பொது எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து 'கருத்தொருமித்த மக்கள் உடன்படிக்கை'
(ஏ.எல்.ஜுனைதீன்)
பொது எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து 'கருத்தொருமித்த மக்கள் உடன்படிக்கை' (சமகி) என்ற தலைப்பின் கீழ் 10 இணக்கப்பாட்டு கோரிக்கைகளில் கைச்சாத்திட்டு அரசிடம் முன்வைத்துள்ளன.
கொழும்பு பொது நூலகத்தில் நேற்று (2013.08.22 ஆம் திகதி ) வியாழக்கிழமை மாலை ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய ஐக்கிய முன்னணி, மெளபிம மக்கள் கட்சி, நவசமசமாஜக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற பல முக்கிய அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் ஒன்றிணைந்து நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், 18 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குதல், சகல இன மக்களுக்கும் சம உரிமை வழங்கல் உள்ளிட்ட இந்த 10 இணக்கப்பாட்டு கோரிக்கைகளில் கைச்சாத்திட்டன.
பொது எதிரணியின் 10 இணக்கப்பாட்டு கோரிக்கைகள் விவரம் வருமாறு,
1. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும் பிரதமரையும், அமைச்சரவைகளையும் உருவாக்குதல்.
2. 18 ஆவது திருத்தத்தை ஒழித்து 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் நிறைவேற்றுவதன் மூலம் அரச நிருவனங்களில் சுயாதீனத் தன்மையைப் பலப்படுத்தல்.
3. இலங்கையை தாய் நாடாகக் கொண்ட சகல இன சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களது தனித்தன்மையை பேணுதல்.
4. விருப்பு வாக்கு முறையை ஒழித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பலப்படுத்தல்.
5. தகவல் அறியும் உரிமையை உறிதிப்படுத்தல் மற்றும் பேச்சுரிமை கருத்துக்களை வெளியிடும் உரிமையை பாதுகாத்தல்.
6. சட்டம் மற்றும் நீதி மன்றங்களில் சுயாதீனத்தை மீண்டும் நிலைநிறுத்தல்.
7. வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டங்களைப் பலப்படுத்தல் மற்றும் செயற்படுத்தல்.
8. இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உட்பட நலன்புரி.
9. சமூக முறையை பாதுகாத்தல், பலப்படுத்தல்.
10. ஆட்சியாளர்களின் இலாபத்துக்கல்லாத உண்மையான மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை அறிமுகப்படுத்தல். முறையான நிர்வாகத்தை மீள நிலைநிறுத்துவதற்கு ஆரம்ப நடவடிக்கையாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதன் மூலம் சகல மக்களினதும் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தி நாட்டின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாத்தல்.
.jpg)
Post a Comment