Header Ads



இந்நாட்டு முஸ்லிம்களுக்குரிய அரசியல் சக்தி முஸ்லிம் காங்கிரஸ்தான் - ரவூப் ஹக்கீம்

நடந்து முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தலில் வடக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றதையிட்டு பாராட்டு தெரிவிப்பதோடு மூன்று சபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி நிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கு வாக்களித்தவர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான  ரவூப் ஹக்கீம்  மனப்பூர்வமான நன்றி தெரிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட மாகாண சபையில் சபையில் தமது கட்சி தனித்துவக்குரலாக ஒலிக்கும் என உறுதியாகக் கூறியது உண்மையாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளிவந்த பின்னர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த நீதியமைச்சர் பதவியை வகித்து வரும் எனது தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தனது மரச்சின்னத்தில் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்தன் ஊடாக, நாம் மூன்று மாகாண சபைகளிலும் வெற்றி பெற்று நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என்பதை நிரூபித்ததற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சியடைவார் என நம்புகின்றேன்.

முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகக் கூறிக்கொள்ளும் ஏனைய கட்சிகள் வேறு பிரதான கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்யும் போது துணிச்சலுடனும், முதுகெலும்புடனும் தேர்தல்களில் எமது மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறுவதையிட்டு கட்சியின் தொண்டர்களும், ஆதரவாளர்களும் பேருவகையும், பெருமிதமும் அடைகின்றனர்.

இந்நாட்டு முஸ்லிம்களுக்குரிய அரசியல் சக்தி முஸ்லிம் காங்கிரஸ் தான் என்பதை மீண்டுமொருமுறை எமது வாக்களப் பெருமக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

வட மாகாண சபை தேர்தலில் வன்னி அரசியல் வாதியொருவரினாலும், அவரது அடிவருடிகளிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும், அடாவடித்தனங்களுக்கும் மத்தியில் எமது வாக்காளர்கள் தங்களது பெறுமதியான வாக்குகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கியிருக்கின்றனர்.

அத்துடன் ஜனாதிபதி, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து வடமாகாண சபை தேர்தலை நடாத்த நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதோடு, மூன்று மாகாணங்களிலும் இயன்றவரை தேர்தலை சுமூகமாக நடாத்துவதற்கு உதவிய தேர்தல்கள் ஆணையாளர், பிரதி ஆணையாளர், தெரிவட்தாட்சி அதிகாரிகள், அரச ஊழியர்கள், பொலிசார் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரப்பணிகளுக்காக மூன்று மாகாணங்களிலும் இரவு, பகல் பாராது அயராது பணியற்றிய எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சித் தொண்டாகள் அனைவருக்கும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாhபில் விசேடமாக நன்றி தெரிவிக்கின்றேன்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர்  ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கான தனித்துவக்கட்சியாக உருவாக்கப்பட்ட உங்களது கட்சியின் குரல், வட மாகாண சபையில் மாத்திரம்தான் தனித்துவமாக ஒலிக்குமா? கிழக்கில் அரசாங்கத்துடன் சேர்ந்து ஒலிக்கின்றதே...?

    தேர்தல் காலத்தில் மஙிந்தரின் ஆட்சியில் இனவாதம், மதவாதம் இடம்பெறுவதாகப் பிரச்சாரம் செய்த உங்களின் நாவு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட கையோடு அவரது அரசாங்கத்தின் 'ஜனநாயகம்' பற்றி துதி பாடத் தொடங்கிவிட்டதே..! இது நாம் எதிர்பார்த்ததுதான்!!

    நீங்கள் மரச் சின்னத்தில் துணிச்சலாகவும், முதுகெலும்புடனும் தேர்தலில் போட்டியிட்டாலும், இப்போதும் பிரதான கட்சியின் முதுகில் சவாரி செய்து கொண்டுதான் அமைச்சராக நீங்களும் பிரகாசிக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

    'இந்நாட்டு முஸ்லிம்களுக்கான அரசியல் சக்தி' என்பதை, 'அரசியல் சகதி' என்று திருத்திக் கொள்வது நன்று. அதுவே பொருத்தமும் கூட!

    தேர்தல் பிரச்சாரக் காலத்தில் 'சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கமைய வட மாகாண தேர்தலை அரசாங்கம் நடாத்துகின்றது' எனக் கூறிய நீங்கள், இப்போது எப்படி 'ஜனாதிபதி தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கும், உரிமைக்கும் மதிப்பளித்து வட மாகாண சபைத் தேர்தலை நடாத்தியதற்காக அவருக்கு நன்றி கூறி' நாக்குப் பிரட்ட முடியும்?

    தேர்தல் முடிவடைந்ததும் பிரச்சார நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தாத கட்சிப் போராளிகளுக்கும், பொறுப்புக்களைச் சுமந்தவர்களுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற உங்களின் கூற்றுக்கமைவாக அடுத்த கட்ட நடவடிக்கையை ஆர்வத்துடன்எதிர்பார்த்துள்ளேன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. இவரது பேச்சில் ஒரு விடயத்தைக் கூர்ந்து கவனியுங்கள்...

    இவர்கள் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் இந்த நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என்பதை நிரூபித்துள்ளதாகவும், அதனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சியடைவார் என நம்புவதாகவும் கூறுகிறார்.ஏன்..வேரு சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் அல்லது தேர்தலில் தோற்றிருந்தால் ஜனாதிபதி ஆறாத் துயரத்துள் ஆழ்ந்திருப்பாரோ...?

    தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து வட மாகாண சபைத் தேர்தலை நடாத்த நடவடிக்கை மேற்கொண்டதற்காக இவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறார்.ஆஹா..ஆஹா..என்ன ஒரு வசனம்...! என்ன ஒரு புரட்டு....! என்னே ஒரு நடிப்பு...!!!

    ஐயா சாமியோவ்...! அந்தர் பல்டி அடிப்பது எப்படி என்று உங்களிடம் டியூஷன் எடுப்பதற்கு, பீஸ் எவ்வளவய்யா...?

    ReplyDelete
  3. தலைவா தேர்தலில் வெற்றி அடைந்துள்ளோம் என்று சொல்ல எப்படி உங்களுக்கு மனம் வந்தது?குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்ட வில்லை எனபதை போல் இருக்கு உங்கள் பேச்சு.கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலை பார்த்த நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் மீள்எழுச்சி பெற்றுவிடும் என்று நம்பினோம் ஆனால் மு.காங்கிரஸ் மீண்டும் அரசிடம் சரணாகதி அரசியலை செய்து நாங்கள் மற்றைய முஸ்லிம் தலைவர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல எனறு நிருபித்துக்கொண்டிருக்கின்றது.உங்களது தோல்வி இன்று புத்தளத்தில் ஆரம்பித்துள்ளது அது மெல்ல மெல்ல மட்டக்களப்பு வழியாக பொத்துவிலை சென்றடைய முன்அதுக்குரிய காரணிகளை தேடி திருத்திக் கொள்ளாவிட்டால் நாளை மு.கா இருந்த தடயம் கூட இல்லாமல் போய் விடும்.

    ReplyDelete

Powered by Blogger.