தனி நபர்களை வைத்து பேரம் பேசக் கூடாது - இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை
தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், சிறிலங்காவுடனான உறவு பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்.
தமிழ்நாட்டு மீனவர்கள், சிறிலங்கா கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவது தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவனயீர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்துக்கு, பதிலளிக்கும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் அவர்,
“சிறிலங்கா சிறைகளில் தற்போது 106 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பிரச்சினையை சிறிலங்கா அரசு மனிதாபிமான அடிப்படையில் கையாண்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இந்திய மீனவர்களின் பிரச்சினை உணர்ச்சிபூர்வமானது. இந்திய அரசியல், சமூகத்துடன் தொடர்புள்ளது என்பதால், மக்கள் இதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
எனவே, இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாது போனால், சிறிலங்காவுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படும். இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றுக்கு இந்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மீனவர்களுக்கு எதிராக பலப்பிரயோகம் செய்வதை எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதை இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
சிறிலங்கா சிறைகளில் உள்ள 106 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய, மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீதிமன்றம் மூலமும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வடக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக இவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பிறநாட்டு மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சிறிலங்கா அரசு நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதே இதற்கு காரணம் என்று எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்திய சிறைகளில் சிறிலங்கா மீனவர்கள் ஒருவர் கூட கிடையாது. இதை எமது பலவீனமாக கருதக்கூடாது.
இந்தியாவின் நேர்மையான நடவடிக்கையாகவும், ஒவ்வொருவரையும் இதுபோல்தான் அரசுகள் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் எடுத்து கொள்ள வேண்டும். தனி நபர்களை வைத்து பேரம் பேசக் கூடாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மனிதாபிமானம் இல்லாத ஒரு நாடு.
ReplyDelete