சர்க்கரை வியாதியால் அல்லல்படும் மக்களுக்கு இனிப்பான செய்தி
உலகில், சர்க்கரை வியாதியால் அல்லல்படும் மக்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், உணவில் சேர்க்கப்படும் சர்க்கரைக்கு பதிலாக, புதிய மாற்றுப் பொருளை, அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவதி : உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் பிரதான பிரச்னையாக விளங்குவது, நீரிழிவு நோய். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், கிட்னியின் செயல்பாடு மெல்ல மெல்ல குறைந்து, பின் செயலிழக்கும் நிலையை அடைகிறது. இதனால், உணவில் அரிசியை குறைத்தும், காபி, டீ போன்றவற்றில், சர்க்கரையின் அளவை குறைத்தும், தன் இயல்பான உணவு முறைகளை மாற்றிக் கொண்டு, மக்கள் அவதியுறுகின்றனர். இதுகுறித்து, பல ஆண்டு ஆய்விற்குப் பின், தென் அமெரிக்க ஆய்வாளர்கள், சர்க்கரைக்கு மாற்றுப் பொருளை கண்டறிந்துள்ளனர். இந்த மாற்றுப் பொருளை பயன்படுத்துவதின் மூலம், சாதாரண சர்க்கரையில் பெறுவதைவிட, 300 மடங்கு அதிக இனிப்பு சுவையை பெற முடியும். மேலும், இதில், கலோரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தலாம்.
"ஸ்டெவியா' : "ஸ்டெவியா' எனும் தாவரத்திலிருந்து தாயாரிக்கப்படும், பொடியிலிருந்து, அதிகப்படியான இனிப்பு சுவை பெறப்படுவதை, தென் அமெரிக்க ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இந்த பொடியை பல ஆண்டுகளாக, தென் அமெரிக்க மக்கள் தங்கள் உணவுப் பொருட்களில் இனிப்பு சுவையைப் பெற பயன்படுத்தி வந்தாலும், ஆய்வாளர்களின் நிரூபணத்திற்குப் பின்னரே, பல நாடுகளை சேர்ந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும், சர்க்கரைக்கு பதிலாக, ஸ்டெவியாவை பயன்படுத்த, முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம், உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருப்பதால், இதைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக, அமெரிக்க உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையிலிருந்து கிடைக்கும் இனிப்பு சுவையை விட, 300 மடங்கு சுவை அதிகம் கிடைப்பதால், செலவும் குறையும் என, மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவை சேர்ந்த, குளிர்பான தயாரிப்பு நிறுவனமான, கோககோலா நிறுவனம், தன் தயாரிப்புகளில், இனிப்பு சுவைக்காக, ஸ்டெவியாவை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
குளிர்பானம் : இதன்படி, அந்நிறுவன தயாரிப்பான, ஸ்ப்ரைட் குளிர்பானத்தில், ஸ்டெவியாவை உபயோகிக்கும் பணியில், கோககோலா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கலோரிகள் அதிகம் இல்லாததாலும், சர்க்கரையின் அளவை குறைக்க முடிவதாலும், உலக மக்களிடையே, ஸ்டெவியாவின் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக, அமெரிக்க ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Post a Comment