சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது - ஆபிரிக்க தலைவர்கள்
ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் தலைவர்கள் மீதான போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்யும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் பாரபட்சமாக இயங்குவதாக ஆப்பிரிக்கத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பதவியில் இருக்கும் தலைவர்களை விசாரிப்பதை திஹேகில் இருக்கும் சர்வதேச நீதிமன்றம் நிறுத்தவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நெதர்லாந்து நாட்டின் திஹேகில் இயங்கி வரும் சர்வதேச நீதிமன்றத்துடனான தங்களின் உறவை ஆய்வு செய்ய 54 யூனியன் தலைவர்கள் எதியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இன்று கூடினர். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசு மற்றும் அதன் தலைவர்கள் மீது விசாரணை நடைபெறுவது நிறுத்தப்பட வேண்டும்.
நமது கருத்து தெளிவாக உரக்கக் கேட்கப்பட வேண்டும் என்பதற்காகவே இங்கு நாம் ஒன்றுகூடி ஒருமித்த குரலில் இதனை எடுத்துரைக்கின்றோம் என்று எதியோப்பியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் தெரிவித்தார்.
தற்போது பதவியில் உள்ள கென்யா அதிபரான உரு கென்யாட்டா மீதும், அவரது துணை அதிபர் வில்லியம் ருடோ மீதும் போர்க்குற்ற வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னால் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் 1000க்கும் மேற்பட்டோர் இறந்தது குறித்து இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேபோல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள சூடானின் அதிபர் ஓமர் அல் பஷீர் சர்வதேச நீதிமன்றம் வெளியிட்டுள்ள கைது அறிக்கையைத் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவும், உகாண்டாவும் கூட தங்களின் தலைவர்கள் தாக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றன.

Post a Comment