவாக மிகச் சாதாரணமாக தூக்கி வீசிவிட முடியாது. இந்த நாட்டில் வாழும் தமிழராக இருக்கட்டும் சிங்களவராக இருக்கட்டும் முஸ்லிமாக இருக்கட்டும் நாம் ஒவ்வொருவரும் இரத்தம் சிந்தி உருவாக்கிய இந்தப் பதின்மூன்றாவது சரத்தை பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் உறுதி பூணுவது நம்மீது வரலாற்றுக் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், கடந்த காலத்தில், 50 க்கு 50 கோரிக்கை நிராகரிக்கப்பட்டது டட்லி-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது பண்டா - செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. இவ்வாறு எல்லாவற்றையும் கிழித்தெறிந்து விட்டு வட்டமேசை மாநாடு என்றார்கள் சர்வ கட்சி மாநாடு என்றார்கள் பாராளுமன்ற தெரிவுக் குழு என்றார்கள் மங்கள முனசிங்கவின் தெரிவுக்குழு என்றார்கள் டி.யூ குணசேகரவின் தெரிவுக் குழு என்றார்கள் இறுதியில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்றும் கூறி அவை எல்லாவற்றையும் நம் கண்முன்னே கிடப்பில் போட்டார்கள். சிலவற்றை துடைத்தும் எறிந்திருக்கிறார்கள்.
இப்படி, எல்லாமே கிடப்பில் போடப்பட்டு துடைத்து எறியப்பட்டதற்குப் பின்னர் இந்த பதின்மூன்றாவது சரத்து மாத்திரம்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக உள்ள ஒரு புள்ளியாக எஞ்சியிருக்கிறது. இதுவும் கூட ஒட்டு மொத்தமான தீர்;வாக அமையவில்லை என்பதும் நாம் எல்லோரும் அறிந்திருக்கும் விடயமாகும். இருப்பினும், இதனை வைத்து, சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கும் ஒரு பலமிக்க பொறிமுறையை விருத்தி செய்து எடுப்பதற்கு அடிப்படை அம்சமாக இதனைப் பாதுகாக்க வேண்டிய தேவை நமக்குள்ளது.
அந்த அடிப்படையில்தான், மாகாண சபைகளுக்குள்ள சட்டவாக்க உரிமையை இல்லாமற் செய்யும் எந்த முயற்சியையும், முஸ்லிம் காங்கிரஸ் மிக மூர்க்கத்தனமாக எதிர்த்து நிற்கிறது. எமது தலைவர், நீதி அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்கள் அமைச்சரவையில், மாகாண சபைகளின் சட்டவாக்க உரிமையை கேள்விக்குட்படுத்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தனிமையில் நின்று எதிர்த்தார். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 5 சிறுபான்மை தலைவர்களில் அவர் மட்டுமே துணிந்து நின்றார்.
முஸ்லிம் காங்கிரஸ் பதின்மூன்றாவது சரத்தை பாதுகாக்கப் போராடுவது தனியே முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல தமிழர்களுக்காகவும் வடக்கு, கிழக்கில் சிறு பான்மையாக வாழும் சிங்களவர்களுக்காகவும்தான் என்பதை இந்தச் சபையில் இருக்கும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், வடக்கு கிழக்கு இணைப்பு என்பதில், முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கும் தார்மீக ரீதியிலான பேரம் பேசும் விடயத்தை யாருக்கோ தேவைப்படும் அற்ப அரசியல் லாபங்களுக்காக முஸ்லிம் காங்கிரஸ் தாரை வார்த்துக் கொடுக்காது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ஏனெனில், வடக்கு கிழக்கு இணைவதாக இருத்தால் முஸ்லிம்களுக்கென்று தனியான அரசியல் அதிகார அலகு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறில்லை எனில், முஸ்லிம் சமூகம் அதனை ஏற்றுக் கொள்ளாது எனவும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முஸ்லிம்களின் தனித்துவ அரசியலின் தந்தையுமான மர்ஹும் அஷ்ரப் அவர்கள் மிகத் தெளிவாக வழிகாட்டிச் சென்றிருக்கிறார்.
ஆகவே, வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று கேட்பதற்கு தமிழ் சமூகத்திற்கு எவ்வளவு உரிமையுண்டோ அதே போன்றே இணைப்பதாக இருந்தால், நாங்கள் எங்களை ஆள்வதற்கு தனியான அலகைத் தாருங்கள் என்று முஸ்லிம்கள் கோருவதற்கும் அவர்களுக்கு தார்மீக உரிமையுண்டு என்பதை தமிழர் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே, முஸ்லிம்களிடம் பேரம் பேசுகின்ற சக்தியை கொண்டு வருகின்ற வடக்கு கிழக்கு இணைத்தல், பிரித்தல் என்கின்ற விடயத்தில், முஸ்லிம் காங்கிரஸ் மிகத் தெளிவான கொள்கையைக் கொண்டிருக்கிறது.
அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கும் இந்தப் பதின்மூன்றாவது சரத்தின் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக உறுஞ்சி எடுக்க நினைக்கும் சக்திகளுக்கு நாங்கள் ஒரு செய்தியை சொல்கிறோம். நீங்கள் இன்னும் ஸ்டாலின் போன்ற காலனித்துவ வாதிகளின் சிந்தனைகளில் இருந்து கொண்டு எந்த சமூகத்தையும் அடக்கி ஆழ நினைக்க வேண்டாம். ஒரு சமூகத்தை இனமாக அங்கீகரித்து, அவர்களது சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ள நிபந்தனை விதிக்க வேண்டாம். தனியான நிலமும் தனியான கலாசாரமும் தனியான பொருளாதாரமும் தனியான மொழியும் இருந்தால்தான் எந்த சமூகத்தையும் இனமாக் கருத முடியும் என ஸ்டாலின் போன்றோர் கூறியதை உங்கள் சித்தாந்தமாக்கிக் கொள்ள வேண்டாம்.
பின் நவீனத்துவ சிந்தனைகள் வளர்ந்து எந்த மக்கள் தொகை தன்னை தனித்துவ இனமாக அல்லது தேசியமாகக் கணிப்பிடக் கோருகிறதோ - அதனை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என புத்துரு எடுத்து நிற்கின்றது. எனவே, இலங்கையில் வாழுகின்ற ஏதாவது மக்கள் தொகை எங்களை தனியான இனமாக அல்லது தேசியமாக அல்லது தேசமாகக் கருத வேண்டும் என்றால் அதனை ஏற்றுக் கொண்டு அதிகாரத்தை பகிர்ந்து வாழ தயாராக வேண்டும்.
இவ்வகையில்தான், வன்னியை வன்னியனும் யாழ்ப்பாணத்தை சங்கிலியனும் ஆண்டதைப் போன்றும் - தெற்கே சிங்கள மன்னர்கள் ஆண்டதைப் போன்றும் - முஸ்லிம் சமூகம் இலங்கையின் எந்த நிலப்பரப்பையும் ஆண்டு நிற்கவில்லை என்ற போதிலும், முஸ்லிம் சமூகம் மூன்றாவது தேசமாக உருவெடுத்து நிற்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய கால நிர்ப்பந்தம் தம்மை வந்தடைந்திருப்பதை தமிழ் சமூகமும் சிங்கள சமூகமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் அரசியல் அபிலாiஷகளையும் புரிந்து கொண்டு, அவர்களுக்கான அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்ள இப்பதின்மூன்றாவது சரத்தை பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும்.
மாறாக, நம்மிடம் பெரும்பான்மை பலமிருக்கிறது என்பதைப் பயன்படுத்தி இந்த அதிகார பகிர்வு ஏற்பாட்டை இல்லாமல் ஒழிப்பதற்கு யாரும் முயற்சிக்க கூடாது. அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு நாளும் இடமளிக்காது. பெரும்பான்மைப் பலம் என்பதை உலகம் இன்று ஜனநாயகப் பயங்கரவதமாகப் பார்க்கிறது. இலங்கையில் இந்தப் பெரும்பான்மை மேலாதிக்க வாதத்தினால்தான் இவ்வளவு அனர்த்தங்களும் ஏற்பட்டிருக்கிறது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே, யார் எப்படி பார்த்தாலும் அல்லது சிந்தித்தாலும், இந்த பதின் மூன்றாவது சரத்து என்பது இனங்களுக்கு இடையிலே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நமக்கிருக்கின்ற ஒரேயொரு அரசியல் யாப்பு ரீதியிலான ஏற்பாடு என்பதை புரிந்து கொண்டு, இதனை பாதுகாப்பதற்கும், இதற்கு வலுச் சேர்ப்பதற்கும் முன்வர வேண்டும்.
ஆனால், இவ்வாறு இந்த சபையில் நாம் பதின்மூன்றாவது சரத்தினை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கின்ற வேளை முஸ்லிம்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு, இந்தச் சபை உறுப்பினர்களாக இருக்கும் அதாஉல்லாவினதும் றிஷாட்டினதும் கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் யாருமே சமூகமளிக்காமல் இருப்பதையிட்டு முஸ்லிம் சமூகம் வெட்கித்து வேதனைப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, இவர்கள் மக்களுக்குச் செய்யும் துரோகங்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவதை இந்தச் சபை ஒரு நாளில் பார்க்கத்தான் போகிறது.
எது எப்படிப் போனாலும், முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை, சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடாகவுள்ள பதின்மூன்றாவது சரத்தைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை மிக உறுதியாகவும் ஆணித்தரமாகவும் கூறிவைக்க விரும்புகிறேன்.
.jpg)
Post a Comment