Header Ads



நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட வேண்டும் - ரவூப் ஹக்கீம்

(டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்)

தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட வேண்டும். அதனையே தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் முடிவுகள் எவற்றை உணர்த்துகின்றன என்பது பற்றி திங்கள் கிழமை (23)    ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனை வலியுறுத்தினார்.  அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

இரண்டரை தசாப்த காலத்திற்கு பின்னர் வடபுலத்து மக்கள் மாகாண சபை தேர்தல் ஒன்றில் தமது வாக்குரிமையை வரலாறு காணாத வகையில் பிரயோகித்திருப்பது முழு இலங்கை நாட்டுக்கும் மாபெரும் வெற்றியாகும். ஜனநாயக மரபுகளை பேணி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளின்பால் இந் நாட்டின் கவனம் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பன்மைத்துவ ஜனநாயகம் நிலவும் ஒன்றுபட்ட இலங்கையொன்றை காண்பதற்கே எல்லோரும் ஆவலாக இருக்கிறார்கள். வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தெற்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் பெரு வெற்றியீட்டியுள்ள சூழ்நிலையில், இருபெரும் அரசியல்  சக்திகளும் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளை கலைந்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பது இன்றியமையாதது. நாட்டு மக்கள் அனைவரினதும் விமோசனத்தை நோக்கிய இந்த பயணத்தில் முற்றுமுழுதாக இணைந்து கொள்ளுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்பொழுதும் தயாராக இருக்கிறது.

வடக்கில் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலில் வழங்கியுள்ள ஆணை மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் இருந்து பிரிந்து நின்று முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்தமை என்பன ஒரே செய்தியைத்தான்  தெரிவிக்கின்றது.  இது இன, மத குழுக்களுக்கிடையில் நிலவும் வேறுபாடுகளுக்குத் தீர்வு காண்பதை பொறுத்தவரை இந் நாட்டின் சிறுபான்மை மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொண்டிருந்த நம்பிக்கை குறைந்துகொண்டு போவதையே எடுத்துக்காட்டுகின்றது.

ஆகையால் அரசாங்கம் இதனை முக்கியமாக கவனத்தில் எடுத்து தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்புக்கு நாட்டில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு கிடைத்திருப்பது போன்றே, ஒரே தலைவிதியை பகிர்ந்துகொள்ள வேண்டிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கும் மதிப்பளிக்க வேண்டிய அரசாங்கத்தின் கடப்பாடு ஆகும். அரசாங்க கட்சிகளின் கூட்டுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர் சுட்டிக்காட்டுவதை போன்றே அதுவொரு ஐக்கியமானதும், சுதந்தரமானதுமான கூட்டமைப்பாக திகழ வேண்டியது அவசியமாகும்.

அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணங்களின் அபிவிருத்தி என்பன குறித்து 13 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் உத்தரவாதமளிக்கப்பட்டபடி அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்க முடியாத மிகவும் உறுதியான நிலைப்பாட்டிலேயே  தொடர்ந்தும் இருந்து வருகின்றது. 

1 comment:

Powered by Blogger.