Header Ads



வட மாகாண தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி ஒரு முதலீடாக மாற்றப் போகிறார் - ஹரீஸ்

(ஏ.எல்.ஜுனைதீன்)

  நடைபெற்று முடிந்துள்ள வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி எதிர்காலத்தில் ஒரு முதலீடாக மாற்றப் போகின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சக்தி தொலைக் காட்சியில் இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இப்படிக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,

 அது எப்படியென்றால் ஜனாதிபதி சொல்லப்போகின்றார் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது தமிழ் தேசியத்திற்காக தமிழ் இனத்திற்காக ஆகக் கூடுதலாக பெரும்பான்மைக்கும் மேலாக ஒற்றுமைப்பட்டிருக்கின்றார்கள் என்றால் ஏன் தெற்கில் உள்ள சிங்கள மக்கள் இப்படியான பெரும்பான்மை ஆதரவைத் தரமுடியாது. சகோதரர் விக்னேஸ்வரன் முதலமைச்சராக வருகின்றபொழுது ஏற்கனவே கூறியிருக்கின்றார் வடக்கிலிருந்து இராணுவத்தைக் குறைப்புச் செய்வேன். பொலிஸ் அதிகாரத்தை அமுல்படுத்துவேன் காணி அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவேன். இவ்வாறு அமுல்படுத்துவதற்கு அவர் முயற்சிக்கின்றபோது தெற்கில் வேறு ஒரு பதில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் ஜனாதிபதிக்கு ஒரு இக்கட்டான நிலை ஏற்படும் இந்நிலைமையில் ஜனாதிபதி வடக்கிலுள்ள தமிழ் மக்கள், தமிழ் தேசியத்திற்காக ஒற்றுமைப்பட்டிருப்பது போல் இந்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எனக்கு பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் என மக்களிடம் கேட்பதற்கு ஒரு வாய்ப்பாக ஜனாதிபதி முதலீடாக மாற்றுவதற்கு வடக்கின் தேர்தல் வெற்றி இருக்கின்றது. மேலும் சிறுபான்மையினரின் அரசியலைச் சிக்கலாக்கின்ற விடயமாகவும் இது அமையலாம்.

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு  நடைபெற்று முடிந்துள்ள தேர்தலை நோக்கும்போது எங்களுக்கு அமோக வெற்றி என்றுதான்  கூற வேண்டும். ஏனெனில் இத் தேர்தலை ஆய்வு ரீதியாக  எடுத்துப் பார்த்தால்  அதாவது கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் குறிப்பாக குருநாகலில் இரண்டு  ஆசனங்கள் புத்தளத்தில் ஒரு ஆசனம் உண்மையில் கடந்த முறை குருநாகலில் இரண்டு ஆசனம் என்பது நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனைந்து அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டதன் மூலம்  கிடைத்த ஆசனங்கள். அதேபோன்றுதான் புத்தளத்திலும் அதேயொரு ஆசனம். கண்டியிலும் ஒரு ஆசனம். ஆனால் இந்த மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தமட்டில் மறைந்த பெருந்தலைவருக்குப் பின்பு கூடுதலான மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட்ட தேர்தல் இதுதான் என்று கூற முடியும்.

  சந்திரிக்காவின் ஆட்சி காலத்தில் மறைந்த தலைவர் அரசாங்கத்தில் இருந்து கொண்டு பல மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட்டிருந்தார். குறிப்பாக அந்த தேர்தலில் கண்டியில் ஆசனம் எதுவும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதே போன்று குருநாகலில் கொழும்பில் கூட பெற முடியவில்லை. களுத்துறையில் மட்டும் 7 ஆயிரம் வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டோம். ஆனால் அந்தக் கால கட்டத்தில் இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைக்கள் பள்ளிவாசல்கள் உடைப்பு மற்றும் இனவாத பிரச்சாரங்கள் இல்லாத பொழுதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை குறிப்பாக வடக்கு கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்கள் அன்று நிராகரித்து விட்டனர். இருந்தும் இன்றைய நிலைமையை பார்க்கின்றபோது கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கின்ற அதே நேரம் அரசாங்கம் சார்ந்த அதன் பின்னணியிலுள்ள சிஹல உருமய போன்ற சில அமைப்புக்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஹலால் போன்ற விடயங்களில் இனவாதப்பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது.

   ஆட்சியாளர்கள் இதனைக் கட்டுப்படுத்தவில்லை. இந்தக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற பலமான குற்றச் சாட்டும் கோபமும் விமர்சனப் பார்வை இருந்தும் கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை விட்டு வெளியேறாமல் அரசாங்கத்தில் இருந்து கொண்டே இந்த மாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டது. இவ்வாறு எதிர் கொண்ட ஒரு நிலைமையில் எல்லோரும் அச்சப்பட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்கள் அதிலும் பெண்கள் தமது ஆத்திரத்தை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்கு  ஆதரவாக வாக்களித்திருப்பார்கள். ஆனால் நிலைமையை நாம் பார்க்கின்ற பொழுது கண்டி மாவட்டத்தில் காத்திரமான ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றோம். அதே போன்று குருநாகல் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றோம். அதேபோன்று புத்தளம் மாவட்டத்திலும் ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றோம். அதைவிட விசேஷமாக வடமாகாணத்தில் குறிப்பாக  அமைச்சர் றிஷாத் பதியுதீனின் சொந்த மாவட்டமான மன்னார் மாவட்டத்தில் அவருக்கு ஒரு ஆசனம் எங்களுக்கு ஒரு ஆசனம்.

  இவைகளை ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது குறிப்பாக இந்த தேர்தல் முடிவுகள் எமது கட்சியின் தேவையை  தென்னிலங்கையிலுள்ள முஸ்லிம்கள் உணர்ந்து வாக்களித்து வெற்றியடையச் செய்திருக்கிறார்கள். எங்களுடய வாக்குகளை யாரும் வீழ்ச்சி அடையச் செய்திருக்கிறார்கள்  என்று தெரியவில்லை. இத் தேர்தலில் முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு கண்டியிலும் குருநாகலிலும் வாக்களித்திருக்கிறார்கள்.

  நடைபெற்று முடிந்துள்ள  மாகாண சபைகளுக்கான  தேர்தல் முடிவுகளைப் பொறுத்தமட்டில் தமிழர் கூட்டமைப்பு  பெரும்பான்மைக்கும் மேலாக 30 ஆசனங்களைப் பெற்றிருப்பதால் நிச்சயமாக அவர்களுக்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதவி தேவை என்ற அவசியம் கிடையாது.

  வட மாகாண ஆட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பங்கு கொள்வதா என்பது குறித்து கூட்டமைப்புக்கு ஒரு தேவைப்பாடான விடயமாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் வட மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம்  போன்ற நலன்கள் சம்மந்தமாக  அச்சபையில் அவர்களுடன் ஒரு நல்லுறவு அடிப்படையில் செயல்படுவோம். இதணை தேர்தல் பிரச்சார காலத்திலும் கூறியிருக்கின்றோம். எங்களின் இந்நல்லுறவு தொடர்ந்து நடைபெறும். ஆனால் நடைபெற்றுள்ள இத்தேர்தலை மட்டும் மையமாக வைத்து முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பாகக் கூறும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

1 comment:

  1. விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்கிறார்.

    தம்பி ஹாரிஸ் இப்படியெல்லாம் கணக்கு பார்த்து உங்களதும் உங்கள் தலைமைத்துவத்தினதும் தோல்வியை சரி செய்ய முயற்சிக்காதீர்கள். முஸ்லிம் வாக்காளர்களது வீதத்துக்கு ஏற்ப முஸ்லிம் காங்கிரசுக்கு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதா? என்று தான் நீங்கள் பார்க்க வேண்டும்.

    சுயநல அரசியலை விட்டுவிட்டு முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும், போராடும் அரசியலை முன்னெடுங்கள். அப்போதுதான் அனைத்து மக்களும் ஒருமித்து முஸ்லிம் காங்கிரசை ஆதரிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.