வன்னி மாவட்டம் முழுவதும் மின்சாரம் - பவித்திராவுடன் அமைச்சர் றிசாத் பேச்சு
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வன்னி மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத பிரதேசங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சி வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனிடம் தெரிவித்துள்ளார்.
இன்று 02-08-2013 மாலை அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சியினை அவரது அமைச்சில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தியின் போது மேற்கண்டவாறு கூறினார்.
முல்லைத்தீவு,வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் தற்போது மீள்குடியேற்றப் பணிகள் நடை பெற்றுவருவதாகவும்,இம்மக்களின் அடிப்படை தேவையான மின்சாரத்தை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சியிடம் கேட்டுக் கொண்டார்.
இம்மக்களின் மீள்குடியேற்றம்,மற்றும் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் என்பனவற்றினை நடை முறைக்கு கொண்டுவர இந்த மின்சாரத்தின் அவசியத்தையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வலியுறுத்தினார்.
அதே வேளை 200 மில்லியன் ரூபாய்களை மின்சக்தி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு உடன் மின்சாரம் வழங்க தேவையான பணிப்புரைகளை பிராந்திய மின் சக்தி அதிகாரிகளுக்கு அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சி உடனடியாக தொலைபேசி மூலம் வழங்கினார்.மின்சாரம் வழங்கப்பட்டுள்ள கிராமங்களில் வீடுகளுக்கான மின்சார இணைப்பு வழங்கப்படுவதில் காணப்படும் தாமதம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கும் கலந்து கொண்டார்.

ரைட்! செய்தி வந்தாயிற்று.
ReplyDeleteஇனி மின்சாரம் இல்லாத ஊர்களுக்கெல்லாம் மின்சார சபை ஜீப்புகளில் அதிகாரிகள் வந்து மக்கள் கண்களில் படும் வகையில் நடமாடுவார்கள். கணக்கெடுப்புக்களை நடாத்துவார்கள்.
இரண்டொரு தினங்களில் மீண்டும் வருவார்கள். மீண்டும் ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.
இதற்கிடையே அமைச்சரின் ஆதரவாளர்களும், வேட்பாளர்களும் ஊருக்குள் வந்து மின்சாரம் வரப்போகும் சுபச் செய்தியை வீடு வீடாகச் சொல்லி தமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்வார்கள்.
அமைச்சர் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இத்தனை மில்லியன் ரூபாவில் மக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் விட்டால் இவையனைத்தும் அப்படியே நின்று விடும். நீங்கள் காலமெல்லாம் இருட்டில்தான் இருக்க வேண்டும். எனவே எமது கைகளைப் பலப்படுத்துங்கள் என்றும் உள்ளார்ந்த அச்சுறுத்தலுடனான அன்பு வேண்டுகோளையும் விடுவார்கள்.
சில நாட்களில் ஆங்காங்கே மின்கம்பங்கள் சில கொண்டு வந்து இறக்கப்படும். மக்களின் நம்பிக்கை மேலும் உறுதியாக்கப்படும்.
வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னால் சில இடங்களில் மின் கம்பங்களை குழிகள் வெட்டியும் நிறுத்திக் காட்டுவார்கள்.
வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்ட பின் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைகள் கிடப்பில் போடப்படும்.
பின்னர் மக்கள்தான் மகஜர்கள், கோரிக்கைகள் என்று எழுதிக்கொண்டு அலைய வேண்டும்.
சில நேரம் இறக்கி வைத்த மின்கம்பங்களைக்கூட தேர்தலுக்குப் பின் மிண்டும் ஏற்றிக் கொண்டும் சென்று விடுவார்கள்.
இப்படியெல்லாம்தான் எமது பகுதிகளிலும் அமைச்சரின் வாரிசான மண்ணின் மைந்தன் அபிவிருத்தி மாயைகளை கடந்த 25 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றார்.
உரிமைகளை வென்றெடுக்க மர்ஹும் அஷ்ரப் அவர்களின் தலைமையில் அரசியலில் பிரவேசித்தவர்கள் இன்று அபிவிருத்திக்காக அயராது உழைக்கின்றனர்.
முஸ்லிம்கள் பல சேனாக்களால் அச்சுறுத்தப்பட்டு வரும் வேளையில் இத்தகைய அபிவிருத்திகளால் நிலையான சமாதானமும், நிம்தியும், ஏற்படுமா?
வடபுல மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என்றே நம்புகின்றேன்
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Yes people voted for this purpose only so you do your commitments please don't be limit with your word show it in practice?
ReplyDelete