அமைச்சர் டிலான் பெரேராவை திருப்பியனுப்பிய அவரது தந்தை - பொது வைபவத்தில் சம்பவம்
(vi) உயர் நீதிமன்ற நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் பதுளை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொள்ளச் சென்ற அமைச்சர் டிலான் பெரேரா திருப்பி அனுப்பப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பதுளை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் உயர் நீதிமன்ற நீதியரசர் மொஹான் பீரில் தலைமையில் கடந்த 11 ஆம் திகதி கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீதிபதிகள் மற்றம் சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் சட்டத்தரணி என்ற வகையிலும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் டிலான் பெரேராவும் சமூகமளித்திருந்தார்.
அதேவேளை அக்கூட்டத்திற்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் அமைச்சர் டிலான் பெரேராவின் தந்தையுமான மார்ஷல் பெரேராவும் சமூகமளித்திருந்தார். கூட்டம் ஆரம்பத்தின்போது ஜனாதிபதி சட்டத்தரணி மார்ஷல் பெரேரா நடைபெறும் இக்கூட்டமானது தற்போது கடமையாற்றும் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் பங்குபற்றும் அதி விசேட கூட்டமாகும். அந்நிலையில் அமைச்சர் டிலான் பெரேரா இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. அவர் சட்டத்தரணியாக இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் அவர் செயலாற்றுவதில்லை. ஆகையினால் அவர் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதை ஆட்சேபிக்கின்றேன் என ஒழுங்குப் பிரச்சினையொன்றினை எழுப்பினார்.
இவ் ஆட்சேபனையையடுத்து அமைச்சர் டிலான் பெரேரா கூட்டத்திலிருந்து எழும்பி உயர் நீதிமன்ற நீதியரசரிடம் விடயங்களைக்கூறி ஆட்சேபனையை ஏற்று வெளியேறிச் சென்றார்.
இக்கூட்டத்திற்கு வருகை தந்த உயர் நீதிமன்ற நீதியரசரை வெற்றிலை கொடுத்து வரவேற்று அவரை கூட்டமண்டபத்திற்கு அழைத்துச் சென்றவர் அமைச்சர் டிலான் பெரேரா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment