காத்தான்குடி சம்மேளனம் பொறுப்புடன் பதில் அளிக்குமா..?
(M.S.M.பாயிஸ் - சவூதி அரேபியா)
''சென்ற வருடம் சம்மேளன கூட்டு ஊல்ஹியாவுக்கு சேகரித்த பணத்தில் 7 இலட்சம் ரூபா அளவில் வங்கியில் இருப்பு வைத்து அதற்கான இலாபத்தையும் பெற்று வருகின்ற சம்மேளனத்தின் கூட்டு ஊல்ஹியா திட்டத்துக்கு இவ்வருடமும் எப்படி பங்களிப்பது? எப்படி இருப்பு வைப்பது?? இது ஆகுமா???"
இவ்வாறு காத்தான்குடி வார உரைகல் பத்திரிகை இன்று (13.10.2013) தனது பல நூறு வாசகர்களுக்கு ''டுவீட்டர்'' குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன்!
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பல வருடங்களாக கூட்டு ஊல்ஹியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. காத்தான்குடி மக்கள் இதற்கு தங்களாலான பங்களிப்பை செய்து வருகின்ற நிலையில் மேற்படி தகவல் பலரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. ஊல்ஹியா என்பது இஸ்லாத்தில் ஒரு முக்கியமான ஒரு சுன்னத்தான காரியமாகும்.
சம்மேளனத்தின் கூட்டு ஊல்ஹியா திட்டம் மூலம் பலர் பயனடைந்து வரும் நிலையில் இன்று ''வார உரைகல்'' மூலம் அனுப்பப்பட்ட மேற்படி செய்தியை படித்த பலரும் சம்மேளனத்தின் கூட்டு ஊல்ஹியாவில் நம்பிக்கை இழந்து கருத்துக்களை பரிமாறியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
மேற்படி செய்தியின் உண்மைத் தன்மை பற்றி தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு சம்மேளனத்துக்கு உண்டு. ''வாரஉரைகல்'' பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் புவி ரஹ்மத்துல்லாஹ் அவர்களை சம்மேளனத்துக்கு அழைத்து அவர் தெரிவித்த கருத்துக்கான காரணத்தையும் ஆதாரத்தையும் கேட்டு பொதுமக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இதன் உண்மைத் தன்மையை மக்கள் உணராதவரை சம்மேளனத்தின் கூட்டு ஊல்ஹியா மட்டுமல்ல கூட்டு சகாத் திட்டத்தைக் கூட மக்கள் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு சம்மேளனம் நிச்சயம் தள்ளப்படும்.
''வார உரைகல்'' தெரிவித்திருக்கும் கருத்து பாரதூரமானது. மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டதாக இருப்பதனால் கண்டிப்பாக எதிர்வரும் ஹஜ்ஜும் பெருநாள் தினத்துக்கு முன் இதற்கான விளக்கத்தினை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்!

Post a Comment