கண் பார்வையற்றோர் காட்சிகளை காணும் வகையிலான அதிநவீன கருவி
காதில் பொருத்தப்படும், விசேஷ கருவியின் மூலம், கண் பார்வையற்றோரும், காட்சிகளை காணும் வகையிலான, அதிநவீன கருவியை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சி : கண் பார்வையற்றோரும் காட்சிகளை காணும் வகையிலான, கருவியை வடிவமைப்பதில், உலகின் பல நாடுகளை சேர்ந்த, ஆராச்சியாளர்களும், கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக, காட்சிப் பதிவுகளை, ஒளி அலைகளிலிருந்து, ஒலி அலைகளாக மாற்றம் செய்து, அதற்கான மொழியின் மூலம், அதை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றி, மூளைக்கு கொண்டு செல்லும், அதிநவீன கருவியை, ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதன் மூலம், பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் கூட, காதில் பொருத்தப்படும் விசேஷ கருவியின் உதவியுடன், காட்சிகளை காண முடியும் என, ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர், அமிர் அமேதி கூறியதாவது: கண் பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்த கருவி, காட்சிகளை ஒளி அலைகளின் அதிர்வுகளை உள்வாங்கி, அதை ஒலி அலைகளாக பதிவு செய்யும் தன்மை கொண்டது.
மாற்றம் : இந்த கருவிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில், "விஷூவல் வேர்டு பார்ம்' எனப்படும் காட்சிகளுக்கான, ஒளி மற்றும் ஒலியியல் மொழிகள் எழுதப்பட்டுள்ளன. எனவே, இவை, உள்வாங்கிய ஒளி அலைகளை, விஷூவல் வேர்டு பார்மில், ஒலி எழுத்துகளாக மாற்றி, மூளைக்கு அனுப்புகிறது.
மூளையில் உள்ள காட்சிப் பதிவுகளை அறியும் பகுதியில், இவை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றம் செய்யப்படுவதால், இந்த கருவியின் மூலம் பார்வையற்றோரும் காட்சிகளை காண முடியும்.
இந்த கருவியில் உள்ள, "சென்சரி சப்ஸ்டிடியூசன் டிவைஸ்கள்' ஒலி அலைகளின் மூலம் பதிவு செய்யப்படும் காட்சிப்பதிவுகளை, "விஷூவல் டூ ஆடியோ மற்றும் ஆடியோ டூ விஷூவல்' என்ற முறையில், காட்சியாக மாற்றம் செய்கிறது. இதற்கு "சவுன்டுஸ்கேப்' என்று பெயர். இந்த கருவியை பார்வையற்றோரிடம் பரிசோதனை செய்ததில், நல்ல பலன் கிடைத்துள்ளது. அவர்களால், காட்சிகளை தெளிவாக காண முடிகிறது. இந்த கருவியில், நிறை காட்சிகளுக்கு ஒலி வடிவம் கொடுத்து அதற்கான மொழியை எழுத வேண்டியுள்ளது.
வெற்றி
முதற்கட்ட ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளோம். இதற்கான முழு பணிகளும் முடிந்த பின், இந்த கருவியை வெற்றிகரமாக வெளியிடுவோம்.
இதன் மூலம், பார்வையற்றோரின் நீண்டநாள் கனவு நிறைவேறும். அவர்களும் காட்சிகளை கண்டு மகிழ முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment