ஒரு ஓவரில் 39 ரன்களை வழங்கி உலகச் சாதனை படைத்த அலாவுதீன் பாபு
(Inne) பங்களாதேஷில் நடைபெற்ற 50 ஓவர் போட்டி ஒன்றில் உலகச் சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
டாக்காவில், டாக்கா பிரிமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. 02-10-2013 நடைபெற்ற ஒரு போட்டியில் அபானி லிமிடெட் அணியும், ஜமால் தன்மோண்டி அணியும் மோதின. முதலில் ஜமால் தன்மோண்டி அணி துடுப்பெடுத்து ஆடியது. அந்த அணியின் எல்டன் சிகும்பராவுக்கு எதிராக 50 வது ஓவரை அபான் லிமிடெட்டைச் சார்ந்த அலாவுதீன் பாபு வீசினார்.
எல்டன் சிகும்பரா ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்டர் ஆவார். முதல் பந்து நோ-பால் ஆக வீசப்பட பந்து பவுண்டரிக்கு சென்றது. அடுத்த பந்து வைட் ஆக ஆனது. அடுத்த 5 பந்துகளில் 3 சிக்சர்களையும் 2 பவுண்டரிகளையும் சிகும்பரா விளாசினார்.
அடுத்ததாக மீண்டும் ஒரு வைட். கடைசியாக வீசப்பட்ட பந்தும் ஆறாக மாறியது. ஆக மொத்தம் ஒரு ஓவரில் 39 ரன்களை வழங்கி உலகச் சாதனை படைத்தார் அலாவுதீன் பாபு. இதற்கு முன்பாக நெதர்லாந்து பந்து வீச்சாளர் டான் வான் பங்கி வழங்கிய 36 ரன்கள் தான் உலகச் சாதனையாக இருந்தது. டான் வானின் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை அடித்தவர் தென் ஆப்ரிக்க ஆட்டக்காரர் கிப்ஸ். இது 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் நிகழ்ந்தது.
இந்தப் போட்டியில் அபான் லிமிடெட் அணி 28 ரன்களால் தோல்வி கண்டது.

Post a Comment