Header Ads



ஒசாமா பின்லேடன் போல் உள்ளதாக கூறி, பேராசிரியர் மீது தாக்குதல்

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பேராசிரியரை, ஒசாமா பின்லேடன் போல் உள்ளதாக கூறி, மர்ம கும்பல் தாக்கியது. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வெளியுறவு துறை பேராசிரியராக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் பிரப்ஜோத்சிங் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு ஹர்லோம் அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்தது. ‘நீ ஒசாமா பின்லேடன் போல் இருக்கிறாய்? நீ தீவிரவாதியா’ என கேட்டு, அவரை சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பற்கள் உடைந்தன. 

படுகாயமடைந்த பிரப்ஜோத்சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, அவரது நண்பரும், பிஎச்டி ஆய்வாளருமான சிம்ரன்ஜித் சிங் இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி மூலம் இது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க வாழ் சீக்கியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மளிகைக் கடை நடத்தி வந்த 2 சீக்கியர்களை சிலர் சுட்டுக்கொன்றனர். அமெரிக்காவில் தொடர்ந்து சீக்கியர்கள் தாக்கப்பட்டு  வருவது குறிப்பிடத்தக்கது. பிரப்ஜோத்சிங் தாக்கப்பட்டது குறித்து நியூயார்க் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.