புலிகளுடன் கயிறு இழுக்கும் போட்டி: சீன மிருகக்காட்சி சாலையில் ஏற்பாடு
சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில், பொதுமக்கள், புலியுடன் கயிறு இழுக்கும் போட்டியை விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவின், ஹுனான் பகுதியில், மிருகக்காட்சி சாலை உள்ளது. பல விதமான புலிகள், இங்கு பராமரிக்கப்படுகின்றன. சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், இங்குள்ள புலிகளுடன், கயிறு இழுக்கும் போட்டியை நடத்த, மிருகக்காட்சி சாலை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட புலியுடன், சிறு துவாரத்தின் வழியாக கயிறு செலுத்தப்பட்டு, அந்த கயிற்றில் கோழி கறி, சாக்கு பையில் கட்டப்பட்டிருக்கும். கூண்டுக்கு வெளியே, பார்வையாளர்கள், மறு முனை கயிறை கொண்டு இழுத்து, புலியுடன் விளையாடலாம். இந்த போட்டிக்கு, பார்வையாளர்கள், 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வழக்கம் போல, இந்த போட்டிக்கும் பிராணிகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மிருகங்களை வைத்து நிகழ்ச்சி நடத்த சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் குறிப்பிடுகையில், "சர்க்கசில் தான் மிருகங்களை வைத்து நிகழ்ச்சி நடத்த தடை உள்ளது. உயிரியல் பூங்காக்களில் இந்த தடை அமலில் இல்லை' என்றனர். பலமுறை இந்த கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்கும், புலிகளின் பற்கள் உடைந்து விடும் அபாயம் உள்ளதாக, மிருக வைத்தியர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment