வடபகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் 23 ஆவது ஆண்டு நிறைவு
வட மாகாணத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லீம்கள் தங்கள் வாழ்க்கையில் இடம்பெற்ற அந்த இருண்ட நாட்களை இன்னமும் தெளிவாக நினைவில் கொண்டுள்ளார்கள். அது 1990 ஒக்டோபர் மாதக் கடைசி, வட மாகாணத்தை சேர்ந்த முஸ்லீம்கள்,சில மணி நேரக் காலக்கெடுவுக்குள் தங்கள் சொந்த வீடுகளையும் சொத்துக்களையும் விட்டு உடனடியாக வெளியேறும்படி திடீரென கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். எந்தவிதமான பெறுமதி வாய்ந்த பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் செல்லக்கூடாது என அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து தேடிய தங்கள் பணத்தையோ அல்லது நகைகளையோ தங்களுடன் எடுத்துச் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் தங்கள் சொத்துக்களையோ அல்லது உடமைகளையோ விற்பதற்கும் அவர்கள் அனுமதிக்கப் படவில்லை.தங்கள் சொந்தக் கிராமங்களைவிட்டு வெறுங்கையுடன் செல்லும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். உடுத்த உடையுடனே தாங்கள் பிறந்த இடங்களை விட்டு அவர்கள் கட்டாயப்படுத்தி வெளியே தள்ளப்பட்டார்கள். நவீன நாகரிக உலகம் என்று அழைக்கப்படும் இந்த உலகத்தில்தான் இது நடைபெற்றது.
ஸ்ரீலங்காவின் வடபகுதியிலுள்ள யாருக்கும் தீங்கிளைக்காத அப்பாவி முஸ்லிம்கள் மீதுதான் ஒருவகையான காட்டுமிராண்டித்தனம் எல்.ரீ.ரீ.ஈ யினால் திணிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்டம் என்ற பெயரின்கீழ்தான் இது நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட இந்த அப்பாவி மக்களின் தாங்கமுடியாத துன்பங்களையும் மற்றும் கஷ்டங்களையும் கூறும் உருக்கமான உண்மை வரலாறுகள் மற்றும் கதைகள் யாவும் நிபுணத்துவம் வாய்ந்த வகையில் இன்னமும் ஆவணப்படுத்தப் படவில்லை. உண்மையில் இந்த அப்பாவி மக்களின் கடும் சோதனைகளை ஆவணப்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, இருந்தாலும் பாதிப்புக்கு உள்ளான இந்த அப்பாவிகளின் கதறல், ஸ்ரீலங்கா அரசியல்வாதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரின் காதுகளுக்கும் மற்றும் இதயங்களுக்கும் இன்னமும் எட்டவில்லை. இந்த தீவின் அநேக பகுதிகளில் இந்த மக்கள் இன்னமும் இடம் பெயர்ந்தவர்களாகவே வாழும்படி விதிக்கப்பட்டுள்ளது.
விரும்பியோ அல்லது விரும்பாமலோ இந்த மக்களில் சிலரின் சோதனைகளையும் வேதனைகளையும் காணவேண்டிய விதி எனக்கும் நேர்ந்துள்ளது. 1990களில் இந்த சோதனைக்கதை கட்டவிழ்த்து விடப்பட்ட சமயத்தில் எனக்கு புத்தளத்தில் இருக்கவேண்டி நேர்ந்தது. வீசிய கையும் வெறுங்கையுமாக, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் எதுவுமின்றி புத்தளத்துக்கு வந்து சேர்ந்த இந்த மக்களின் துயரங்களை என்னால் காணநேர்ந்தது. அவர்களில் சிலர் நூற்றுக்கணக்கான மைல் தூரம் நடந்தே வந்திருந்தார்கள். சிலர் பசியுடன் வெறும் வயிறாக வந்திருந்தார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட வேதனைகளாலும், துயரங்களாலும் அதிர்ச்சி அடைந்திருந்தார்கள். அவர்களில் சிலர் சுகவீனமுற்றவர்களாகவும் மற்றும் துயரத்தினாலும் மனவுறுத்தலினாலும் பாதிப்படைந்தும் இருந்தார்கள்.இந்த கடும் அதிர்ச்சியான சோதனைகளுக்கும்; மற்றும் கலக்கத்துக்கும ஸ்ரீலங்காவில் வாழும் முழு முஸ்லிம் சமூகமும் சாட்சியாக இருந்தது.
முஸ்லிம் சமூகம் இந்த அப்பாவி மக்களுக்கு ஆறதல் வழங்க முயற்சித்தது, இருந்தாலும் இந்த துன்பத்தின் அளவு மிகப் பெரிதானதாகவும் மற்றும் மனிதர்களால் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. புத்தளம் மற்றும் அதன் சுற்றாடலில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் இவர்களுக்கு இந்த அவசர நெருக்கடி நேரத்திற்கு தேவையான உதவிகளைச் செய்ததை நான் சொல்லியே ஆகவேண்டும். பூமியில் வாழும் எந்த ஒரு மானிட ஜென்மமும் இப்படியான துன்பங்களுக்கு உள்ளாகக் கூடாது என நான் எண்ணுகிறேன். உண்மையில் அது ஒரு பரிதாபகரமான நிலமை. இந்த மக்கள் அனுபவித்த சோதனையை எழுதுவதென்றால் என்னால் அதை பல தொகுதிகளாக எழுதமுடியும்.
கடந்த 23 வருடங்களாக அவர்கள் வாழ்வின் பல அம்சங்களிலும் அவர்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்துள்ளார்கள். அவர்கள் வறுமையில் வாடினார்கள். அவர்களுக்கு தங்கள் குடும்பத்துடன் வசிப்பதற்கு ஏற்றதான நல்ல இல்லிடம் கிடைக்கவில்லை. அவர்களால் அவர்கள் குழந்தைகளை உரியமுறையில் படிப்பிக்க முடியவில்லை. அவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புகள் கிட்டவில்லை. அவர்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி இருந்தது. இந்த இடம்பெயர்ந்த இடங்களில் அவர்களால் ஒரு கௌரவமான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. அவர்களுக்கு நடந்தது ஒரு வரலாற்று கணக்கு, இன்னும் அதிலிருந்து பாடம் கற்பதற்காக நாங்கள் அவைகளை பதிவு செய்தல் வேண்டும்.
Najeefa Mohamed
இன்று மிகவும் முக்கியமானது கடந்தகாலம் அல்ல, ஆனால் இந்த மக்களின் இன்றைய நிலமைதான் மிகவும் முக்கியமானது. 23 வருடங்களாக இன்னல்களை அனுபவித்த பிறகும் இந்த மக்கள் இன்னும் தங்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்படவில்லை மற்றும் இன்னமும் இடம்பெயர்ந்த மக்களாகவே வாழவேண்டியுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ யின் தோல்விக்குப் பிறகுகூட இந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. இந்த மக்களில் சிலர் ஏற்கனவே தங்கள் சொந்த இடங்களுக்கு சென்றுவிட்டார்கள் என்பது உண்மைதான், இருந்தாலும் அவர்களில் அநேகர் பல இடங்களிலும் உள்ளக இடம் பெயர்ந்தோர்களாகவே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் சொந்த இடங்களுக்கு சென்றுள்ள இவர்களில் பலர் தங்கள் சொந்தச் செலவிலேயே அங்கு சென்றார்கள்.
ஆட்சியிலுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்த மக்களைப் பொறுத்தவரை தங்கள் அரசியல் மற்றும் தார்மீகப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பெருமளவில் தவறிவிட்டது என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். நாங்கள் விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா அரசாங்கங்கள் யாவும் இந்த மக்களை தங்கள் சொந்த ஸ்ரீலங்காவாசிகள் மற்றும் பிரஜைகளைப்போல நடத்தவில்லை என்பதை இங்கு நாங்கள் வலியுறுத்திக் கூறவேண்டும். இதுதான் உண்மையான காரணமும் அதேபோல ஒரு கசப்பான உண்மையும் கூட. இந்த வரலாற்று தவறை திரிபு படுத்த யாரும் முயலக்கூடாது.
ஸ்ரீலங்கா ஒரு ஜனநாயக நாடு மற்றும் அதன் அரசியலமைப்பு சகலருக்கும் சமமான உரிமையை வழங்கியுள்ளது. நீங்கள் தமிழ் சமூகத்திலிருந்து வந்தவரானாலும் சரி, அல்லது சிங்கள சமூகத்திலிருந்து வந்தவரானாலும் சரி, அரசியலமைப்பில் கூறப்பட்டதன்படி உங்களுக்கு சம உரிமை இருக்கவேண்டும். ஒவ்வொரு ஸ்ரீலங்காவாசியும் தனது கடின உழைப்பு மற்றும் சம்பாத்தியம் என்பனவற்றின் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு தனது பங்களிப்பை வழங்குகிறான். இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகமும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மற்றும் அபிவிருத்திக்கும் தனது பங்களிப்பை செய்கிறது. இந்த நாட்டிலுள்ள எந்த ஒரு சமூகத்துக்கோ அல்லது எந்தவொரு தனிப்பட்டவருக்கோ எதிரான பாகுபாடு காட்டப்படுவதை நியாயப்படுத்த முடியாது. இந்த நாட்டில் ஒரு சமூகத்தை ஒதுக்கிவிட்டு மற்றொரு சமூகத்துக்கு சாதகமாக நடப்பது அநீதியான செயல். இருந்தும் வடபகுதி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயத்தில் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்வதற்கு பதவியிலுள்ள ஸ்ரீலங்கா அதிகாரிகள் தவறிவிட்டார்கள்? ஏன் அவர்களுக்கு எதிரான இந்த வெளிப்படையான பாகுபாடு? சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் சமூக சேவைகள் திணைக்களம் என்பன சிலநேரங்களில் இந்த மக்களுக்கு சில உணவுப் பங்கீடுகளை வழங்கியுள்ளன என்பது உண்மைதான், இருந்தும் அரசாங்கத்தின் செலவில் அவர்கள் மீள் குடியேற்றப்படவில்லை.
சிலவேளை இந்த மாதிரியான ஒரு சோகம் ஸ்ரீலங்காவின் சில பகுதியிலுள்ள சில சிங்களக் கிராமங்களுக்கு நடந்திருக்குமானால், ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களின் பிரதிபலிப்பு எப்படியாக இருந்திருக்கும்? சில வருடங்களுக்குள்ளேயே பாதிக்கப்பட்ட மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை அவர்கள் எடுத்திருப்பார்கள். இன்று வடபகுதி முஸ்லிம்கள் துன்பப்படுவதைப்போல 23 வருடங்கள் அவர்கள் துன்பப்பட நேர்ந்திருக்குமா?
இன்னும் அதிகமாகச் சொல்வதானால் இன்று பாராளுமன்றத்தில் 18க்கும் மேற்பட்ட முஸ்லிம் அங்கத்தவர்கள் உள்ளனர், இருந்தும் இந்த மக்களுக்கான தார்மீக மற்றும் மதப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவர்கள்கூடத் தவறிவிட்டார்கள்? இந்த மக்களுக்கு உதவுவதற்கு அவர்கள் போதுமானவற்றை செய்யவில்லை. இந்த மக்கள் க~;டப்படும் சமயத்தில் அவர்கள் இந்த மக்களுக்கு உதவிசெய்யவில்லை.இந்த மக்களின் துயரங்களை புரிந்துகொள்ள அவர்கள் பெருமளவு தவறிவிட்டார்கள். இந்த மக்களின் சவால்களையும் பிரச்சினைகளையும் அடையாளம் காண அவர்கள் தவறிவிட்டார்கள். இந்த மக்களுக்கு உதவுவதற்கு ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை இணங்கவைக்க அவர்களால் முடியவில்லை.
adul Gafforஇந்த முஸ்லிம் அரசியல்வாதிகளில் ஒரு சிலரைத் தவிர, ஏனையோர் சுயநலவாதிகளும் மற்றும் எங்கள் சமூகத்துக்கு உதவிசெய்ய தகுதியற்றவர்களும் ஆவார்கள். இந்த விடயத்தைப் பற்றி பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக விவாதிப்பதற்குக்கூட அவர்கள் தவறிவிட்டார்கள். சில தமிழ் தலைவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் செயல்பாடுகளை கண்டனம் செய்ததுடன் வடபகுதி முஸ்லிம்களை தங்கள் சொந்த இடங்களுக்கு வரும்படி வரவேற்றதை நான் பெரிதும் பாராட்டவேண்டும், இருந்தும் எங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த தமிழ் அரசியல்வாதிகளின் நல்லெண்ண சமிக்ஞையை பாராட்டத் தவறிவிட்டார்கள். அதிகம் என்ன சர்வதேச முஸ்லிம் சமூகம்கூட இந்த விடயத்தில் பெரிதும் தவறிழைத்துள்ளது? இஸ்லாம், சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவ விசுவாசத்தைப் பற்றி உபதேசித்த போதும்கூட, எந்தவொரு முஸ்லிம் நாடோ அல்லது சர்வதேச இஸ்லாமிய அமைப்போ இந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு உதவ முன்வரவில்லை.
மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கமாவது தங்கள் கண்களை திறந்து, இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக ஆக்கபூர்வமான ஏதாவது செய்வதற்கு முன்வரவேண்டும். இந்த அரசாங்கம் நியாயமான முறையில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க விரும்பினால் அது பக்கச்சார்பு மற்றும் பாரபட்சம் அற்ற முறையில் சிறுபான்மை சமூகங்களுக்கு உதவவேண்டும். எவ்வளவு காலத்துக்கு இந்த அரசாங்கம் இரண்டு வேறுபட்ட முகங்களுடன் நடிக்க முடியும், விரைவிலேயே காலம் அதை நமக்கு உணர்த்திவிடும். தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
.jpg)
Post a Comment