Header Ads



ஐயூப் அஸ்மின் (நளீமி) க்கு ஒரு திறந்த மடல்..!

அஸ்ஸலாமு அலைக்கும், 

வட மாகாண சபை உறுப்பினாராக தெரிவு செய்யப்பட்டதற்கு முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட நீங்கள் கடந்த மாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பு சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு குறுகிய கால பிரச்சாரத்தை மேற்கொண்டு சுமார் 1009 வாக்குகளைப் பெற்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். நீங்கள் தோல்வியடைந்திருந்தாலும் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவின் அடையாளமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டீர்கள். 

வட மாகாண மக்களின் குறிப்பாக முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிப் பேச வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் உங்கள் மீது அமானிதமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது, அதை செவ்வனே செய்வீர்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு, காரணம் இஸ்லாமிய சட்டங்களை முறைப்படி கற்று நல்லாட்சி சிந்தனையில் வளர்ந்தவர் நீங்கள்.

1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான வட பகுதி மக்கள் 23 வருடங்கள் கடந்தும் கூட இன்றும் மன்னார் பகுதிகளில் அகதி முகாம்களில் தங்கி இருப்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் இருந்தும் அந்த மக்கள் இன்றும் அகதி முகாம்களில் தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட வரிசையில் நின்றுதான் நிறைவேற்ற வேண்டிய தேவையுடன் இருக்கிறார்கள்.

பிச்சைக்காரன் எப்படி தனது காயத்தை ஆற விடாது அதை காட்டிக் காட்டி பிச்சையெடுப்பது போல 23 வருடங்களாக அகதிகளை வைத்து தங்களின் அரசியல் வியாபாரத்தை நடத்தும் முஸ்லிம் அரசியல்வாதிகள்தான்  எம்முன்னே இருக்கிறார்கள். மாற்று அரசியல் சிந்தனையை வேண்டி நிற்கும் நீங்கள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி முஸ்லிம் அகதிகளை மட்டுமல்ல தமிழ் அகதிகளைக் கூட தங்களின் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்ய பாடுபட வேண்டும், அகதிகள் இல்லாத தேசமாக இலங்கையை கட்டி எழுப்ப முன் வர வேண்டும். அமைச்சர்களாலும் பிரதியமைச்சர்களாலும், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களாலும் செய்ய முடியாத மீள் குடியேற்றத்தை நீங்கள் செய்து காட்ட வேண்டும்.

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரத்துடன் ஒப்பிடும் போது தற்போது உங்கள் கைகளில் கிடைத்துள்ள மாகாண சபை உறுப்பினர் என்ற அதிகாரம் மிக சொற்பமே, இருந்த போதும் வட மாகாண சபையின் அதிகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் கிடைத்துள்ள காரணத்தால், அதில் நீங்களும் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அகதிகளை மீள் குடியேற்றம் செய்ய வேண்டிய அவசியமும் அவசரமும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழீழ விடுதலைப்புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றம் செய்து அவர்களுக்குரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய ஒரு பொறுப்பும் கடமையும் வட பகுதி தமிழ் மக்கள் மீது இருக்கிறது.

வட பகுதி மக்கள் உங்களிடம் கட்டடங்களையோ காபட் வீதிகளையோ (போலியான, திட்டமிடப்படாத) அபிவிருத்திகளையோ எதிர்பார்த்து வாக்களிக்கவில்லை, அவர்கள் வேண்டி நிற்பதெல்லாம் தங்களின் சொந்த இடங்களில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை மட்டுமே.

அது மட்டுமல்ல, முஸ்லிம் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சொகுசு வாழ்க்கைக்கு சோரம் போனவர்கள் என்ற ஒரு மனப்பதிவு தமிழ் சிங்கள மக்களிடம் இருக்கிறது, நமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் இதற்கு உதாரணமாக எம் கண்முன்னே இருக்கிறது, அது உண்மையும் கூட, இந்த நிலையை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும். எந்த நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உங்களுக்கு வழங்கிய இந்த அமானிதமான பதவியை நீங்கள் துஷ்பிரயோகம் செய்யாமல் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மாற்று அரசியல் சக்தியாக மாறிவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நல்லாட்சி சிந்தனையின் செயல்வடிவமாக நீங்கள் செயல்பட வேண்டும் என்பதே இன்று உங்களிடமிருந்து முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

M.S.M.பாயிஸ்,

சவூதி அரேபியா 


No comments

Powered by Blogger.